Towards a just, equitable, humane and sustainable society

ஏன் என்று கேட்ட சிறுவன் (நீள் கனவு)

0
No votes yet
0
Post a comment

பாடம், மதிப்பெண் மற்றும் வகுப்பறையோடு நின்றுவிடாமல் வாழ்க்கைக்கானதாகவும் சமூகமாற்றத்திற்கானதாகவும் மாற்றப்பட வேண்டும் எனக்கல்வியின் குறிக்கோள் பேசி வருகிறது. பாடத்திட்ட நோக்கங்களும் அவற்றை உறுதிப்படுத்துகின்றன.

நீள்கனவு பற்றி

பாடங்கள் மற்றும் பாடத்தை மாணவர்களிடம் எடுத்துச்செல்லும் ஆசிரியராகச் செயல்பட நீள்கனவு உதவியாக உள்ளது.  பெரியார், பாரதியார், அவ்வையார் போன்ற சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்களை ஆசிரியர்களாகச் சேர்ந்து வாசித்து, புரிந்து கொள்கிறோம். வாசித்த அவர்களின் எழுத்துக்கள் மற்றும் கொள்கைகளைக் கதைகளாகவும், பாடல்களாகவும், நாடகங்களாகவும் குழந்தைகளுக்கு எளிதில் ஆர்வம் ஏற்படும் வகையிலும், புரிந்து கொள்ளும் வகையிலும் கொண்டு செல்ல வேண்டும். பாட நோக்கங்களுக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்து பாடத்துடன் இணைத்தும் வாசிப்பு நேரத்திலும் மாணவர்களுக்குக் கொண்டு செல்வது என என் வகுப்பில் செயல்படுத்தத் திட்டமிட்டேன். வெவ்வேறு பாடங்களிலும் இவ்வாறான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து மாணவர்களிடம் கலந்துரையாடல்களை  நிகழ்த்தினேன்.

பள்ளியில் நீள்கனவு செயல்பாடுகள்

அன்று வாசிப்பதற்கு டீக்கடை, சானைக்காரன், கஸ்தூரிபாய் , ஏன் என்று கேட்ட சிறுவன் போன்ற புத்தகங்கள் அவர்கள் முன் வரிசைப்படுத்தப்பட்டது. ‘ஏன் என்று கேட்ட சிறுவன்’ கதையை உரையாடலுக்குத் தேர்வு செய்யப்பட்டது. கதையின் நாயகன் பீம், ஏணியின் கீழ் வரிசையில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவன். சிறு வயதில் இருந்தே பல இன்னல்களைச் சந்தித்து ‘அது ஏன் அவனுக்கு நடக்கிறது?’ என்று கேள்வி கேட்டு வளர்கிறான். இந்த இன்னல்களிலிருந்து கல்வியின் மூலம் விடுபடலாம் என்று எண்ணி படித்து வேலையில் சேர்கிறான். ஆனாலும் வேலை செய்யும் இடத்திலும் அவரின் அருகில் கூட வரவிடாமல் உயர்ந்த சாதி என சொல்லிக்கொள்பவர்களால் நடத்தப்பட்டார். இதனால் இந்த அநீதியை ஒழிக்க எண்ணினார். சட்டத்தின் மூலம் ஒழிக்கமுடியும் என்ற நம்பிக்கையில் சட்ட உருவாக்க பணிகளில் ஈடுபட்டார். என் வகுப்பில் உள்ள சரணி ஸ்ரீ , ஸ்ரீராம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கதையைப் படித்து இப்படிதான் கூறினார்கள். விட்டுப்போன கதை நிகழ்வுகளைக் கலையமுதுவும், பாலாவும் பகிர்ந்து கொண்டனர். இந்தக் கதையில் மாணவர்களிடம் தாக்கத்தை உருவாக்கியது அவர்கள் எளிதில் தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்த சிறுவயது பீம் தான். யாருக்கெல்லாம் இந்தக் கதை பிடித்தது என்ற போது அனைவரும் கையை உயர்த்தினர், சரணிஸ்ரீயை தவிர. "மிஸ் பீமை அவங்க அப்படி மோசமா நடத்தினது எனக்குப் பிடிக்கலை மிஸ். யார் மிஸ் இந்தச் சாதியை உருவாக்கினாங்க? என்றாள். அடுத்தடுத்த அவளது கேள்விகளின் ஆழம் என்னை யோசிக்க வைத்தது. அவளது கேள்விகளுடன் மற்ற குழந்தைகளின் சாதிய அமைப்பு குறித்த கேள்விகளும் என்னைத் திணறச்செய்தது.

சமுதாயத்தில்  சாதிய ஏற்றத்தாழ்வுகள் வேரோடிப் புதைந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏன் என்று கேள்வி கேட்க என் மாணவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். கல்வி அறிவும், சம உரிமையும், சட்டமும் ஏணிப்படியின் உச்சத்தை அடைய உதவும். ஏணிப்படியின் எந்த நிலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும் உணரத் துவங்கிவிட்டனர். இதற்கான பல்வேறூரையாடல்கள் வகுப்பறையில் நிகழ்த்த வேண்டியியிருந்தது.

அவர்களாகவே கஸ்தூரிபாய் கதையை எடுத்து வாசிக்கத் துவங்கினர். நாடகமாக மாற்றி நடித்து என்னை வியப்பில் ஆழ்த்தினர். துணிச்சல் மிக்க கஸ்தூரியை என் மாணவர்கள் மதிக்கத் துவங்கிவிட்டனர்.

THE HELEN KELLER என்ற ஆங்கிலப்பாடத்திற்காக மாற்றுத்திறனுடையவர்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதும்,   சமூகத்தில் அவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதையும், ‘அவர்கள் மாற்றுத்திறன் உடையவர்கள்’ என்பதையும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நாடகமாக மாற்றினோம். ஒரு குழந்தை பிறந்தது முதல் உடல் நிலை சரியாக இல்லை என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது ‘இந்தக்குழந்தை அதிக நாள் உயிருடன் இருக்காது’ என்று கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைக்குக் கண்ணும் தெரியாது காதும் கேட்கவில்லை என்று பின்னர்த் தெரிகிறது. சுல்லிவன் என்ற ஆசிரியர் சிறப்பாகக் கல்வி கொடுத்து அந்தக் குழந்தையின் வாழ்வை முன்னேற்றுகிறார். வகுப்புக் குழந்தைகள் அனைவரும் ஹெலன் குழு, சுல்லிவன் குழு என இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். நாடகத்தில் தங்கள் பாத்திரம் தங்களுக்கான வசனங்களை அவர்கள் தங்கள் குழுக்களில் கலந்துரையாடி முடிவு செய்தனர். மாற்றுத்திறனாளியாக நடிக்கும்பொழுது தாங்களே மாற்றுத்திறனாளிகளின் இன்னல்களையும் அதனை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்றும் புரிந்து கொண்டனர். அவர்களின் நடிப்பில் மாற்றுத்திறனுடைய ஹெலன் மீது அவர்களுக்கு இருந்த மரியாதையையும் அன்பையும் பார்க்க முடிந்தது.  அதன் இன்னொரு பகுதியாக இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது. எந்த வேறுபாடும் இன்றி மனிதர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர்.

சூழ்நிலையியல் பாடத்தில் 'changing times' என்ற தலைப்பில் வீடுகள் குறித்த ஒரு செயல்திட்டத்தை மேற்கொண்டோம். தங்கள் ஊரில் உள்ள வெவ்வேறு வகையான வீடுகள் பற்றி அறிய மாணவர்களுடன் இணைந்து ஊர் மக்களுடன் நேரடியான உரையாடல் அனுபவத்தைப் பெற்றனர். பணம் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு காரணியாக உள்ளது என்பதையும், வீடுகள் அதனால் வெவ்வேறு வகைகளில் இருப்பதையும் அறிந்தனர். ஒரு கண் பார்வைக்குறைபாடு உடைய முதிய தம்பதிகளுடன் மாணவர்கள் உரையாட நேர்ந்தது. அவர்களின் சிறிய குடிசை வீடு  மிகவும் சிதலமடைந்து தார்பாயின் கூரையால் மூடப்பட்டிருந்தது. அவ்விருவரும் மாணவர்களிடம் தங்கள் குறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.  அந்த முதிய தம்பதிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என இந்தப் பிஞ்சு குழந்தைகளின் மனதில் எண்ணம் தோன்றி அதை வகுப்பில் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்காக உதவி கேட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதலாம் எனவும், அவர்களின் வாழ்க்கை நிலையை ஒரு கட்டுரையாக எழுதலாம் எனவும், அந்த வீட்டையும் அந்தத் தாத்தா பாட்டியையும் படமாக வரையலாம் எனவும் வகுப்பில் கலந்துரையாடி முடிவு செய்தனர். ஹெலன் கெல்லர் பாடத்தில் அவர்கள் உணர்ந்த விஷயங்களை நேரில் பார்த்ததோடு அதற்கான தீர்வுகள் பற்றியும் யோசித்தனர்.

‘தமிழன் இதயம்’ - என்ற இராமலிங்கனார் பாடலை நடத்தும் போது பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் தமிழ் மற்றும் தமிழர்கள் பற்று மிக்க பாடலையும் குழுவாகப் பாடப்பழகினர். 'தமிழுக்கு அமுதென்று பேர்', ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே', 'பாரத சமுதாயம் வாழ்கவே' போன்ற பாடல்வரிகளைப் அச்சடித்து நகலாக்கி அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இப்பாடல்களைக் குழுவாகப் பாடிமகிழ்ந்தனர்.

சமூகம் மீதான என் மாணவர்களின் பார்வை விசாலமடையத் தொடங்கியிருக்கிறது. நீள்கனவு மாணவர்களின் நீண்ட கனவுகளுக்கு அஸ்திவாரம் போடத்துவங்கிவிட்டது. மாணவர்களின் தேவைகளுக்காக நான் தேடலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன்.மீண்டும் மீண்டும் என்னை வாசிப்பிற்குள்ளும், கலந்துரையாடலுக்குள்ளும் என் மாணவர்கள் என்னைப் பயணம் செய்ய வைக்கிறார்கள். சமூகம் குறித்தான பொதுசனப் பார்வையிலிருந்து விலகி ஒரு பொறுப்புமிக்க ஆசிரியராக உற்று நோக்கத் துவங்கிவிட்டேன்.

Teacher: சுபாஷினி, தொ. ப. ஆ, அ. மே. ப நோனாங்குப்பம்

Grade: 
3, 4, 5, 6, 7

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment