Towards a just, equitable, humane and sustainable society

எனது வகுப்பறை மகிழ்ச்சியின் கருவறை

0
No votes yet
0
Post a comment

எனது பள்ளி

எனது பள்ளியில் 58 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளனர். அனைவரும் ஒரே குடும்பம் போல் இணைந்து செயல்படுகிறோம். இங்குப் படிக்கின்ற மாணவர்களில் சில பேர் மிகவும் வறுமையில் உள்ளவர்கள். சில பேர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துப் பெற்றோர்களுமே கூலித்தொழிலாளர்களாகவே உள்ளனர். பெற்றோரை  இழந்த குழந்தைகள், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் எனப் பல்வேறு சூழ்நிலைகளையுடைய குழந்தைகள் இங்குக் கல்வி பயில்கின்றனர். அனைவருமே அன்றாட வாழ்க்கைச் சூழலில் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எங்கள் பள்ளி பாதாளசாக்கடைத்திட்டத்தின் காரணமாக முன்னால் இருந்த ஒரு வகுப்பறை மற்றும் படிக்கட்டுகள் உடைக்கப்பட்டுப் பாதுகாப்பும், அழகான தோற்றமும் குன்றி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதைக்கண்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தினர் மதில் சுவர், படிக்கட்டு இவற்றைக் கட்டிக்கொடுத்துப் பள்ளிக்குப் பாதுகாப்பையும், அழகியத் தோற்றத்தையும் திருப்பிக் கொடுத்தனர். கீழே இருந்த மூன்று வகுப்பறைகளிலே இரண்டு இரண்டு வகுப்புகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்தி சிரமப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் அவர்கள் கட்டிக்கொடுத்த படிக்கட்டுகள் மேலேயிருந்து வகுப்பறைகளைப் பயன்படுத்த உதவியாக இருந்தது.

படிக்கட்டுக்கு அருகில் காலியாகவும், உபயோகமின்றியும் கிடந்த இடத்தில் தனியார் நிறுவனம் (Round table) மூலம் நான்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதனால் இப்பொழுது எனது பள்ளி மிகவும் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பெற்றுள்ளது.

வகுப்பறை என்பது

ஒரு வாய்ப்பு - நழுவவிடாதிருங்கள்

ஒரு கடமை -  நிறைவேற்றுங்கள்

ஒரு இலட்சியம் - சாதியுங்கள்

ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்

ஒரு மகிழ்ச்சி    - அனுபவியுங்கள்

ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்

ஒரு பயணம் - நடத்திமுடியுங்கள்

நாம் அனைவருக்கும் ஒரே

மாதிரியான திறமைகள் இல்லாமல்

இருக்கலாம் – ஆனால் அனைவரும்

திறமைகளை வளர்த்துக் கொள்ள

ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன. அதுவே

நம் ஒவ்வொருவரின் வகுப்பறை

கடந்த ஆண்டு என் வகுப்பறை

கடந்த ஆண்டு என் வகுப்பறையில் நான் எனது நான்காம் வகுப்பு மாணவர்களுடன் சேர்த்துச் செயலாற்றிய பல்வேறு முயற்சிகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பஸ்வாவின் பண்ணை என்ற பாடத்தை நடத்தும் போது உழவுத்தொழில் தொடர்புடைய திரைப்படப் பாடல்களைத் திரையிட்டுக்காட்டி மாணவர்களின் கற்றல் சூழலை உற்சாகப்படுத்தினேன். உழவர் ஒருவரை அழைத்து வந்து உழவுத்தொழில் பற்றிய முழு விளக்கத்தையும் கலந்துரையாடல் மூலம் மிகத்தெளிவாக தெளிவு பெற செய்தேன். ஐந்து வகை மண் வகைகளைக் கொண்டு வந்து அந்தந்த மண்ணில் விளையும் பயிர்களை விதை ஊன்றி விளைவித்து பராமரித்து மகிழ்ந்தனர். இந்தச் செயல்பாடுகளால் மாணவர்கள் உழவுத்தொழில் பற்றி முழுமையான தெளிவைப் பெற்றுக் கொண்டனர்.

நந்துவுடன் ஒரு நாள் என்ற பாடத்துக்குக் குறும்படம் காட்டினேன். யானைகளைப் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றனர். முகமூடி அணிந்து குறுநாடகமாக நடித்து மகிழ்ந்தனர். கூண்டில் அடைத்து வைத்துள்ள விலங்குகள், பறவைகள் படங்களைச் சேகரித்துத் தானாகவே அவற்றைப் பற்றி வினாவிடை எழுதி மகிழ்ந்தனர். இப்பாடச் செயல்பாடுகளின் மூலம் மாணவர்கள் விலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது என்றும் அவைகளையும் தம்மைப்போல் பாவித்து நேசிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்டனர்.

கால மாற்றங்கள் என்ற பாடத்தை நடத்தும் போது எங்கள் பள்ளியிலேயே கட்டிடப்பணி நடைபெற்றதால் நேரடியாகக் கண்டும் கேட்டும் தொட்டுணர்ந்தும் கொள்ளக்கூடிய மிகப்பெரிய வாய்ப்புக் கிடைத்தது. பயன்படுத்தப்படும் பொருட்கள் பணியாட்களுக்குரியப்பெயர்கள் இவற்றை அவர்களே ஆர்வமுடன் கேட்டு புரிந்து கொண்டார்கள். அனைவரும் இணைந்து களிமண்ணால் வீடுகளைக் கட்டி மகிழ்ந்தனர்.

பயணங்கள் என்ற திறமையைப்பெற தொடரி என்ற திரைப்படத்தைத் திரையிட்டுக் காட்டினேன். இதனால் தொடர்வண்டி பற்றிய முழுமையான கற்றல் அடைவைப் பெற முடிந்தது. கற்றல் சூழல் மிகவும் உயிரோட்டமுள்ளதாகக் காணப்பட்டது அவர்களுக்குள்ளேயே அருமையான கலந்துரையாடல் நிகழ்ந்தது. அனைத்து நிலை மாணவர்களுக்கும் எளிதில் புரிந்தது. வினாக்கள் கேட்க ஆளுக்கொரு விடைகளை அளித்ததோடு தக்கத் தையா தையா பாடலுக்கு நடமாடி மகிழ்ந்தார்கள். அனைவரும் இணைந்து தொடர் வண்டி போல நடித்து மகிழ்ந்தார்கள்.

மாணவர்களிடம் நீங்கள் பள்ளிக்கு எப்படி வருவீர்கள் என்றதற்குச் சிலர் நடந்தும் பைக்கிலும் சைக்கிள்களிலும் வருவதாகப் பதிலளித்தனர்.

வெளியூர் செல்வதற்ககோ (அ) கடற்கரைக்குச் செல்வதற்கோ எப்படிச் செல்வீர்கள் என்று வினா எழுப்பியதற்கு ஒரு மாணவன்,“நாங்க பஸ்ல ஏறி டிக்கெட் எடுத்தோமா? பஸ் ஸ்டாண்டுக்குப் போயி இறக்கி விட்டாங்களா, அப்புறம் நடந்து போனோமா, அங்கே போயி காந்தி சிலையில் சர்க்கஸ் விட்டோம். ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். அப்புறம் அதே போலவே திரும்ப வீட்டுக்கு வந்தோம்” எனக் கூறினான்.

அனைத்துக் குழந்தைகளும் அவர்களே ஆளுக்கொரு போக்குவரத்துச் சாதனங்கள் படங்களை வரைந்து வண்ணமிட்டு அட்டைப்பெட்டிகளை மாட்டிக்கொண்டு அதனைப்பற்றித் தனக்குத் தெரிந்தவற்றைப் பேசி ஒரு நாடகம் போல் நடித்துக் காட்டியும் பாடல்கள் பாடியும் மகிழ்ந்தனர். அனைத்து போக்குவரத்துச் சாதனைகளையும் சேகரித்து வந்து அவர்களே ஒரு கண்காட்சி அமைத்தும் மகிழ்ந்தார்கள். மேலே குறிப்பிட்டுள்ள இச்செயல்பாடுகள் மூலம் கற்க மிகவும் சிரமப்படும் மாணவர்களும் கூட ஆர்வமுடன் பங்கேற்று தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். கற்றலுக்கு அதிக வாய்ப்பளித்ததால் எளிமையாகப் புரிதல் நடைபெற்றதுடன் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் காணப்பட்டனர்.

வகுப்பறைச்சூழலை உயிரோட்டமுள்ளதாக மாற்றியதால் கற்றல் இனிமையாக நிகழ்ந்தது. இதனால் அனைவரும் விடுப்பின்றி வகுப்பறை வந்தனர்.

எனது மாற்றங்கள்

அனைத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பது எனக்கு முதலில் மிகப்பெரிய சவாலாகத் தோன்றியது. சில நாட்கள் யோசித்தேன். நிறைய வழிகாட்டி புத்தகங்களைப் படித்தேன். எனக்குள் பல திட்டங்களை வகுத்தேன். அவற்றை வகுப்பறையில் செயல்படுத்த முயற்சித்து முயற்சித்து அதற்கான திருப்தியும் மனநிறைவும் அடைந்தேன்.

முதலில் நான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நேரம் தவறாமல் பள்ளிக்குச் செல்வேன். இறைவன் எனக்குக் கொடுத்த வகுப்பறை என்னும் பொக்கிஷத்தைச் செம்மைப்படுத்தி கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் அனைத்தையும் கொண்டு அழகுபடுத்தினேன். என்னிடம் குறையாகக் காணப்பட்ட கோபம், முகம் சுழித்தல், ஆர்வமின்மை போன்ற துர்குணங்களை நானே கண்டறிந்து அவைகளைக் குப்பைத்தொட்டியில் போட்டு எரித்தேன். அதன் விளைவாகக் குழந்தைகளை அடிப்பது, கடுமையாகப் பேசுவது, கோபப்படுவது இவற்றைத் தவிர்த்து இனிமையாகப் பேசிப்பழகினேன். ஊக்குவிக்கும் வண்ணம் கைத்தட்டல், கைக்குலுக்குதல், பரிசு வழங்குதல், ஸ்டார் வரைதல், கிரீடம் சூட்டுதல் போன்ற உத்திகளைக் கையாண்டேன். மிக மிக முக்கியமாகக் குழந்தைகளின் கருத்துக்களுக்கு வாய்ப்பளித்து நேரம் ஒதுக்குவதால் அவர்கள் வகுப்பறை என்ற சூழலை மறந்து வீட்டில் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பழகுவது போலவே என்னுடன் பழக ஆரம்பித்தாலும் கற்றல் அடைவைப்பெற செய்ய முடிந்தது.

மாணவர்களின் மனத்தேடல்கள்

தினந்தோறும் முந்தைய நாளில் நடைபெற்ற நிகழ்வுகள் பாடமாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் கலந்துரையாடுவோம். அனைத்துக் குழந்தைகளுமே தமக்குத் தோன்றிய எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

அவற்றில் ஒரு சில – நீங்க விடுப்பே எடுக்காதீங்க எங்களுக்கு போர் அடிக்குது, இப்பல்லாம் கோபப்படமாட்டேங்குறீங்க, எல்லாரிடமும் பாசமாகப் பேசுறீங்க, நாங்க ஏதாவது சொன்னா உடனே திருத்திக்கிறீங்க, அடுத்த ஆண்டும் நீங்களே வரனும், விடுமுறை நாட்களில் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம்.

உபகாரநம்பிக்கைமேரி, அ.தொ.ப. தவளக்குப்பம்

Grade: 
4

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment