Towards a just, equitable, humane and sustainable society

என் பந்து - பாடல்


பாடம் பற்றி:

‘என் பந்து’ என்ற பாடலுடன் மாணவர்களுக்கு “ப’ எழுத்தைப் புரியவைத்து எழுத வைப்பதோடு, “ப” எழுத்தில் துவங்கும் வார்த்தைகளையும் “ப” வரிசை வார்த்தைகளையும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தினை இப்பாடம் முன் வைக்கிறது. முதல் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவகையில் கதை, பாடல், செயல்பாடு என இப்பாடம் வகுப்பறையை கல கல என்றாக்கியதால்  அதைப் பற்றி எழுதலாம் என முடிவு செய்தேன்.

எழுத்தை  அறிமுகப்படுத்துதல்:

இதற்கு முந்தைய வகுப்பில் மாணவர்கள் படித்திருந்த உயிர் எழுத்துக்கள் அவர்களுக்குப் புரிந்துள்ளதா? என சோதித்துப் பார்க்க எண்ணினேன். அதனால், மாணவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு “அ” வரிசை எழுத்துக்களைக் கொடுத்தேன். நான் “ஆ’ என்று அழைத்தால் யாரிடம் உள்ளதோ, அவர்கள் முன்வந்து எல்லோரிடமும் காட்டி என்னிடம் உள்ளது “ஆ” என்று கூறிவிட்டுச் செல்வர். ப எழுத்தையும், பம்பரம், பலூன், பட்டம், பந்து, பழம்…போன்ற படங்களையும் வரைந்து வைத்திருந்தேன். “ப” எழுத்தையும் அதனுடன் படங்களை ஒப்பிட்டும் புரிந்துகொள்ள கற்றுக்கொடுத்தேன். அவர்களுக்கு வாய்மொழி பயிற்சி முடிந்தது. “ப” எழுத்தில் அவர்கள் வேறு வார்த்தைகள் கண்டுபிடிக்கும்படி கேட்டபொழுது பால், பாய், பசி…என்று கூறினர். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  இருப்பினும் மாணவர்களுக்கு  உச்சரிப்பை வேறுபடுத்தி  புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அது பற்றி இன்னும் பயிற்சி மற்றும் வேறு முறைகளை கையாள வேண்டியிருந்தது.

கதை: “ப” எழுத்து வார்த்தைகளை  அதிகம் பயன்படுத்திய கதை ஒன்று தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், கதை சொல்லத் துவங்கும்பொழுது, கதைக்குள் மாணவர்கள் வந்து விட்டனர். நான் ஒரு வரி சொல்ல அவர்கள் ஒரு வரி என்பதுபோல் இருந்தது.

ஒரு ஊர்ல “பச்சையம்மான்னு”  ஒரு பொண்ணு இருந்தாங்க. அவுங்க பேரு என்ன? பச்சையம்மா. ப எங்க வருது?

மா: பச்சையம்மாவுல.

ஆ: பச்சையம்மாவுக்கு பத்து வயசு. பல விளையாட்டுகள் விளையாடுவாள்.      

அவுங்கப்பா  அவளுக்குப் பந்து வாங்கிக் குடுத்தாங்க.

ஆ: என்ன வாங்கிக் குடுத்தாங்க.

மா: பந்து. எங்க விட்லயும் பந்து இருக்கு.       

ஆ: பந்து உங்ககிட்ட  இருக்கா? நம்ம கதையில யாருக்கு பந்து இருக்கு?    

மா: பச்சையம்மாவுக்கு.

ஆ: அப்பா பந்தைக் குடுத்ததும், என்ன செஞ்சா?

மா: விளையாடப் போயிட்டா. ஃப்ரண்டோட சேந்து விளையாட…

கதை இப்படியாகத் தொடர்ந்தது. கதையில் “ப”  வரும்பொழுது நான் மறந்தாலும், டீச்சர் “ப” வந்திருக்கு என்று நினைவூட்டுமளவுக்கு கவனிக்கும் மாணவர்கள் இருந்தனர்.

பாடல்:

அடுத்து பத்துபைசா விலையிலே

பலூன் ஒன்று வாங்கினேன்

பலூன் ஒன்று வாங்கினேன்

பய்யப் பய்ய ஊதினேன்

பய்யப்பய்ய ஊதினேன்

பந்து போல ஆனது

இன்னும் இன்னும் ஊதினேன்

பானை போல ஆனது

பானைபோல ஆனதைப்

பார்க்க ஓடிவாருங்கள்

ஓடி வந்தால் பார்க்கலாம் – இல்லை

வெடிக்கும் சத்தம் கேக்கலாம்

இப்பாடலைக் கற்பிக்க செயல்பாட்டையும் இணைத்தது நன்றாக செய்தது போல் இருந்தது.

ஆளுக்கொரு பலூன் கொடுத்து இரு குழுவாகப் பிரித்தோம்.

முதல் குழு முன் நின்று பாட்டில் உள்ளதை செய்வர்.

இரண்டாம் குழு அவர்கள் செய்வதை பாடலாக சொல்வர்.

“பய்ய பய்ய ஊதினேன்”  என்று பாடும்பொழுது, ஊதுவாங்க.

“பலூன் போல ஆனது” என்று சொல்லும்பொழுது... பாடலும் செயல்பாடும் இணைத்துக் கற்றுக்கொடுத்தேன். வெடிக்கும் சத்தத்திற்காக ஊதுகிறார்கள். அவர்களால் முடியவில்லை. அது போட்டி போல மாறி வகுப்பறையே நிசப்தத்தில் இருந்தது.  பாடலை சுலபமாகக் கற்றுக்கொண்டதோடு, அவர்கள் பலூன் கையில் இல்லாவிட்டாலும், அவர்களால் அப்பாடலை அனுபவித்து பாட முடிவதைப் பார்க்கிறேன். இது முடிந்ததும் என் பந்து பாடலைப் பழகினோம்.

விளையாட்டு:

பந்தை வைத்து வெவ்வேறு விளையாட்டுகள் விளையாடினோம். அதில் ஒன்று பந்தை எறிபவர்கள் “ப” வார்த்தைச் சொல்லி தூக்கி எறிய வேண்டும். அடுத்து பந்தின் கலரை சொல்லி எறிய வேண்டும். இதற்குக் கலர் கலர் பந்தை பயன்படுத்தினோம்.

செய்து பார்த்தல்:

பட்டம் செய்வது என முடிவு செய்தோம். கலர் பேப்பர், குச்சி, நூல், பசை என எல்லாம் எடுத்து வந்து பட்டம் செய்தோம். குழந்தைகள் செய்த பட்டத்தைப் பறக்கவிட எவ்வளவோ முயற்சித்தும் பறக்க வைக்க முடியவில்லை.   

பயிற்சி:

பயிற்சித்தாளில் பம்பரம், பட்டம், பழம், பலூன் வரைய வைத்தேன். அதை அவர்கள் கரும்பலகையிலும் வரைந்தனர். நோட்டிலும் வரைந்தனர். நோட்டில் “ப” எழுத்தை எழுத வைத்தேன்.

காட்சி

இப்பாடத்தின் கடைசி நிகழ்வாக வகுப்பறையில் சிறு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தேன்.

ஒரு மேசையில் பந்து

அடுத்ததில் பம்பரம்

இன்னொன்றில் பலூன்

இன்னொன்றில் பட்டம்

பழம்…இப்பாடம் முடியும்பொழுது கற்றுக்கொடுக்க வேண்டியதை மாணவர்கள் நன்றாகக் கற்றது போன்ற உணர்வு எனக்குக் கிடைத்தது.  வழக்கமாக செலவிடும் நேரத்தைவிட கூடுதலாக இரண்டு பாடவேளை தேவைப்பட்டது. பட்டம் செய்யும்பொழுது தொடர்ந்து இரண்டு பாடவேளை தேவைப்பட்டதால் கடன் வாங்கினேன்.  ஆனால் நானும் மாணவர்களும்  அடுத்தடுத்து என செய்து கொண்டே இருந்தோம். பந்து பாட்டு, பலூன் பாட்டு, பச்சையம்மாள் கதை, பட்டம் செய்து விடமுடியாமல் போனது, படங்கள் வரைந்தது என எல்லாவற்றையும் கடந்து கண் காட்சியில் பாடம் முடிந்தது. 

                        

சங்கர தேவி – அ.தொ.ப அபிஷேகப்பாக்கம்

 

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1