Towards a just, equitable, humane and sustainable society

முதல் ஆசிரியர் – ஒரு பார்வை


சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி திறப்பு விழாவிற்கு அந்த ஊரைச் சேர்ந்த முதல் பெண் விஞ்ஞானியான என்னை (அல்தினாய் சுலைமானவ்னா) அழைக்கின்றனர். ஊர் கூடி சிகப்பு கம்பளம் விரித்து என்னை வரவேற்கிறது. அவ்விருந்தில் தபால்காரர் துய்ஷேன் பற்றிய பேச்சும் எழுகிறது.

1924ஆம் ஆண்டில் கிராமத்தின் கூட்டுப்பண்ணை உள்ள இடத்தில் நாடோடிகளுக்குப் படிப்பு சொல்லித் தர தூய்ஷன் என்பவர் வருகிறார். கிராம மக்களுக்குக் கல்வி என்ற வார்த்தை மிகவும் புதிதாக இருந்தது. தூய்ஷன் சென்று ஊர் மக்களிடம் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள் என்கிறார். அந்தக் கிராமத்தில் பெற்றோர் இன்றி எனது ஒன்று விட்ட சிற்றப்பா வீட்டில் நான் வளர்ந்தேன்.

அந்தக் கிராமத்தின் அருகிலிருந்த குன்றின்மீது சிதிலமடைந்த நிலையிருந்த – முன்பொரு காலத்தில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாயிருந்த – குதிரைக் கொட்டடியைத் தனியொருவனாகச் செப்பணிட்டுப் பள்ளிக்கூடமாக மாற்றுகிறார் தூய்ஷன். வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறார்.

 

துய்ஷேன் ஆரம்பக் கல்வியினைக்கூட முறையாகக் கற்றிருக்கவில்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் மட்டுமே தெரியும். ஆயினும், தனக்குத் தெரிந்தவற்றையேனும் அக்குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட வேண்டுமென்ற ஆர்வமே உந்து சக்தியாக இருந்து அவரை இயக்கியது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வந்திருக்கும் அவ்விளம்பிஞ்சுகளுக்குக் கல்வி புகட்டுவதில் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபட்டார். தங்களிடம் அன்பு பாராட்டி, இனிமையாகப் பழகிய அந்த இளம் ஆசிரியரிடம் பிள்ளைகளும் மிகுந்த நேசத்துடன் பழகினர்; ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

நான் பெற்றோரை இழந்து உற்றாரின் ‘பராமரிப்பில்’ வளரும் அவ்வூரின் ஏழைச் சிறுமி. கற்றுக்கொள்வதில் ஆர்வமிக்க, துய்ஷேனின் அன்புக்குரிய மாணவி. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் வயதில் மூத்தவள்.

அவர் தனக்குத் தெரிந்த அனைத்தும் சொல்லித் தருவதாகச் சொன்னார். அவர் அவருக்கு உரித்தான தனித்தன்மையுடன் எங்களுக்கு எழுதுகோல் பிடிப்பதிலிருந்து அனைத்தும் கற்றுக் கொடுத்தார். நாங்கள் ஒவ்வொருவராக எழுத்துகளைப் படித்து ‘அம்மா’, ’அப்பா’ என்று எழுதக் கற்றுகொள்ளும் முன்னரே, ‘லெனின்’ என்று காகிதத்தில் எழுதினோம். எங்களுடைய அரசியல் அகராதியில் ‘நிலப்பிரபு’, ‘கொத்தடிமை’, ‘சோவியத்துகள்’ போன்ற வார்த்தைகள் அடங்கியிருந்தன. ஒரு வருடம் கழித்து ‘புரட்சி’ என்ற சொல்லை எழுதச் சொல்லித் தருவதாக துய்ஷேன் வாக்களித்தார். அவர்  பணியின் நிமித்தமாக மாஸ்கோ சென்று இருந்தார். அவர் இல்லாதது ஏதோ ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தியது.  அது ஒரு குளிர்காலம். வெண்பனி விழும் வரை நாங்கள் குன்றின் கீழ் ஓடிக்கொண்டிருந்த ஆற்றைக் குறுக்காக நடந்து கடந்தோம். பின்னர் கடப்பது இயலாததாகியது. சில்லிட்டுப் போன நீர் கால்களை உறையச் செய்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் பெரிதும் கஷ்டப்பட்டனர். அவர்களின் கண்களில் கண்ணீர் கூட வந்தது. அப்போது தூய்ஷன் அவர்களைத் தன் கரங்களாலும் முதுகிலும் தூக்கிச் சென்றார்.

அனாதைக்குப் படிப்பெதற்கு என்று என்னை ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரமாக மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறாள் என் வளர்ப்புத் தாய். இதனால் அதிர்ச்சியுற்ற என்னை ஆறுதல் கூறி அவ்வூரிலிருந்த அவளது பாட்டியின் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாத்தார், துய்ஷேன். ஆனால், குண்டர்களுடன் பள்ளிக்கூடத்துக்கே வந்த என் சித்தி என் ஆசிரியரைக் கடுமையாக அடித்து உதைத்து, கைகளை முறித்து, குற்றுயிரும் குலையுயிருமாக்கிவிட்டு என்னை தூக்கிச் சென்றார்கள்.

சோவியத் செம்படை வீரர்களுடன் வந்து என்னை மீட்டு வந்தார் எனது ஆசிரியர் துஷ்யன். எனது பாதுகாப்பு கருதியும் மேல்படிப்புக்காகவும் நகரத்துக்கு அனுப்பிவைத்தார். கற்பது மிகவும் சிரமமாக இருந்தபோதிலும் நான்  கஷ்டபட்டு  என் ஆசிரியரின் தைரியத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு படித்தேன். தற்போது நான் ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்; தத்துவ விரிவுரையாளர்.

ஆசிரியரின் கருத்து:

“முதல் ஆசிரியர்” என்ற இந் நாவல் சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் சிங்கிஸ் ஜத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல். இதில் தனது குக்கிராம மக்கள் எழுத்தறிவு பெற எப்படிப் போராட வேண்டி இருந்தது. அந்தக் கிராமத்தின் முதல் பள்ளி ஆசிரியர் தூய்ஷனை, மாபெரும்  மனிதனை, கல்வியின் தந்தையாய், சேவையின் சின்னமாய்ச் சித்தரிப்பதும், அல்டினாய் என்ற பெண்ணின் பாத்திரப் படைப்பு - மெய் அன்பைக் குருதியுடன் அடித்தளம் அமைந்திருப்பதும், ஆசிரியர் தூய்ஷன் மீது அல்டினாய் கொண்ட அன்பைத் தூய்மையானதாய் இளமையின் நினைவுச் சின்னமாய் மிளிரச்செய்து இக்கதையில் இழையோட வைத்திருப்பதும் மிகவும் பாராட்டுக்குரியது.

ஆசிரியர்: சிந்துஜா சுந்தராஜ் , கே .வி, ஜிப்மர் 

Start Date: 
Wednesday, October 25, 2017 - 10:00
End Date: 
Wednesday, October 25, 2017 - 12:15