Towards a just, equitable, humane and sustainable society

தமிழன் இதயம்

0
No votes yet
0
Post a comment

வாழ்வியல் மற்றும் அதன் திறன்கள் சார்ந்த பண்புகளை நம்மைச் சுற்றி உள்ள சூழலில் இருந்தே மாணவர்கள் அறிய ஒரு முயற்சி

‘தமிழன் இதயம்’ என்ற இப்பாடத்தில் தமிழர்களின் பெருமைகளைப் பேசுவதன் மூலம் வாழ்க்கை மற்றும் வாழ்வியல் திறன்களைப் பற்றி மாணவர்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. இதற்காக நம்மைச் சுற்றி வாழும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து கற்கும் ஒரு முயற்சியை இங்குப் பகிர்கிறேன்.

மாணவர்களுக்குத் தமிழர்களின் சிறப்புகளை விளக்கும் பாடலை இசையுடன் பாடிக் காண்பிக்கப்பட்டது. ஆர்வமுடன் பாடிய மாணவர்கள், தமிழர்கள் என்றால் என்ன அர்த்தம்? – என்ற வினாவை எழுப்பினர். தமிழர்களின் சிறப்புகளை ஒரு கதைத்தொகுப்பாக எடுத்துக்கூறி தமிழர்களின் பண்புகளை ஒரு சிறுநாடகமாக நடிக்கச்செய்தேன். இவ்வாறு செய்யும் போது மாணவர்களின் நடிக்கும்திறன், சிந்திக்கும்திறன் நிறைய வெளிவருவதை உணர்ந்தேன். மாணவர்களே தமிழர்களின் பண்புகளை (எ.கா. அனைத்து உயிர்களிடத்தும் அன்புடன் பழகுதல், பிறருக்கு உதவுதல்) உணர்த்தும் பல்வேறு நாடகங்களை உருவாக்கிநடித்தனர்.

அடுத்த முயற்சியாக தமிழ்ப்பெண்களைப் பற்றிய செய்திகளையும் அவர்கள் தங்கள் வாழ்வில் பட்ட துயரங்கள், மனவலிமை பற்றி எடுத்துக்கூறும் பொழுது யாரேனும் ஒருவருடைய உண்மை நிகழ்வுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் என்ன என்று சிந்தித்து, எம்பள்ளியில் பால்காய்ச்சுபவரான திருமதி. ராஜகுமாரி அவர்களை அழைத்து அவர்களுடனான ஒரு நேர்முகப்பகிர்வு நிகழ்வு நடத்திட முடிவு செய்து வகுப்பறைக்கு அழைத்துவந்தேன்.

மாணவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஆதலால்,  அனைவரும் எந்தவித இடையூறும் செய்யாமல் கவனித்தனர். சிலர் அவர்கள் கூறிய கதையைக்கேட்டு அழவும் செய்தனர்.

முதன்முறையாக வகுப்பறையில் ஓர் இருக்கையில் அமர அவர் சற்றே தயங்கினாலும் அவரின் வாழ்க்கை அனுபவத்தை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். இடையிடையே மாணவர்கள் சில வினாக்களைக் கேட்டு தங்கள் ஐயத்தைத் தீர்த்துக்கொண்டனர்.  ராஜகுமாரி தான் வளர்ந்த விதத்தையும், சின்னாத்தாள் பள்ளியில் படித்ததையும் 9 – ஆம் வகுப்புப் படிக்கும் பொழுது திருமணமானதையும் இரண்டு குழந்தைகள் பிறந்து கைக்குழந்தையாக இருக்கும் பொழுது கணவன் இறந்ததையும் குழந்தைகளை வளர்க்க நெசவு நெய்தும் கொசுவர்த்தித் தயாரிக்கும் கம்பெனியில் என ஓடிஓடி வேலை செய்தும் குழந்தைகளை ப் பெரியவர்களாக்கிய அனுபவத்தை அழகாக எடுத்துக் கூறினார்கள். அவர்களிடம் மாணவிகள் சிறுவயதில் விளையாடிய விளையாட்டு, சிறுவயது தோழி பற்றி எனப்பல கேள்விகள் கேட்டனர்.  மாணவிகளின் ஒவ்வொரு கேள்விக்கும் ராஜகுமாரியின் பதில் வியப்பாக இருந்தது. அவர்களின் அனுபவப்பகிர்வு முடிந்ததும் வகுப்பறையே கரவொலி எழுப்பி ஒரு தமிழ்ப்பெண்ணின் வீரதீரத்தைப் போராடி வெல்லும் மனவலிமையை எண்ணிப் பெருமகிழ்வு கொண்டனர்.

சரி, தெரிந்து கொண்டதை மனதில் பதிய வேறு என்ன செய்யலாம் என்று எண்ணிய போது, அவர் கூறிய கதையை ஒரு கதையாக மாற்றலாம் என்று மாணவர்களைக் கதையாக உருவாக்கச் சொன்னேன். அவர்கள் எழுதிய கதையைப் படிக்கப்படிக்க சுவாரஸ்யமாகவும் ஒவ்வொரு கதாசிரியரும் என் கண்முன்னே தெரிந்தனர். ஏனென்றால் மாணவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிலிருந்து வித்தியாசப்பட்டனர். சிலர் படக்கதையாக மாற்றியிருந்தனர் அப்படக்கதைகள் அக்கதாப்பாத்திரத்தைக் கண்முன்கொண்டு வந்தன.

மாணவர்கள் தயாரித்த  கதை மற்றும் படக்கதை

சரி கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன என்று மாணவர்களிடம் உரையாடிய போது தமிழ்ப்பெண் என்றாலே மனோதிடம் உடையவர்கள், தன்னம்பிக்கை நிறைந்தவர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள் என்று தமிழ்ப்பெண்களின் சிறப்புகளை எடுத்துக்கூறினர். ஒரு சாதாரணப் பெண்ணின் கதையைக் கேட்டே மாணவர்களின் மனதில் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது பெருமகிழ்வாக இருந்தது. பாடங்களைச் சாதாரண மனிதர்களின் வாழ்வியல் மூலமாகக் கொண்டு செல்வதன் மூலம் பாட நோக்கத்தைச் சுலபமாக அடைய முடியும் என்பதை உணர்ந்தேன்.

சரோஜினி நாயுடு போன்ற தமிழ்ப்பெண்களின் கதையைப் படிக்க மாணவர்களை உற்சாகப்படுத்தினேன் இப்பொழுது மாணவர்களின் சிந்திக்கும் திறன் சற்றே விரிவடைந்திருந்தது. கற்பூரப் புத்தியைக் கொண்ட எம்மாணவிகள் ஒரு புத்தகத்தைப் படித்தே கதை எழுதும் கதாசிரியர்களாக மாறினர்.

தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு என்று பேசினாலும் தமிழராகப் பெருமை கொள்வோம்.  ‘தமிழர் இதயம்’ பாடல் ஓர் எழுச்சி உணர்வை ஏற்படுத்தியது. எப்பொழுதுமே பாடலை இசையுடன் பாடும் எம்மழலைகள் இப்பாடலையும் இசையுடன் பாட கற்றுக் கொண்டனர்.

வகுப்பறையில் பாடினால் தமிழர்களின் சிறப்பு வகுப்பறையிலேயே முற்றுப்பெறும் என்பதற்காகக் காலை வழிபாட்டுக்கூட்டத்தில் குழந்தைகள் பாடினர். அவர்களின் குரல் காலைச்சூரியன் எட்டுத்திக்கும் பிரகாசிப்பது போல் பள்ளி வளாகம் முழுவதும் எதிரொலித்தது. பள்ளியிலுள்ள அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற மாணவர்கள் தமிழன் என்ற கம்பீரத்துடனும், பெருமையுடனும், மகிழ்வுடன் வகுப்பறைக்குச் சென்றனர்.

“தமிழன் என்றால் பெருமை, வீரம், சூரியன், வெற்றி, தீரம்! தமிழா தமிழா நிமிர்ந்து நில், எதற்கும் நீ துணிந்து செல், அநியாயத்தை நீ எதிர்த்து நில், எதிர்காலச் சமுதாயமே நீ எது வந்தாலும் மோதி நில், நம் நாட்டை நீ காத்து நில்”

என்று தமிழர்களின் உயிர் இரத்தத்தை மாணவர்களின் மனதில் பதியவைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

இவ்வாறு கல்வியின் பெருநோக்கமான வாழ்வியலைப்புரிந்து மேம்படுதல் என்பதும் ‘தமிழன் இதயம்’ பாடத்தின் பாடப்பொருளான பெருமை, துணிவு, கடின உழைப்பு, அன்பு ஆகியவை ராஜகுமாரியின் வாழ்க்கை மூலமாக மாணவர்களைச் சுலபமாக அடைந்தது. வாழ்க்கை பற்றியும் அதில் வரும் இன்பத்  துன்பங்கள் போராட்டங்கள் பற்றியும் அதை கடந்து செல்லும் மனதைரியம் நம் அருகே உள்ள ஒருவரின் வாழ்க்கையின் மூலம் மாணவர்கள் உணர வைக் கமுடிந்தது. ‘நீள்கனவி’ன் சமூகம் சார்ந்துவரும் பாடத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கமுடியும் என்பதை உணர்ந்தேன்.மேலும் வரும் பல பாடங்களின் நோக்கங்களை இவ்வாறு சுலபமாக அடைய இந்த அனுபவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Teacher: இரா.ஷாலினி ஷ்யாமளா, சவரிராயலு அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment