Towards a just, equitable, humane and sustainable society

கதைகளின் பெருவிழா

0
No votes yet
0
Post a comment

சிறப்புக்கூறுகள்:

  1. கதைகளின் வாயிலாக மொழித்திறன் வளர்ச்சியடைகிறது.
  2. கதைகளினால் மாணவர்களின் கற்பனைத்திறன் எல்லையற்றதாகிறது.
  3. குழந்தைகளிடம் கதைகூறுதல் என்னும்  இயல்பான நிகழ்வு வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றன.
  4. குழந்தைகளுக்கு இவ்வுலகின் அனைத்துமே உயிருள்ளதாக அமைவதால் அவர்கள் அனைத்துப் பொருட்களோடும் உரையாடுகிறார்கள்.

ஒரு கரும்பலகை, நான்கு குழந்தைகள், கையில் சுண்ணக்கட்டித் துண்டோடு... பதினைந்து நிமிடம் கழித்து அழகோவியமாய் காட்சியளித்தக் கரும்பலகை. ஆங்காங்கே குழந்தைகள் வரைந்த கோடுகள், வளைவுகள், சிறுசிறு முட்டைகள், வெவ்வேறு உருவங்கள், படங்கள், நடுநடுவே குழந்தைகள் பேசிக்கொண்ட சொற்றொடர்கள் என அனைத்தையும் ரசித்தவளாய் நான் உருகி உட்கார்ந்த நிலையில், மொழி குழந்தைகளின் பேச்சில் விளையாடுவதைக் கண்டேன். வரைந்ததை மனதிலும் கேமராவிலும் படம் பிடித்தேன்.

    மொழி வளர்ச்சி என்பது பிறப்பில் தொடங்கி வியக்கக்கூடிய வேகத்துடன் பல பிரிவுகள் அடங்கியதாக உள்ளது. வட்டம் V-ல், L.K.G முதல் V-ம் வகுப்பு வரை கொண்டது எங்கள் அகரம் அரசு தொடக்கப் பள்ளி. பெரும்பாலும் குழந்தைகள் அவரவர் தேவைகளையும்ஆசைகளையும்ஆயிரமாயிரம் கேள்விகள் மூலம் நமக்குப் புரியவைப்பார்கள். எம் பள்ளி குழந்தைகளும் அவ்வண்ணமே.குழந்தைகளைப்பாடப் புத்தகங்களைத் தாண்டி பிற செயல்பாடுகள் மூலம் உடல் வளர்ச்சி, ஐம்புலன் இயக்க வளர்ச்சி, அறிவுத்திறன் வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சமூக மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி, மன எழுச்சி மற்றும் ரசனை வளர்ச்சி ஆகியவற்றை வளப்படுத்தி செம்மைப்படுத்த எண்ணினேன்.  இக்கல்வியாண்டின் (2017-18) முதல் SMC – PTA கூட்டத்தில் இவ்வாண்டிற்கான திட்டத்தை வரையறுக்கும் போதே எம் பள்ளியின் தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் திருமதி. T.பவானி மற்றும் திருமதி. J. தரணி ஆகியோருடன் கலந்துரையாடி ‘வாசிப்பு திருவிழா’ நடத்துவது குறித்துப் பெற்றோர்களிடமும், குழு உறுப்பினர்களிடமும் உரையாடினோம்.இதைப்பற்றி எம் பள்ளி குழந்தைகளிடமும் விளக்கிக் கூறினேன். ‘பிள்ளைங்க நல்லா வரனும் Miss, அதுக்கு என்னலாம் செய்யனுமோ எல்லா செய்யுங்க Miss’ என்று தங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர். பின்

  • முதல் பருவத்தில்'அறிவியல் திருவிழா’
  • இரண்டாவது பருவத்தில், L.K.G முதல் III ஆம் வகுப்பு வரை'Reading day via phonetic way’ஆங்கில வாசிப்பு திருவிழா,
  • மூன்றாவது பருவத்தில் 'கதைகள் திருவிழா’ என முடிவெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு விழாவிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. குழந்தைகள் கற்று கற்பிக்கவும் செய்தனர்.பல தருணங்களில் எங்கள் குழந்தைகளே எங்களுக்கு ஆசானாக இருந்தனர்.  எதைப் பார்த்தாலும் அதை வைத்துக் கதை சொல்லும் குழந்தைகள் எம்பள்ளியில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.“பள்ளி நேரம் முடிந்தும் வீட்டுக்குப் போகாம என்னடா பன்ற” என்று நான் கேட்க,இரண்டாம் வகுப்பு குழந்தை ஒன்று,“இருங்க Miss, செடிகிட்ட பேசிகிட்டு இருக்கேன்” என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நொடியில் என்னை அசத்திய அக்குழந்தையின் பதிலைப்  பிற ஆசிரியர்களிடம் பகிர அடுத்த நாளே 'கதைகள் திருவிழா’விற்கு அடித்தளம் போட்டோம்.

அந்தந்த குழந்தைகளுக்குத் தெரிந்த, பிடித்தக் கதைகளை முதலில் கேட்டோம். கொஞ்சும் தமிழிலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் கதைகளைக் கூறினர். அவரவர் எந்த மொழியில் கதை கூற விழைகிறார்கள் என்பதையும் கேட்டறிந்தோம். பட்டியல் தயாரித்து சுவரில் மாட்டினோம். பின் குரல் ஏற்றத்தாழ்வு, முகபாவங்கள், உடல் அசைவுகள் முதலிய கதையிலுள்ள அம்சங்களை,குழந்தைகளுக்குச்செய்து காட்டினோம். ஒருபக்கம் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் அவரவர் கதைகளுக்கு மெருகேற்றினர்; மறுபக்கம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கதை காட்சியமைப்பை உருவாக்க ஆசிரியர்கள் நாங்கள் மண்டையை உடைத்துக் கொண்டும் விவாதம் செய்தும் பல புத்தகங்கள், வலைதளங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தும் ஒரு முடிவுக்கு வந்தோம். ஒவ்வொரு கதையையும் காட்சியமைத்தல், அதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன என்பதைப்பட்டியலிட்டு மாட்டினோம்.  அதற்கே ஒரு மாதம் ஓடியது. நடுவில் மழலையர் விழா, ஆண்டு Inspection (ஆய்வு) வேறு. அப்பாடா! என்று அனைத்தையும் செம்மையாக முடித்துக் கடந்தோம். இறுதியாக மார்ச் இரண்டாவது வாரத்தில் காட்சிப்பொருள்கள் செய்யத் தொடங்கினோம்.விழாவிற்குப் பொதுவாகத் தேவைப்படும் உபகரணங்களை வாங்கினோம். அவரவர் வீட்டில் உள்ள  சிறு அட்டைப்பெட்டியிலிருந்து பெரிய குளிர்சாதன அட்டைப்பெட்டி வரை அனைத்தையும் சேகரித்தோம். தையற் கடையில் வீணாக இருக்கும் வெட்டப்பட்ட துணிகள், நூல் கண்டுகள், நம் சமையலறையில் இருக்கும் காலி நெய் டப்பாக்கள் மற்றும் Surf-Excel, Talcum powder டப்பாக்கள், மரத்துகள்கள், Shuttle cock வைக்கும் உருள் டப்பாக்கள், துடைப்பக் குச்சிகள், ஊசுடு ஏரி வழியில் கொட்டிக்கிடக்கும் கூழாங்கற்கள் இன்னும் பற்பல பொருட்களையும் கொண்டு வந்து குவித்தோம். குழந்தைகளும் அவரவர் பங்கிற்கு பென்சில் டப்பாக்கள், களிமண் மூட்டைகள், Calendar அட்டைகள், புடவை அட்டைகள் என்று எடுத்துக்கொண்டு வந்திருந்தனர்.  காட்சியமைப்பை அந்தந்த குழந்தைகளை வைத்துக்கொண்டே செய்தோம். எண்ணிலடங்கா யோசனைகளை ஆசிரியர்கள் கூற, குழந்தைகளும் எத்தனையோ குறுக்குக் கேள்விகளைக் கேட்க, அதற்கேற்றாற்போல் மீண்டும் காட்சிகளை மாற்றியமைக்க என பன்னிரண்டு நாட்கள் உருண்டோடின.

'கதைகள் திருவிழா” வைக்க SMC -PTA கூட்டங்களில் நாள் குறிக்கலானது. ஏப்ரல் 5,6–ம் தேதி நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. பள்ளித் துணை ஆய்வாளர் வட்டம்-V திரு S.பக்கிரிசாமி அவர்களிடம் எங்களின் விழா பற்றிக் கூற,அவர் ஒப்புதல் தெரிவித்தார்.மார்ச் இறுதிவாரம் அட்டைப்பெட்டிகள் வீடுகளாக, Shuttle cock பெட்டிகள் விலங்குகள் பறவைகளாக, துடைப்பக் குச்சிகள் வேலிகளாக, Ice-creamகுச்சிகள் ஒரு வீட்டின் அறையாக, குளிர்சாதனப்பெட்டியின் அட்டைப்பெட்டி  வீட்டின் அறையாக, தொலைக்காட்சி பெட்டி Puppet Theatre–ஆக,Paper cupவீடுகளாக பாணிபூரி தட்டு கொக்கு, கௌதாரியாக, Woollen நூல் புல்வெளி/ கோழிக்குஞ்சுகளாக, நெய் டப்பாக்கள் பன்றிகளாக, பஞ்சு முயலாக இன்னும் பல பொருட்கள் பலப்பலவாக மாறின. பொருட்கள் மட்டுமா மாறின; ஆம் குழந்தைகளும் கதை ஆசிரியர்களாக, பொம்மலாட்ட கைப்பாவை வல்லுநர்களாக மாறினர்.அப்பப்பா... என்று பெருமூச்சு விட்டோம்.  இதற்கிடையில் Story Map, Story road, Story Tower, Story Sequencing, Story Ladder, Story Stores, Story Structure, Writing என்று Iமுதல் III வகுப்பு குழந்தைகள் கதைகளை எழுதவும் வரையவும் செய்தனர். Story Gap Fillingசெயல்பாட்டின் மூலம் நூல்கண்டு வைத்து Story Web உருவாக்கினர்.வகுப்பறையைக் கதை திரையரங்கமாக மாற்றினோம். திரும்பும் திசையெங்கும் கண்கவர் கதைப்பாத்திரங்கள், ஒவ்வொரு புள்ளியிலும் ஒளிந்திருக்கும் கதைகள், ஆங்காங்கே கதைக் கூறுதல் / கேட்டல் ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்ட பதாகைகள் என்ற வேறு உலகமாகக் காட்சியளித்தது எங்களது பள்ளிக்கூடம். ஏப்ரல் 5, காலை 7.30 மணிக்குத் தோரணங்கள் கட்டி, வரவேற்பு மேசையில் பூ, கற்கண்டு வைத்துக் குழந்தைகளைக் கொண்டாட தயாராகிவிட்டோம். ஊர்பஞ்சாயத்துத் தலைவர், வட்டம்-V பள்ளித் துணை ஆய்வாளர் இன்னும் பல ஆசிரியர்கள்,  குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரள விழா தொடங்கியது. மழலை மொழியில் பொம்மைகள், கைப்பாவைகளை ஆட்டியும் அசைத்தும் மடைத்திறந்த வெள்ளமெனவும் சலசல வென்ற நீரோடையாகவும் மென்மையான தென்றலெனவும் வெவ்வேறு பரிணாமங்களில் குழந்தைகள் அவரவர் கதைகளைக் கூறிக் கொண்டிருந்தனர்.அத்தனை குழந்தைகளும் உடலளவிலும்  உள்ளத்தளவிலும் ஆனந்தமாய் இருந்ததை, இதுவரையிலும் இருப்பதை எங்களால் உணர முடிகிறது. குழந்தைகளையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுகள் வழங்கப்பட்டது.  தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர் நண்பர்களும் எங்களோடு இணைந்திருந்தனர்.பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், தனியார்ப்பள்ளி குழந்தைகள் என வந்தவாரே இருந்தனர். முகமெல்லாம் புன்னகை! பூத்துக்குலுங்கும் பூக்களாய் குழந்தைகள், பரபரப்பாகவே பூக்களைச் சுற்றும் தேனீக்களாய் எம் பள்ளி ஆசிரியைகள்... ஊழியர் அக்காக்கள்... என எங்களுக்கான இன்னொரு உலகத்தில் அன்றைய தினம் நிறைவுற்றது.

Author: அனிதா, அ.தொ.ப, அ.தொ.ப, அகரம், புதுச்சேரி.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment