Towards a just, equitable, humane and sustainable society

மாற்றம் ஒன்றே மாறாதது


 

மு. சாந்தகுமாரி

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 5 , பருவம் 1 பாடம் 1

எனது வகுப்பறையில் நான் கற்ற பாடம்

 

5 E பாடத்திட்டம்- ஒரு சவால்:

கோடை விடுமுறை முடிந்து, பள்ளி தொடங்கியது. பள்ளி முழுவதும் ‘5E பாடத்திட்டம்’ என்பதைப் பற்றி தான் பேச்சு. ஒரு பாடத்தை 5E முறைப்படி எவ்வாறு நடத்துவது? இம்முறையில், பாட நோக்கங்களை எப்படி அடைவது? இது எந்த அளவிற்குச் சாத்தியம்? - என்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தன. இந்நேரத்தில் தான்  5ஆம் வகுப்பு, வாழ்த்துச் செய்யுளுக்கான 5E பாடத்திட்டம் எனக்குக் கிடைத்தது.

அப்பாடத்திட்டத்தில் எழுதப்பட்டிருந்த ‘நோக்கங்கள்’ என் கவனத்தை ஈர்த்தன. அதில் ஒன்று ‘மாற்றம் - காரணம் மற்றும் விளைவைப் புரிந்து கொள்ளுதல்’. என்னால் இவ்வாறெல்லாம் யோசிக்கக்கூட முடியுமா என்பது சந்தேகம். குறிப்பிட்ட இந்த நோக்கம், தற்போதய சமுதாயச் சூழலில் நிச்சயமாக மாணவர் மனதில் விதைக்கப் படவேண்டிய ஒன்றாகும்.

மாணவர்கள் ஆயத்தமாதல்:

செய்யுளை நடத்தும் பொழுது இசைநயம், பொருள் நயம் போன்றவற்றோடு நின்றுவிடாமல்,

‘மாற்றம்’ என்ற கருத்தை மிக ஆழமாக கொண்டுசெல்லத் திட்டமிட்டேன். மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட கீழ்க்காணும் பாடலைப் பாடினோம்.

 

அதிகாலையில் நானும் விழித்திடவே

அன்பாய் அன்னை அழைத்திடவே

 விரைவாய் நானும் குளித்திடவே

தூய ஆடை உடுத்திடவே

பள்ளிப் பாடம் படித்திடவே

உணவை உண்டு பசியாரிடவே

விரைந்தே பள்ளிக்குச் சென்றிடவே

ஆசிரியர் சொற்படி நடந்திடவே

 நண்பர்கள் கண்டு மகிழ்ந்திடவே

ஒன்றாய்க் கூடி விளையாடவே

அலாரம் மணியும் ஒலித்ததுவே

டிரிங்... டிரிங்... டிரிங்...

பொழுதும் நன்றாய் புலர்ந்ததுவே

புயலாய் நானும் எழுந்தேனே! (மீதிப் பாடலை மாணவர்களைப் பாடச்  சொன்னேன்)

மாணவர்கள் பாடலை இயற்றுதல்:

மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சொல்லைப் போட்டுச் சொல்லிப் பார்த்தனர். பின் ஒத்த ஓசையுடைய சொற்களாக மாற்றிப் போட்டனர். அனைத்து வார்த்தைகளையும் சரிபார்த்தனர். இவ்வாறாகப் பாடலை நிறைவு செய்தனர். இதோ பாடல் இவ்வாறு தொடர்ந்தது,

வந்தேன் அம்மா என்றேனே

அழகாய் நானும் குளித்தேனே

பளீரென ஆடை அணிந்தேனே

பாடம் நன்றாய் படித்தேனே

உணவை மென்று உண்டேனே

பள்ளிக்கு ஓடிச் சென்றேனே

ஆசிரியருக்கு வணக்கம் சொல்வேனே

நண்பரைக் கண்டு மகிழ்வேனே

ஒன்றாய் களித்து விளையாடுவோமே

ஆடிப்பாடி விளையாடியே

ஹாஞ் ஹாஞ் என்று சிரிப்போமே

ஹா... ஹா... ஹா... ஹா...!

மாற்றத்திற்கான செயல்பாடு

ஆராய்தல் நிலையில், அடுத்தவர் குணத்தை மாற்ற, முதலில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்

என்று மாணவர்கள் உணரும் வகையில் ஒரு செயல்பாட்டை வடிவமைத்திருந்தேன். ஒவ்வொரு

மாணவனும் தன் நண்பனிடம் சென்று, தன்னிடம் அவனுக்குப் பிடிக்காத குணங்களைப் பட்டியலிடச்

சொல்ல வேண்டும். பிறகு, அப்பட்டியலைப் படித்துப் பார்த்து, அவற்றில் நல்லவை எவை, தீயவை எவை

என்று பிரித்துணர வேண்டும். நண்பன் கூறியதில், தானும் தீயது என்று முடிவு செய்யும் குணங்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு 25 நாட்கள் கொடுக்கப்பட்டன. அதற்குள் மாற்றங்கள் நிகழும் என்பது எனது நம்பிக்கை.

எதிர்கொண்ட சவால்:

ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு மாணவன் என்னிடம் வந்து, அவனது நண்பன் தன்னை அடிப்பதாகவும், விளையாட்டில் சேர்த்துக் கொள்ள வில்லை என்றும் கூறினான். இது எனக்குப்

பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. என் திட்டத்தில் எங்கு பிழை நேர்ந்தது என்று யோசித்தேன். சட்டென்று ஒரு எண்ணம் உருவானது.

மாற்றுத் திட்டம்:

அடுத்தநாள் , மாணவர்களின் பெயர்களை ஒரு சார்ட் தாளில் எழுதி அதை வ கு ப்பறையில் ஒட்டினேன். நமது வகுப்பில் யாராவது ஒருவரின் மாற்றத்தைப் பற்றி தொடர்ந்து மூன்று பேர் கூறினால் அவர்களுக்கு ஒரு நட்சத்திரம் (star) தருவேன் என்று அறிவித்தேன்.

நாள்தோறும் அதை நினைவு கூர்ந்தேன். சார்ட் தாளில் நட்சத்திரங்கள் குவிந்தன. நான் மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன்.

எதிர்பாரா விளைவுகள்:

இச்செயல்பாட்டின் மூலம், எதிர்பாராத வேறு சில திறன்களும் வளர்ந்தன. அவை, குழுப்பணி, பிறருக்கு உதவுதல், விட்டுக் கொடுத்தல், பிறர் மீது அன்பு செலுத்துதல், தன் கருத்தை எடுத்துக் கூறல், நட்புணர்வு, போன்றவை.

என்னுள் மாற்றம்:

இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு மாணவன் எந்த ஒரு கல்விச் செயல்பாட்டிலும் ஈடுபாடின்றி காணப்பட்டான். தொடர்ந்து பல நாட்களாக அவனது வேலைகளைச்சரிவரச் செய்வதில்லை. அன்று காலையும் அவன் வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் வந்ததால் நான் கோபமடைந்தேன். அதைப்பார்த்த ஒரு மாணவன் என்னிடம் வந்து,

“கோபம் கொள்ளக் கூடாது; அது மிகக் கொடியது; விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்- என்று எங்களுக்கு அடிக்கடி சொல்வீர்கள். இப்போது நாங்கள் மாறிவிட்டோம்; நீங்கள் மட்டும் மாற்றாமல் அப்படியே இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது” என்று கூறினான். என்னை மாற்றிக் கொள்வதின் அவசியத்தை அன்று நான் உணர்ந்தேன். மாணவர்களை ஆற்றுப்படுத்துவது மட்டுமே ஆசிரியர்களின் கடமையன்று. ஆசிரியர்களும் மாற்றங்களுக்கு உட்பட வேண்டும். மாணவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டியவை பல என்று உணர்ந்தேன்.

நோக்கத்தை அடைந்தேன்:

ஓரிரண்டு நாட்கள் கழித்து, ஒரு மாணவி எனக்கு நன்றி கூறினாள். காரணம் கேட்டதற்கு, அவள் தனது குணங்களைப் புரிந்து கொண்டதாகவும், பிடிக்காத குணங்களை மாற்றிக் கொள்வதாகவும் கூறினாள்.

இருபத்து நான்காம் நாள் ஒரு மாணவன் வந்து, தன்னுடைய தீய குணங்களை மாற்றிக் கொள்ள,

தனக்கு மேலும் பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டான். நான் வகுப்பு மாணவர்களிடம், அம்மாணவனிடம் மாற்றம் தெரிகிறதா என்று வினவினேன். அனைவரும், அவன் மாற முயற்சிக்கிறான் என்றும் அவன் கேட்ட அவகாசத்தைத் தரலாம் என்றும் கூறினர். இது போன்ற செயல்பாடுகள், மாணவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமக்கும் மன நிறைவை அளிக்கின்றன. நான் நினைத்து நினைத்து மகிழ்ந்த செயல்பாட்டை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். அதனால் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

Subject: 
Tamil

Term: Term 1

Comments

Sasikumar C's picture
Sasikumar C

Try this in ur school u can see some changes.. Thanks to Mrs. Shanthakumari for writing about an article "மாற்றம் ஒன்றே மாறாதது" in Thisaimani..