Towards a just, equitable, humane and sustainable society

கதை சொல்லி மொழி வளர்த்தேன்


கற்பனைத் திறனுக்கும் சிந்தனை ஆற்றலுக்கும் தீனி போடும் வாய்ப்பு

இக்கல்வியாண்டு முதலே எனது வகுப்பில் கதைகளும் பாடல்களும் முக்கிய இடத்தை வகித்தன. முதல் வகுப்பே என்றாலும் கடந்த இரு மாதங்களாகக் கதை சொல்லவோ, பாடப்புத்தகப் பாடலைத் தவிர வேறு பாடல்களைப் பாடவோ முடியவில்லை. பாடபுத்தகங்களையும் பயிற்சி ஏடுகளையும் மட்டுமே பார்த்து, எழுதி, வாசித்துச் சலித்துப்போன குழந்தைகள் முன்பு போல் கதை கூறியே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினர். குழந்தைகளின் அன்புத் தொல்லை தாங்காமல் மீண்டும் கதை உலகத்திற்குள் பயணமானோம்.

பொதுவாகவே கதைகள் குழந்தைகளை நம்மோடு கட்டிப் போடும் கருவி. அவர்களின் கற்பனைத் திறனுக்கும் சிந்தனை ஆற்றலுக்கும் தீனி போடும் வாய்ப்பு கதைகளில் ஏராளம். இம்முறை எடுத்துக் கொண்ட கதை ‘கஜபதி குலபதி’
யானை பற்றிய உரையாடல், பாடல்:
கதை சொல்வதற்கு முன் யானையின் கால்கள், தும்பிக்கை, காது போன்ற யானையின் உருவ அமைப்பைப் பற்றிக் கலந்துரையாடினோம். யானை என்றாலே குழந்தைகள் மகிழ்ச்சியுடன் உரையாடுகின்றனர். யானையைப் பார்த்துள்ளீர்களா, யானையின் மேல் உட்கார்ந்து சென்றது உண்டா, காது எப்படி இருக்கும், கால் எப்படி இருக்கும் போன்ற கேள்விகளுடன் உரையாடல் தொடர்ந்தது. 
யானை பற்றிய பாடல் ஒன்றை மடிக்கணினியில் போட்டுக் காட்டிய பின் மாணவர்கள் பாடலைப் பலமுறை பாடினர். யானை பாடலைப் பாடிக்கொண்டே வட்டமாக யானை போன்று உடலை அசைத்து, காதை ஆட்டி, தும்பிக்கையைத் தூக்கி, நடந்து சென்றனர். 
கதைகூறல்:
கதைப்புத்தகத்தின் மேல் அட்டையைக் காட்டிய உடன் வகுப்பறையில் ஒரே சத்தம். அனைத்து குழந்தைகளும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர். சிரிப்பொலி அடங்கியவுடன் கதையின் தலைப்பைக் கூறினேன். கஜபதி குலபதி அப்படினு ஒரு யானை என்றதும் குழந்தைகள் முகத்தில் ஒரு குழப்பம். “ஒரு யானைக்கு ரெண்டு பேரா…!” என்றனர். கஜபதி குலபதி என்பது ஒரே பெயர் தான் என்று கூறிக் கதையைத் தொடர்ந்தேன். 

 

கதை: ஊரில் கஜபதி குலபதி என்ற ஒரு யானை இருந்தது. ஒருநாள் வெயில் அதிகமாக இருந்தது. அந்தச்சூட்டைக் கஜபதி குலபதியால் தாங்க முடியவில்லை. அதுபோலவே வாழைப்பழ வியாபாரி, தபால்காரன், பூக்காரி, டீச்சரம்மா ஆகியோருக்கும் இருந்தது. புத்திசாலி பாட்டியம்மா எல்லோரையும் குளத்தில் போய் குளிக்கச்சொன்னார். அனைவரும் குளத்தில் குதித்தனர்; சிறுவர்களும் பசுவும் கூட. கடைசியாகக் கஜபதி குலபதி குளத்தில் குதித்தான். குளத்தில் இருந்த அனைவரும் வெளியே பறந்தனர். கஜபதி குலபதி விளையாடக் குளத்தில் யாருமே இல்லை. புத்திசாலி பாட்டியம்மா முதலில் கஜபதி குலபதி குதிக்கட்டும். பின் மற்றவர் குதிக்கலாம் என்றார். அன்று முதல் அப்படியே நடந்தது.

யானை குளத்தில் குதித்ததைச் சொல்லி முடித்த உடன் வாழைப்பழ வியாபாரி, தபால்காரன், பூக்காரி, டீச்சரம்மா, சிறுவர்கள் ஆகியோர் இருந்த இடத்தைப் புத்தகத்தில் காட்டினேன். என் குழந்தைகள் அனைவரும் உண்டாக்கிய சிரிப்பொலி விண்ணைத் தொட்டது. அந்த ஒலி அடங்குவதற்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அப்படங்களில் சில இங்கே. 

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி, ஒவ்வொரு படத்தையும் காட்டி, சில  வினாக்களை எழுப்பி, உரையாடி, கதையை முடித்தேன்.  குழந்தைகளிடம் கேட்ட வினாக்களில் சில,
1. எல்லாரும் ‘வேணாண்னு’ ஏன் கத்தினாங்க?
யான நம்மல நசுக்கிடும்ன்னு எல்லாரும் பயந்துட்டாங்க 
2. கொளத்துல யான குதிச்சதும் என்ன நடந்திருக்கும்?
எல்லாரும் நசுங்கிட்டு இருப்பாங்க. எல்லாரு கை, கால் எல்லாம் ஒடஞ்சி போயிடும்
3. யானக்கி எல்லாரோடையும் வெளயாட ஆச. என்ன செய்யிறது?
யான வெளிய வந்தப்புறம் வெளயாடலாம். எல்லாருக்கும் பயமா இருக்கும். யாருமே யானை கூட இனிமே வெளயாட மாட்டாங்க. யான ‘தொபக்கடீர்ன்னு’ குதிக்காம மெதுவா கொளத்துல எறங்கி வரனும்.
4. ஒவ்வொருத்தரும் குதிக்கும் போது வேறவேற சத்தம் கேட்டது ஏன்?
எல்லாரும் ஸ்பீடா குதிக்கிரதால. எல்லாரும் வேறவேற ஸ்பீடா குதிக்கிறதால.
5. பாட்டியை ஏன் எல்லாரும் புத்திசாலி பாட்டியம்மான்னு சொல்றாங்க?

          
ஏன்னா, அவங்கதான் நெரைய ஐடியா குடுக்குறாங்க. அவங்க சொன்ன மாதிரி பர்ஸ்ட் யான குதிச்சிது. அப்புறமா மத்தவங்க எல்லாரும் குதிச்சாங்க.  இப்போ இல்லாரும் ஜாலியா கொளத்துல வெளயாடுறாங்க 
கதை சொல்லி முடித்தவுடன் நான் கதைப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப என் குழந்தைகள் Chain story telling முறையில் ஒவ்வொருவரும் ஒரு வரியைத் தொடர்ச்சியாகக் கூறிக் கதையை முடித்தனர்.
தொடர்பணி:
ஆசிரியரின் குறிப்புகளைக் கேட்டுப் படம் வரைதல் – பானை போன்ற பெரிய வயிறு, தூண்கள் போன்ற நான்கு கால்கள், சிறிய வால், தர்பூசணி போன்ற தலை, முறம் போன்ற இரண்டு காதுகள், கோலிக்குண்டு போன்ற இரு கண்கள், நீண்ட குழல் போன்ற மூக்கு, அதிலிருந்து இரண்டு கொம்புகள். இவ்வாறு குறிப்புகளைக் கேட்டு ஒவ்வொன்றாக வரைய, இறுதியாக மாணவர்கள் அனைவரும் ஒரு யானையை வரைந்திருந்தனர். ஒவ்வொரு யானையும் வித்தியாசமாக அமைத்தது.

    

முறையாகத் திட்டமிட்டு, சரியான கதையைத் தேர்ந்தெடுத்து, உணர்வோடு கூறி, ஆர்வத்தைக் கிளரும் செயல்பாடுகளைக் கொடுத்து, குழந்தைகளைப் பங்கேற்கச் செய்த இந்த வகுப்பு எனக்கு மன நிறைவைத் தந்தது. முதல் வகுப்புக் குழந்தைகளால் இவ்வளவு தூரம் சிந்திக்க முடியும் என்றால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது எனது கடமையல்லவா! இனி நிறுத்தக் கூடாது, முடிந்த வரை வகுப்பில் கதை கூற வேண்டும் என முடிவு செய்தேன்.

Teacher: S. kavitha

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 2