Towards a just, equitable, humane and sustainable society

சூழலியல் பாடத்தில் வகுப்பறை செயல்பாடுகள்

0
No votes yet
0
Post a comment

எனது பள்ளி

எனது பள்ளியில் 20 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் உள்ளனர். அனைத்து மாணவர்களும் பொருளாதார நிலையில் பின் தங்கியே உள்ளனர். எங்கள் பள்ளியில் வரும் மாணவர்கள் அனைவரும் மெயின் ரோட்டைக் கடந்து வரும் நிலைமை தான் உள்ளது. பள்ளியில் வரும் மாணவர்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஆட்டோ வசதி ஏற்படுத்தி உள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாக அனுப்புவதற்கு மகிழ்கிறார்கள். இதை நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறோம்.

ஒரு ஆசிரியராக எனது ஆர்வங்கள்

        ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்

        சான்றோன் எனக்கேட்ட தாய்

இந்தத் திருக்குறளின் பொருள் ஒரு தாய்க்கு மட்டும் பொருந்தாது, என்னைப் பொறுத்தவரை ஓர் ஆசிரியர்க்கும் பொருந்தும். தன்னிடம் பயின்ற மாணவ-மாணவி வாழ்வில் நல்ல நிலையை அடைந்து நம்மை வந்து சந்தித்து 'நான் உங்கள் மாணவன்” என்று கூறும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

மாணவர்கள் தாமாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம் எனக்கு. அதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்க வாழ்வில் கற்றுக்கொள்ளும் செயல்களைப் பாடத்துடன் இணைத்துக் கற்பிப்பேன். முடிந்தவரை அவர்கள் வாயிலிருந்து விடை வரும்வரை கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பேன். படம் வரைந்து பாடப்பொருள் விளக்குவதில் ஆர்வம் மிகுதி.

கடந்த ஆண்டு நாங்கள் மேற்கண்ட யுத்திகள் - முயற்சிகள்

கடந்த கல்வியாண்டில் நாங்கள் பல முயற்சிகள் கையாண்டும் மாணவர்கள் எண்ணிக்கையில் அதிகம் வித்தியாசம் வரவில்லை. ஆனால் இருந்த எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது மட்டும் அல்லாமல் பெற்றோர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற முடிந்தது. மாலைப் பொழுதில் மாணவர்களுக்கு திருமதி புவனேஷ்வரி அவர்கள் யோகா பயிற்சி அளித்து வந்தார். கடந்த ஆண்டு விழாவில் இரண்டு மாணவிகள் ஆங்கிலத்தில் “எங்கள் பள்ளி” என்ற தலைப்பில் உரை வழங்கினர். இந்நிகழ்ச்சி பெற்றோர்களிடத்தில் நல்ல பாராட்டைப் பெற வைத்தது.

அனுபவப் பகிர்வு

கடந்த வருட வகுப்புப் பயிற்சிகளில் என்னை மிகவும் கவர்ந்த மற்றும் மாணவர்கள் மனமகிழ்ந்த பாடப்பகுதி “Foods we eat” மூன்றாம் வகுப்பு சூழ்நிலையியல் அறிவியல்.

நோக்கம்

  • மாணவர்கள் உணவு வகைகள் பற்றி அறிதல்
  • உணவுப் பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி அறிதல்
  • சமைத்த மற்றும் பச்சையாக உண்ணும் உணவுப்பொருள்களை அறிதல்

திட்டமிட்ட விதம்

பாடப் பகுதிக்கு ஏற்ப மாணவர்களைத் தாங்கள் வீட்டிலிருந்து பல்வகை உணவுகளைக் கொண்டு வரச்சொன்னேன். எனது பங்கிற்குச் சத்துமாவு பட்டாணி சுண்டல் மற்றும் பழங்கள் கீரைகள் போன்ற உணவுப்பொருள்களை எடுத்துச்சென்றேன்.

கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதலுக்கான யுத்திகளின் சுருக்கம்

மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வகுப்பை ஆரம்பித்தேன். அவர்களிடம் வினாக்கள் எழுப்பிக்கொண்டே இருந்தேன்.

(எ.கா) நேற்று இரவு என்ன சாப்பிட்டாய்

விடை: சப்பாத்தி

வினா: சப்பாத்தி செய்வதற்கு என்ன தேவை?

விடை: கோதுமை மாவு, தண்ணீர். உப்பு

பிறகு 'உணவைக் கண்டறிதல்” என்னும் விளையாட்டு விளையாடினோம். மாணவர்கள் உணவின் வாசனையை வைத்து முதலில் என்ன உணவு, அதன் ருசி, அதில் கலக்கப்பட்டு இருக்கும் உணவுப்பொருள் ஆகியவை குறித்துக்  கூற வேண்டும். இந்தச் செயலின் போது மாணவர்களின் கண்கள் கைக்குட்டையால் கட்டப்பட்டிருக்கும். இதற்கு மதிப்பெண்கள் கரும்பலகையில் கொடுத்தேன்.

ஒரு மாணவி தனக்குக் கொடுத்த உணவுப்பொருளை (சத்துமாவு) கண்டுபிடிக்கவில்லை. ஆதலால் மதிப்பெண் குறைந்து அவள் முகம் வாடியது. அன்று முதல் இது போன்ற போட்டிகளுக்கு நட்சத்திரம், பூ, ☺, போன்ற குறிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

இவ்வாறாக அவர்கள் உணவு வகைகள், சுவைகள், வயதிற்கு ஏற்ற உணவு எளிதில் செரிமானம் ஆகும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டனர்.

மேலும், உணவுப்பொருள்கள் உண்ணும் முறை அறிய வைப்பதற்குப் பச்சைக்காய்கறிகள் பழங்கள் பருப்பு வகைகள் கீரைகள் போன்றவற்றைப் பெட்டியில் போட்டு கண்களை மூடியவாறு ஒரு பொருளை எடுத்து அதனைத் தொட்டு உணர்ந்து அதன் பெயர் கூற வேண்டும். பின்பு அவர் கண்கள் திறந்து அவர் கையில் இருக்கும் பொருளைப் பார்த்து அதன் பெயர், அதனை அவர் எப்படி உண்ணுவார், அதன் நிறம், சுவை, அதிலிருக்கும் சத்து, பலன் ஆகியவற்றைக் கூற முயலவைத்தல்.

(எ.கா): உருளை – வேகவைத்து உண்ணுவேன், மாவுச்சத்து நிறைந்தது, சுவையாக இருக்கும்

கேரட்: வேகவைத்தும். பச்சையாகவும் உண்ணலாம், ஆரஞ்சு நிறம், சுவையாக இருக்கும். கண்பார்வைக்கு நல்லது.

இவ்வாறாகச் செய்யும் போது அவர்கள் தாங்கள் பயின்றவற்றைச் சூழ்நிலையுடன் இணைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் உண்ணும் போதும். கடைவீதிகளுக்குச் செல்லும் போதும். தாங்களாகவே உணவுப்பொருள்களை ஆராயத் தொடங்குகிறார்கள்.

வருங்காலத் திட்டம்

மாணவர் தாங்கள் கற்கும் பாடங்களைத் தங்கள் வாழ்வுடன் இணைத்துப் பார்க்கும் வகையில் கற்பிக்கும் முறைகளைக் கையாளுவதில் முயன்று வருகிறேன்.

க. அமலா, அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர், இடையார்பாளையம்

Grade: 
3

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment