Towards a just, equitable, humane and sustainable society

சூழலியல் பாடத்தில் களப்பயணத்தின் முக்கியத்துவம்

0
No votes yet
0
Post a comment

ஒரு ஆசிரியராக எனது ஆர்வங்கள்

  • மாணவர்களைச் சமூக நோக்குடன் கற்றலில் ஈடுபடச் செய்தல்.
  • இனிமையான கற்றல் சூழலில் மாணவர்களைக் கற்கச் செய்தல்.

சூழ்நிலையியல் பாடத்தில் மாணவர்களின் கற்றல்- கற்பித்தலை, சிறப்படையச் செய்ய சூழலோடு சென்று கற்றல் சிறந்த பயனைத் தரும் என்பது எனது எண்ணம். எனவே எந்தெந்த பாடங்களுக்கெல்லாம் இயற்கை சூழலோடு கற்பிக்க முடியுமோ அதற்கெல்லாம் நான் முயற்சி செய்தேன்.

பள்ளி அருகில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதி, மண்பானை செய்யும் இடம், தபால் நிலையம் போன்ற இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றேன். தபால் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அனுபவங்களைப் பற்றி இங்குக் கூற உள்ளேன்.

களப்பயணம் மூலம் கற்றல்

  • ஒரு வகுப்பறையில் மாணவர்களிடம் பலமுறை தகவல்களைக் கூறுவதை விட அந்த இடத்தினை நேரில் சென்று பார்ப்பது கண்டிப்பாக எளிதில் மனதில் பதியும் என்பதை எண்ணியே மாணவர்களைத் தபால் நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன்.
  • 45 நிமிடங்கள் மாணவர்களை ஒரே இடத்தில் அமரச் செய்து கற்பிப்பது ஆசிரியர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. இது போன்ற நேரடி அனுபவங்கள் மாணவர்களிடம் நல்ல புரிதலை ஏற்படுத்தும்.

தபால் நிலையத்திற்கு ஒரு பயணம்

தபால் நிலையத்தின் பணிகளை அறியத் தபால் நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். பள்ளியைச் சுற்றி உள்ள தபால் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அங்குச் சென்று அனுமதி பெற்று வந்தேன். பின்னர் மாணவர்களிடம் எங்கு, எதற்காக, எப்பொழுது செல்லப் போகிறோம், என்பதனைத் தெரியப்படுத்தி பெற்றோர்களிடமிருந்து அனுமதி பெற்று மாணவர்களைத் தபால் நிலையம் அழைத்துச் சென்றேன்.

பேருந்தில் தபால் நிலையம் செல்லும் வழியில் மாணவர்களிடம் என்னென்ன வினாக்கள் கேட்கலாம் என்பதனைக் கலந்துரையாடியபடி சென்றோம்.

தபால் நிலையத்தில் எங்களுக்காக அலுவலர் காத்திருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தபால் நிலையம் தொடர்பான பின்வரும் தகவல்களை விளக்கினார்.

  • தபால் நிலையம் குறியீடு
  • stamp விலை, அதிலுள்ள படம் stamp ஒட்டுவதற்கான காரணம்.
  • கடித  வகை
  • சேமிப்பு முறைகள்
  • படிவத்தை எப்படி நிரப்புவது
  • பின்னர் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைக் கூறினார்கள்.
  • வாழ்த்து மடல் அனுப்பலாம்?
  • எவ்வாறு பணம் சேமிப்பது?
  • ஏன் பலவித stamp?

அலுவலர் அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். பின்னர் பள்ளியை அடைந்தோம்.

கடிதம் எழுதும் பழக்கத்தைக் கொண்டு வர என் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினேன். அக்கடிதத்தை மாணவர்கள் கண்ட போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது. இது மாணவர்களை அவர்களின் நண்பர்களுக்குக் கடிதம் எழுதத் தூண்டியது.

இந்த நேரடி அனுபவம் மூலம்

  • மாணவர்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் தபால் நிலையம் தொடர்பான விவரங்களை அறிந்தனர்.
  • ஒன்றாகச் சேர்ந்து செல்லும் போது மாணவர்கள் பாட அறிவை மட்டும் அல்லாமல் சக மாணவர்களுடன் எவ்வாறு ஒன்றாகச் செல்ல வேண்டும், பொது இடத்தில் எவ்வாறு பழக வேண்டுமென்பதையும் அறிந்தனர்.
  • களப்பயணம் சமூகத்தோடு உரையாடலும், மூத்தவர்களோடு உரையாடும் விதமும், சமூகத்தை உற்று நோக்கலுக்குமான பொன்னான வாய்ப்பாக  அமைந்தது. சூழலியல் பாடத்திற்குக் களப்பயணம் இன்றியமையாததாகிறது.
  • குழு கற்றல், குழு விவாதம் மற்றும் பகிர்தல் போன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்குள்ளும் ஆசிரியர்களோடும் நடைபெற்றது.
  • ஆசிரியராகிய நான் பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது எனக்கொரு உற்சாகத்தையும் தந்தது.

இந்த மாதிரியான பல்வேறு களப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வயல் வெளி, கரும்புத் தோட்டம் மற்றும் பானை செயல்முறை அதில் சில உதாரணங்கள்.

Grade: 
4, 5

Subject: 
ECE

Term: Term 3

0
No votes yet
0
Post a comment