Towards a just, equitable, humane and sustainable society

யார் தலைவர்

0
No votes yet
0
Post a comment

சமூக அக்கறையுடைய ஆசிரியராக விளங்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியதில் சாவித்ரி பாய் பூலேவுக்கு மிகப்பெரிய பங்குண்டு. கல்வி தொடர்பான பல வாசிப்புகள் என்னை செழுமைப்படுத்திக்கொண்டும் என் வகுப்பறை செயல்பாடுகளை மாற்றியமைத்துக்கொண்டும் வருகின்றன. அதில் ஒன்று குழந்தைகள் வாழும் சமூகத்தைப் பற்றி யோசிப்பதும் அச்சமூக நிகழ்வுகளைப் பாடத்தோடு தொடர்புபடுத்துவதும் என நீள்கிறது. பாடநோக்கங்களைப் பாடத்திட்ட நோக்கங்களோடு சேர்த்து புரிந்துகொள்வது இதில் ஒன்று. சமூகத்தை மாற்றிய மாமனிதர்கள் பாடத்தில் இடம்பெறும் பொழுது பாடத்தைத்தாண்டி அதை அவர்களின் வாழ்வியலோடு இணைப்பது என்ற வகையில் எடுத்துச்செல்கிறேன். நீள்கனவு ஆசிரியர் குழுவில் இதற்கான எங்கள் திட்டமிடல்,  பகிர்தல், விவாதித்தல், வாசித்தல் ஆகியவை உதவியாக இருந்து வருகிறது. குழந்தைகள்மீது அக்கறைப்படுதல்,  பாடநோக்கை அடைதல் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு இருப்பதையும். அத்தொடர்பை உணர்தல் ஆசிரியப்பணியின் மகத்துவத்தை உணர்வதாகவும் அமைகிறது. வழக்கமான ஆசிரியத்திட்டமிடலைக் கடந்து வெவ்வேறு வகையான கற்றலில் ஆசிரியராக ஈடுபடுவதோடு அவற்றை வகுப்பறை மற்றும் சமூகத்தை நோக்கி நகர்த்தமுடிவதை உணர்ந்தேன். இவ்வடிப்படையில் பாடங்களை இணைத்த எனது முயற்சிகளை இங்கு இணைத்துள்ளேன்.

யார் தலைவர் (சமூகஅறிவியல்):

இது  EVS.......பாடத்தை என் திட்டமிடலில், யார் தலைவர்? என்று கேட்கப்பட்ட கேள்வியை உரையாடலுக்கானதாக எடுத்துக்கொண்டேன்.

இந்தக் கேள்விக்கு மாணவர்களிடம் பலவிதமான பதில்கள் வந்து கொண்டிருந்தது. சில மாணவர்கள் அப்பா என்றனர். சிலர் தாத்தா என்றனர். சிலர்அம்மா என்றனர். “எங்கள் வீட்டில் ஆயாதான்” என்றனர். அதற்கு “அது எப்படி யார் வேண்டுமானாலும் குடும்பத்தலைவர் ஆகமுடியும்?” என்று சிலர் எதிர்கேள்வி கேட்டனர். ஆனால் அம்மா என்று கூறியவர்களோ தங்கள் பதிலில் பின்வாங்குவதாய் இல்லை. எங்கள் வீட்டில் அம்மாதான் வேலைக்குச் செல்கிறாள்,  சமைக்கிறாள்,  எங்களுக்குத் தேவையானதை வாங்கித்தருகிறார்கள். அப்படியென்றால் அம்மாதானே குடும்பத்தலைவர் என்று தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்தனர்.  ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவரை எந்தக்காரணிகள் தீர்மானிக்கின்றன.  பெண் ஏன் குடும்பத்தலைவராக இருக்கக்கூடாது? எனப் பல கேள்விகள் கேட்டனர். கேள்வி விவாதத்திற்கு உள்ளானது. சில மாணவர் ”எங்க அப்பா வேலைக்கு போறார்.  வீட்டிற்குச் சாமான்களெல்லாம் வாங்கித் தருவார்.  எங்களுக்குத் திண்பண்டம் வாங்கித் தருவார். எங்க அம்மா சமையல் செய்வாங்க, வீட்டு வேலைகளைச் செய்வாங்க. அப்பா வேலைக்குச் செல்வதால் அப்பாதான் தலைவர்” வீட்டு வேலைகளைச் செய்பவர்கள் தலைவரில்லையா? என்று என் கேள்வியை முன்வைத்தேன்.  அப்பா சில நேரங்களில் சமைப்பார். சிலசமயம் கடைக்குப் போவார், சின்ன சின்ன வேலைகள் செய்வார் மிஸ்.

உங்க அம்மா பணம் சம்பாதிப்பாங்களா? ஆமாம் மிஸ்.. தையல் தைப்பாங்க.  என் டிரஸ்லாம் அவங்க தான் தைச்சாங்க.. சில அம்மாக்கள் ஹோட்டல் வேலை, கம்பெனி வேலை, என எல்லா அம்மாக்களும் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்கின்றனர. பணம் ஈட்டுகின்றனர். பெரும்பாலான அம்மாக்கள் வேலை செய்கின்றனர.

அப்படியென்றால்  யார் குடும்பத்தலைவர். குடும்பத்தலைவரை எந்தக் காரணிகள் (காரணங்கள்) தீர்மானிக்கின்றன?  என்றேன்.

யார் அதிகமாகக் குடும்பத்திற்காக வேலை செய்கிறார்களோ அவங்க தான் குடும்பத்தலைவர் மிஸ்.

இல்ல எப்பவும் தாத்தா இல்லைனா அப்பா தான் குடும்பத்தலைவரா இருப்பாங்க மிஸ். எனப்பல்வேறு பதில்கள்.

எங்க அப்பா எங்கக்கூட இல்ல மிஸ். அம்மாதான் வேலைக்குப் போறாங்க, சமைக்கிறாங்க, வீட்டுவேலைகள் செய்றாங்க. அப்போ அம்மாதான் குடும்பத்தலைவர் மிஸ். எங்க அப்பா குடிப்பாரு! எப்பவாவது வேலைக்குப்போவாரு!  ஆனா அந்தக்காசுல குடிப்பாரு ! வீட்டுச்செலவுக்குலாம் காசு தரமாட்டாரு! அம்மா வேலைக்குப் போனா தான் எல்லாம் . அதனால எங்க அம்மாதான் குடும்பத்தலைவர் மிஸ். உங்களுக்குச் சரி என்று தோன்றுகிற விடையை எழுதுங்கள். அவரவர் குடும்பத்திலும் யார் அதிக உழைப்பைத் தருகிறார்களோ அவர்களே குடும்பத்தலைவர்.  சில குடும்பங்களில் அம்மா, சில குடும்பங்களில் அப்பா என்று விவாதத்தை முடித்தேன்.

ஆனால் அந்தக்கேள்வியின் தாக்கம் என்னுள் ஓயவில்லை. சமுதாயம் யாரைக் குடும்பத்தலைவராக அங்கீகரிக்கிறது? எவ்வளவு அதிகமாக உழைத்தாலும் ஒரு பெண்ணைக் குடும்பத்தலைவராக ஆக்குவதற்கு எத்தனை குடும்பங்கள் ஏற்றுக்கொள்கின்றன? தலைவர் என்ற அடையாளம் பாலினத்தை முன் நிறுத்துவதா? இல்லையென்றால் அரசு முன்வைக்கும் படிவங்களில் தலைவர் என்ற அடைமொழி யாருக்கானதாக உள்ளது. மனைவிக்கான பாதுகாவலாராகக் கணவன் இருக்கும் பொழுது, கணவனுக்காக மனைவியில்லாதது ஏன்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நீள்கனவின் பகுதியாகத் தொடர்ந்தது. அதே நேரத்தில் சமூகம் முன்வைக்கும் விஷயங்களுக்குக்  குழந்தைகள் பழகியிருக்கும் அதே வேளையில் குழந்தைகள் மத்தியில் வித்தியாசமான எண்ணங்கள் இருப்பதையும் அவை தங்கள் வாழ்வை உற்றுப்பார்த்தும் சமூகத்திலிருந்து பெறப்பட்டதாகவும் இருக்கும் சூழலில் பொறுப்புள்ள ஆசிரியராக அவற்றைப் பாட நோக்கத்தோடு இணைத்து எடுத்துச் செல்லவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

இதனால் இதற்கடுத்து தமிழில் நான் நடத்திய பெண்கல்வி, கும்மியடிப்பெண்ணே பாடலில் வேறுசில செயல்பாடுகளை இணைத்தேன். ஆயா என்ன படித்துள்ளார்கள்? படித்திருந்தால் எந்த வகுப்பு வரை? படிக்காவிட்டால் ஏன்? அதேபோல், அம்மா என்ன படித்துள்ளார்கள்? எந்த வகுப்பு வரை?  அக்கா அல்லது தங்கை எதுவரை படிப்பார்கள் என்ற கேள்விகளுக்குப்பதில் எழுதிவர வைத்தேன்.  இப்பதிலினைத் தொடர்ந்து நடந்த உரையாடலும் முக்கியமானது. இது போன்ற உரையாடலின் பொழுது கல்வியின் மூலம் நடைபெறும் சமூக மாற்றத்தை உணரமுடிந்தது. கும்மியடிப் பாடலையும் செந்தமிழ்நாடெனும் பாடலையும் மாணவர்கள் இசையோடு பாடிப் பழகியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட இப்பாடங்களுடன் ஆசையான ஆயா,  கஸ்தூரிபாய்...போன்ற கதைவாசிப்பு நிகழ்வுடன் உரையாடலையும் நகர்த்தினேன். பகுத்தறிவு, சமத்துவம், சூழலைப்பாதுகாத்தல் போன்ற சமூக மாற்ற நிகழ்வுகளுக்கு ஏற்புடையதாகப் பாடங்கள் இருப்பதையும் நாம் அதில் ஈடுபடும் பொழுது கல்வி மாற்றத்திற்கானதாக இருப்பதை என் சமீபத்திய வகுப்பறைகள் இருப்பதை உணர்கிறேன்.

Grade: 
4

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment