Towards a just, equitable, humane and sustainable society

திருக்குறள்


செயல்பாடுகள்:

  • திருக்குறளில் சொல்ல வரும் கருத்துகள் தொடர்பான விழிப்புணர்வுக் கதைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்
  • திருக்குறளில் சொல்ல வரும் கருத்தைப் புரிந்து கொண்டு மற்றும் தன் வாழ்வோடு தொடர்பு படுத்துதல்.
  • தன் சொந்த அனுபவத்திலிருந்து கதை கூறுதல் மற்றும் அதை படமாக வரைதல்.
  • பாடப்புத்தகத்தில் உள்ள திருக்குறளைப் புரிந்து கொண்டு, சொற்களஞ்சியம் பெருக்குதல்

முதல் நாள்:

செயல்பாடு -1: திருக்குறளில் சொல்ல வரும் கருத்துகள் தொடர்பான விழிப்புணர்வுக் கதைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்

தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள்  ஏற்கனவே தெரிந்துக் கொண்டுள்ளனரா என அறிந்து கொள்ள, மாணவர்களிடம்  கதை சொல்லலாம்  என முடிவு செய்தேன்.

வகுப்பறைக்கு வந்தவுடன், மாணவர்களிடம் காடு பற்றி தெரியுமா? என்று கேட்டேன். மாணவர்கள் விழித்தனர். திரும்பவும் ‘கார்டு’ இல்ல ‘காடு’ என்று கூறினேன். மாணவர்கள்” மரங்கள், பறவைகள் , விலங்குகள் இருப்பது தான் காடு”, என்று கூறினர். காட்டில் என்ன இருக்கும் என்று திரும்ப கேட்டதற்கு, அனைவரும் சத்தமாக, ‘மரங்கள் இருக்கும்’ என்று கூறினர். மரத்தில் மேல் பறவை உட்கார்ந்து சத்தம் போட்ட உங்களுக்கு பிடிக்குமா? என்று கேட்டேன். மாணவர்கள் பிடிக்கும் என்று கூறினர். இப்படித்தான் ஒரு ஊர்ல மரங்கள் , பறவைகள் எல்லாம் இருந்து ஊர் செழிப்பா இருந்துச்சு. ஒரு நாள், அந்த ஊரில் பேருந்து வசதி வந்தது. பேருந்து செல்வதற்தாக மரக்கிளைகள் தடையாக இருந்தது என்று ஒரு மரக்கிளையை வெட்டினார்கள். வெட்டிய மரக்கிளையை  விறகுக்கு பயன்படுத்தினர். இவ்வாறு மரங்களை வெட்டி, வெவ்வேறு விதமாக பயன்படுத்தினர். மரங்கள் இல்லாதனால் பறவைகள் இல்லை; மரங்கள் இல்லாததால் மழை இல்லை; அதனால் தண்ணீர் தட்டுப்பாடு. தண்ணீர் இல்லாததனால் ஆடு, மாடுகளை விற்றனர். மரம் இல்லாததால் நிழல் இல்லை என்று கதையைக்கூறி முடித்தேன்.

செயல்பாடு 2: திருக்குறளில் சொல்ல வரும் கருத்தைப் புரிந்து கொண்டு மற்றும் தன் வாழ்வோடு தொடர்பு படுத்துதல்

பின்னர், மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்டேன்.

ஆசிரியர்: மழை எப்படி வரும் ?

மாணவர்கள்: கீழே தண்ணீர் ஊத்தினா சூரியன் இழுக்கும். மழை வந்தா தண்ணீர் கிடைக்கும்.

ஆசிரியர்: தண்ணீர் தட்டுப்பாடு எப்ப வந்தது?

மாணவர்கள்: ……….

ஆசிரியர்: தானே புயலப்ப கரன்ட் இல்லாம, தண்ணி இல்லாம கஷ்டப்பட்டோமா…அப்ப தண்ணி எப்படி கிடைச்சுது?

மாணவர்கள்: பக்கத்து ஊரில் இருந்து கிடைச்சுது

ஆசிரியர்:  தண்ணீர் உங்களுக்கு எங்கிருந்து கிடைச்சுது?

மாணவர்கள்: கான் ல.

ஆசிரியர்: தண்ணீர் எதுக்கெல்லாம் பயன் படுத்துவீங்க?

மாணவர்கள்: குடிக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு, துணி துவைக்கிறதுக்கு

ஆசிரியர்:  உங்களுக்குத் தாகமா இருக்கும் போது எங்க போவீங்க?

மாணவர்கள்: தண்ணீர் இருக்க இடத்தை நோக்கி.

ஆசிரியர்: அப்படி குடிக்கிற தண்ணி எங்கு இருந்து வருது?

மாணவர்கள்:  பூமியில்  போர் போட்ட தண்ணீர் வருது, டாங்க் , பாகூர் ஏரி – பாகூர் ஏரியில படிக்கட்டு இருக்கு , குளம், ஆறு, ஓடை, வாய்க்கால்…

ஆசிரியர்: மனிதனுக்கு மட்டும்தான் தண்ணீர் தேவைப்படுதா?

மாணவர்கள்: வயலுக்கும் தான் தண்ணீர் தேவைப்படுது

ஆசிரியர்: பாகூரில் இருக்கிற ஏரி பத்தி தெரியுமா?

மாணவர்கள்: சிலை இருக்கு, எரிக்கள் இருக்கு சொல்றாங்க மிஸ்

ஆசிரியர்: ஏரியைப் பத்தின கதை தெரியுமா உங்களுக்கு?

மாணவர்கள்: தெரியாது மிஸ்.

இக்கலந்துரையாடலில் இருந்து மாணவர்கள், தண்ணீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து  வைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. மேலும் எங்கள் பள்ளி பாகூரில்(பாகூர் ஏரி புதுவையின் நீர் ஆதாரங்களில் ஒன்று) இருப்பதால்,  பாகூர் ஏரி உருவான விதத்தை கூறுவது அவர்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரத்தைத் தெரிந்துக் கொள்ள உதவும் என்று எண்ணினேன்.

ஆசிரியர்: வங்காரி, சிங்காரி(பாகூர்) ஏரியைப் பத்தி இப்ப நான் உங்களுக்கு சொல்ல போறேன்

(பட அட்டை மூலமாக வங்காரி, சிங்காரி கதையைக் கூறினேன். மாணவர்கள் கேட்டனர்)

கதையில் வரும்  பஞ்சத்தைப் பற்றியும், ஏரி உருவானது பற்றியும் கூறினேன். கதையின் முடிவில் மழை பெய்து ஏரி நிரம்பியதாக சொன்னேன். அப்போது, மாணவர்களிடம், மழை வந்தால் என்ன பன்னுவீங்க என்று கேட்டேன்? மழையில் ஜாலியாக விளையாடுவோம் என்றனர். மழையில் நினைறது பிடிக்குமா? இப்பதான் திட்டறாங்க…சின்ன வயசுல நெனைவோம் மிஸ்.  ‘எங்க அப்பாக்கு தெரியாம நெனைவோம்’ என்றால் ஒரு மாணவி. அம்மா,அப்பா வீட்டல இல்லைனா ஜாலிய நெனைவோம். ஏன் அம்மா, அப்பா, மழையில நினைஞ்ச திட்றாங்க…? “உடம்பு சரியில்லாம போயிடுன்னு திட்டறாங்க.இப்ப இந்தக் கதையில இந்த ஏரிக்கு எங்கிருந்து தண்ணீர் வருது? செஞ்சி ஆற்றிலிருந்து வருது.

இவ்வாறாக மாணவர்களிடம் பேசிய பின்பு,  பசுமையான ஊர், நீர் ஆதாரங்கள் பற்றியும் வரைய சொன்னேன். அவர்கள் மனதில் தோன்றியதை வரைந்தனர்.

முதல் நாள் பாடவேளை முடிவில், மாணவர்களிடம்…உங்க ஊரில தண்ணீர் பிரச்சனை எப்ப வந்து? அப்ப அவங்க என்ன பண்ணாங்கன்னு உங்க வீட்டில இருக்கவங்க கிட்ட கேட்டு வந்து படம் வரைங்க, கதை சொல்லுங்க என்று சொன்னேன். அவர்களும் கேட்டு வருவதாகக் கூறினார்கள்.

இரண்டாம் நாள்:

செயல்பாடு 3: தன் சொந்த அனுபவத்திலிருந்து கதை கூறுதல் மற்றும் அதை படமாக வரைதல்

வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். முன்னாள் மாணவர்களிடம் பஞ்சத்தைப் பற்றிக் கேள்வி கேட்டிருந்தேன். மாணவர்கள் அனைவரும் வரைந்து வந்திருந்தனர்.   மாணவர்கள் தான் வரைந்து வந்ததை என்னிடம் காட்டினர். அப்போது ஒரு மாணவி , வரைந்து வரவில்லை. இன்னொரு மாணவனிடம் இருந்த ஒரு படத்தை எடுத்துக் அந்த மாணவியிடம் கொடுத்தேன். படத்தை வாங்கியதும் அந்த மாணவியின் முகத்தில் புன்னகை வந்தது. அனைவ்ரும் தான் வரைந்த படத்தைக் காண்பிக்கும் போது. அவளும் சந்தோஷமாகக் காட்டி, அதைப் பற்றி அவள் தனக்கு தெரிந்ததைக் கூறினாள். இவ்வாறாக பஞ்சத்தைப் பற்றி மாணவர்கள் தன் வீட்டில் உள்ளவரிடம் கேட்டு , வரைந்து வந்தனர்.

மாணவர்கள், பஞ்சம், வறட்சி பற்றி  அழகாக  படங்கள், வண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தினர்.  ஒரு மாணவன் பக்கத்து ஊரில் சென்று தண்ணீர் கொண்டு வருவது போல் வரைந்து இருந்தான். மற்றொரு மாணவன் வறண்ட பூமியை வரைந்தான். இவ்வாறாக அவர்கள் கேட்ட  விஷயத்தை வரைப்படமாக  வரைந்து வந்து இருந்தனர்.

    

பின்பு , ஒவ்வொரு மாணவனாக , அவர்கள் வீட்டில் கேட்டு வர சொன்ன கதையைக் சொல்ல சொன்னேன்.

திரிஷா –  தண்ணீர் கஷ்டம் எங்க வீட்டில  குளம், ஏரி போய் தண்ணீர் கொண்டு வந்தாங்க

பாஸ்கர் – ஒரு நாள் வயசான தாத்தா  தண்ணி தாகத்தோட நடந்து போனார், அப்போ ஒரு பாட்டி வந்து தண்ணி கொடுத்தது, உப்பு தண்ணின்னு கீழ போட்டார்.

மீனா- தண்ணி இல்லன்னு பக்கத்து நாட்டுல போய் எடுத்து வந்தாங்க, அங்க மோட்டார்ல தண்ணீர் வந்தது.

மற்ற மாணவர்கள் யாரும் கதை கேட்டு வந்து கூறவில்லை. நான் தானே புயலப்ப எனக்குக் கிடைத்த அனுபவத்தை கூறினேன்.

புதுவை, கடலூரில் தானே  புயல் வந்த போது, தண்ணி இல்லாமல் கஷ்டபட்டோம்.

“1 குடம் தண்ணி 15 ரூபாய்க்கு வாங்கினேன்”

“தண்ணி இல்லாம….எங்க துணிய கடலூரிலிருந்து , 15 கி.மீ உள்ள கன்னிக்கோவிலில் உள்ள எங்க சொந்த காரங்க வீட்டில  போய் துணி துவைப்போம்.  அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணி வீணாக்கக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்..

நேற்று இரவு செய்தி அலைவரிசை பார்க்கும் போது, திண்டுக்கல்லுல தண்ணி இல்லாம கஷ்டப்படுறத பார்த்தேன். அவங்களுக்கு 48 நாளுக்கு ஒரு வாட்டிதான் தண்ணி கிடைக்குமா… மத்த நேரத்தில குட்டையில இருக்கிற தண்ணியதான் சேகரிச்சு குடிப்பாங்க…

இவ்வாறு என் அனுபத்தைக் கூறும்போது, மாணவர்கள் அதை ஆர்வமாக கேட்டனர். மேலும் திண்டுக்கல் செய்தி அவர்களுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவ்வாறு தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் நினைத்தனர்.

அடுத்ததாக நம்ம தண்ணியோட முக்கியத்துவம் பற்றி ஒரு காணொளி பார்போம் என்று கூறி காணொளியைக் காண்பித்தேன்.

காணொளி பார்த்த பின்பு, தண்ணி எவ்வாறெல்லாம் வீணாகுது? என்று கேட்டேன்.

மாணவர்கள்: குழாவ திறந்து விட்டு , கானை திறந்து விட்டு அப்படியே கழுவறது…கான அப்படியே திறந்து விட்டு போறது.

ஆசிரியர்:  மதிய உணவு இடைவெளியில்…சாப்பிட தட்டு கழுவும் போது …எவ்வாறெல்லாம் தண்ணீரை வீணடிப்பீர்கள் ?

மாணவர்கள்: ஆமாம் மிஸ் நிறைய தண்ணி வீணா போகும் மிஸ்

ஆசிரியர் :  படத்தில்  எங்கெல்லாம் தண்ணீர் வீணடிச்சாங்க?

மாணவர்கள்: கிட்சன்ல,  பாத்ரூம்ல, வாய்க் கொப்பளிக்க, பாட்டில் தண்ணி வெஸ்ட் பண்ணாங்க.

ஆசிரியர்: இதிலிருந்து நமக்கு என்ன தெரியுது?

மாணவர்: தண்ணியை ரொம்ப சிக்கனமா  பயன்படுத்தனும்.

செயல்பாடு -4 : பாடப்புத்தகத்தில் உள்ள திருக்குறளைப் புரிந்து கொண்டு, சொற்களஞ்சியம் பெருக்குதல்

அதற்கு பிறகு, மாணவர்களைப் பாடப் புத்தகத்தை எடுக்கச் சொன்னேன். திருக்குறள் பாடத்தில் உள்ள “ நீரின்று  அமையாது உலகு….” என்ற திருக்குறளை கரும்பலகையில் எழுதி , மாணவர்களை வாசிக்க வைத்தேன். பின்னர், மாணவர்களை அகரமுதலி பார்த்து ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை கூறினார்கள். பின்னர், மாணவர்கள் திருக்குறளை வாசித்தனர்.

அதன் பிறகு, புரிந்த திருக்குறளின் அர்த்தத்தைக் கூற சொன்னேன்.

மாணவர்கள் கீழ்க்காணும் அர்த்தத்தை கூறினர்:

“தண்ணீர் இல்ல உலகமே இல்ல”.

“தண்ணிக்காக தெரு சண்டை போடுவோம் – அப்ப நம்ம ஒழுக்கம் கெட்டு போகும்”.

ஆசிரியர்: மதிய உணவு வேளையில் , தட்டை கழுவ பொறுமை இல்லாம,..நீங்க சண்டை போட்டு ஒடுவிங்க? அப்ப என்ன கெட்டு போகும் ?

மாணவர்கள்:  ஒழுக்கம் கெட்டு போகும்

ஆசிரியர்:   தண்ணி வரதுக்கு முக்கிய காரணம் என்ன?

மாணவர்: மழை

ஆசிரியர்: அந்த மழை இல்லன்னா என்ன ஆகும்?

மாணவ்ர்கள்:  மழை இல்லன்னா தண்ணி இல்ல…

ஆசிரியர்:  தண்ணி இல்லன்னா

மாணவர்கள்:  உணவு இல்ல?

ஆசிரியர்: உணவு இல்லனா

மாணவர்கள்: பசி எடுக்கும்

ஆசிரியர்: பசி எடுத்தா?

மாணவர்கள்:  உணவு இல்லன்னு, சண்ட போடுவோம்

ஆசிரியர்: சண்டைப் போட்டா?

மாணவர்கள்: ஒழுக்கம் கெடும்.

பின்பு நான், மாணவர்களின் மத்திய உணவு வேளையில், தட்டை கழுவ அவர்கள் போட்டிபோடும் நிகழ்வை சொன்னேன். அப்போது உங்களுக்குள் என்ன ஆகும் என்று கேட்டேன்.  நாங்க தட்டு கழுவ முந்திக் கொண்டு சண்டை போடுவோம்.  சண்டைப் போட்டா என்ன ஆகும் என்றேன்?  மாணவர்களிடம் பதிலில்லை.  திரும்புவம் , நீங்க சண்டை போட்டா  உங்கள மத்தவங்க என்ன நினைப்பாங்க?  என்று கேட்டேன்.  எங்களை கெட்ட பசங்கனு சொல்வாங்க. கெட்ட பசங்ககிட்ட ஒழுக்கம் இருக்குமா ? என்றேன் .’இருக்காது’ என்று கூறினார்கள்.

அதன்பின்பு, மாணவர்களை திருக்குறள் மாதிரி  வாசகம் எழுத சொன்னேன். சில மாணவர்கள் எழுதினார்கள்.

“தண்ணீரை சேமிப்போம் உலகை காப்போம்”

“நீரில்லை என்றால் மனிதர்கள், உயிரினங்கள் இல்லை”

“நீரி இல்லாமல் மக்கள் இல்லை”

“மழை இல்லாமல் ஒழுக்கம் இல்லை”

ரேவதி , அ.உ.ப. கீழ்பரிக்கல்பெட்

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 1