Towards a just, equitable, humane and sustainable society

என்னைச் செதுக்கிய மாணவர்கள்


என்னைச் செதுக்கிய மாணவர்கள் - புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்

புத்தகத்தைப் பற்றி:

ஆசிரியர்கள் தன் வாழ்வில் நிறைய மாணவர்களைச் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ‘மாணவர்கள் ஆசிரியர்களை ஞாபாகம் வைத்து கொள்வார்கள். ஆனால் ஆசிரியர்கள் மறந்து விடுவார்கள்’ என்று பொதுவாக சொல்வது உண்டு.  ஆனால், இப்புத்தகத்தின்  ஆசிரியர், தான் பள்ளி ஆசிரியராக இருந்த போது, தன் வகுப்பறையில் நடந்த நிகழ்வுகளையும்  முக்கியமாக மாணவர்களின் செயல்கள் மூலம் தான்  கற்றதை, 38 கட்டுரைகள் மூலம் நமக்கு அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.  ஒவ்வொரு கட்டுரையும் தனிச் சிறப்பு வாய்ந்தது.  ஆசிரியர்கள் இதில் சில கட்டுரைகளை “புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில் வாசித்து , தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் கலந்துரையாடல் மற்றும் கருத்துக்கள்:

மாணவ விவசாயி இளஞ்செழியன்:

“உங்கள் அப்பா என்ன வேலை பார்க்கிறார்? என்ற கேள்வியைக் கூட நம் குழந்தைகளிடம் கேட்கமுடிவதில்லை. நிறைய குழந்தைகள் தாய்-தந்தை இல்லாமல் உறவினர் வீட்டில் இருக்கின்றனர். “ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவதை விட, மாணவர்களின் சூழலைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது.” - ஜெயபிரகாஷ்

“அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய ஒருக் கதை இது. மாணவர்களுக்குப் பாடப்புத்தகத்தைத் தாண்டி வாழ்க்கைக் கல்வியையும் கற்கும் சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.  இப்போது நம்மைச்சுற்றி நடக்கும் பல பிரச்சனைகளின் மூலமே நாம் அவற்றை உணரலாம். உதாரணமாக இரசாயனம் விவசாயம், நீர், நிலம், காற்று மாசுபாடு, புதிய புதிய நோய்கள்… என அடுக்கிக்கொண்டே போலாம்” – கவிதா.

நம்ம கல்விக் கொள்கையே விவசாயத்தை புறக்கணிக்கிற மாதிரிதான் இருக்கு. ஆனா, அந்தக் காலத்தில, காந்தியின் அடிப்படை கல்வியில் , நாங்க எல்லா வேலைகளையும் செய்தோம்,”நாங்களே இராட்டை சுத்துவோம், தோட்டத்தைப் பார்த்துபோம்”. ஆனா கொஞ்ச காலத்தில எல்லாம் மாறிப்போயிடுச்சு. இப்ப இருக்கிற சூழ்நிலையில் நம்ப தான் விவசாயத்தை பாடத்தோட சேர்த்து எடுக்கனும், பாடத்திட்டதில இல்லைன்னு அத ஒதுக்க முடியாது” – முருகையன், கிருஷ்ணமூர்த்தி

கல்வியை ஓவியமாக்கிய செந்தில்குமார்

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளக் கருத்துக்கள், என் மாணவர்களுக்கு ஒத்துவராது. அடிப்படையாக வாசிப்பதற்கும் , எழுதுவதற்கும் திணறும் மாணவர்களிடம், எவ்வாறு நான்  அவர்கள் அறிவை கட்டமைக்கிறதுக்கு உதவ முடியும். உதாரணாமாக 3ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும்” கெளதாரியும் முயலும்”  பாடத்தில் கெளதாரி என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக்  கற்பதற்கு சிரமப்படுகிறார்கள். ஆனால், கட்டுரையில் வருவது போல மாணவர்களின் அறிவை கட்டமைப்பதுதான் உண்மையான கல்வியாக இருக்கும் என்பது கட்டுரையிலிருந்து தெளிவாகிறது - ஜானிகிருஷ்ணன்

கலாமை ஆயுதமாக்கிய ரஞ்சிதா

“எனது பள்ளிப்பருவத்தில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். 8ஆம் வகுப்பு வரை ஒரு சிறிய கிராமத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் பயிலும் மாணவிகள் பலர் குடும்பச் சூழல், வறுமை, பெற்றோரின் வற்புறுத்தல், உறவு விட்டுப் போகக் கூடாது என்று பல காரணங்களுக்காகச் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வர். இவற்றில் நிறைய பெண்களை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைப்பதைப் பார்த்திருக்கிறேன்.  நல்ல வேளையாக, இப்போதெல்லாம் இவ்வாறு நடப்பதில்லை. பெண் பிள்ளைகளையும் ஆண் பிள்ளைகள் போன்றே படிக்க வைத்து வேலைக்கும் அனுப்புகின்றனர். நமது சமுதாயத்தில் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றாக இருக்கின்றன.” – ஜெயபிரகாஷ்

“அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது இலட்சக்கணக்கான மாணவர்களைச் சந்தித்துள்ளார். யாருமே செய்யாதது. மாணவர்கள் மீது அவருக்கிருந்த அதீதமான ஈடுபாடுதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். தான் ஒரு ஆசிரியராக இருப்பதையே விரும்புவதாகப் பல மேடைகளில் கூறியுள்ளார். இறக்கும் வரை நமக்கெல்லாம் அவர் ஒரு முன்மாதிரியாகவே வாழ்ந்தார்” – சித்தானந்தன்.

“எனது ஆசிரியர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரது வீட்டின் வரவேற்பு அறையில் அப்துல்கலாம் அவர்களின் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றைப் ப்ரேம் போட்டு வைத்திருந்தார்.  விளக்கம் கேட்ட போது அவர் எழுதிய கடிதத்திற்குக் கிடைத்த பதில் கடிதம் என்று கூறினார்” – ஜெயபிரகாஷ். வாசிப்புப் போதும்:

“குழந்தைகளுக்குப் பொது வாசிப்பில் ஆர்வம் ஏற்படாதிருப்பதற்குப் பள்ளிக்கூடமே காரணம்- உண்மையான வரிகள். பாடப்புத்தகங்களை வாசிக்குமாறு குழந்தைகளைக் கட்டாயப் படுத்துகிறோம். திணிக்கப்படும் எந்த விஷயமும் வெறுக்கப்படுவது இயல்பு. மேலும் குழந்தைகள் சுதந்திரமாக வாசிக்க ஏற்றச் சூழல் பள்ளிகளில் உருவாக்கப் படுவதில்லை” – கவிதா

 “எனக்குச் சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கமுண்டு. செய்தித்தாளுடன் வரும் இணைப்பு மலர்களை அன்றே படித்துவிடுவேன். சிறுவயதில் எங்களிடம் பணம் இருக்காது. எங்கள் வகுப்பில் ஒரு மாணவன் வாங்கும் புத்தகத்தை அனைவரும் வாசிப்போம். அடுத்த மாதம் வேறொருவர் வாங்குவார். இதுபோல் சுழற்சி முறையில் வாசிக்கும் பழக்கம் ஐந்தாம் வகுப்பு முதற்கொண்டே எங்களிடம் இருந்து வருந்தது. ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் அடுத்த புத்தகம் வாங்கும் வரை வாசித்த புத்தகத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். வாசித்துப் பெற்ற அறிவைவிட அதைப் பற்றி பேசிப் பெற்ற அறிவு அதிகம். ஆனால் இப்போது அப்படி ஒரு வாசிப்பு வட்டம் இல்லையே என்று பல நாள் யோசித்து இருக்கிறேன்.” – ஜெயபிரகாஷ்.

“வாசிப்பை மாணவர்கள் வெறுப்பதற்குக் காரணம் பள்ளிக்கூடம் தான் என்று புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறது மற்றும் குழந்தைகள் நாம் செய்யும் செயலை பார்த்துதான் வளர்கிறார்கள். “நம்ம டி.வி பார்த்த  அவங்க  டி.வி பார்க்க போறாங்க, நம்ப படிச்ச அவங்களும் படிக்க போறாங்க”. ஆனா எத்தனை பேர் இப்ப வாசிக்கிறோம் தான் பெரிய கேள்வியா இருக்கு. மாணவர்கள் மட்டும் வாசிப்பை ஒதுக்கவில்லை பெரியவர்களும்தான்” -  பத்மாவதி

சிப்பாய் கலகக்காரி தேன்மொழி:

“குழந்தைகள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது மிகவும் கடினம். நாம் அனைவரும் சிப்பாய் கலகத்தைப் படித்திருக்கிறோம். ஆனால் இதுபோன்று யோசிக்கவே இல்லை.” – தமிழரசி

“பெரும்பாலான நேரங்களில் நாம் குழந்தைகளைச் சிந்திக்கவே விடுவதில்லை. அதைவிட அவர்களின் பல கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை என்பது தான் உண்மை” – கவிதா

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 1