Towards a just, equitable, humane and sustainable society

வண்ண வண்ணப் பூக்கள்

 

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 1, பருவம் 2, பாடம் 1

அ. தனமேரி ,த. கஜலட்சுமி ,வா. வீரப்பன்

கதம்பப் பூவைக் கொண்டுவந்து காண்பித்து அதிலுள்ள நிறங்களை...

வளர்க்கப்படும் திறன்கள்:

-ஓசை நயமிக்கக் குழந்தைப் பாடல்களைப் பாடுதல்

-படத்தைப் பார்த்துக் கதை சொல்லுதல்.

- ஒத்த ஓசையுடைய சொற்களை இனங்காணுதல்

-வளை கோடு மூலம் எழுத்துக்களை எழுதுதல்

-குழு மனப்பான்மையை வளர்த்தல்

-ஒருங்கிணைந்து சிந்தித்தல்.

-செய்வதைத் திரும்பச்செய்தல்.

கற்றல் கற்பித்தல் வளங்கள்:

1) மின் அட்டை

2) சொல் அட்டை

3) எழுத்து அட்டை

4) வண்ண வண்ண பூக்கள் அட்டை

5) வண்ண வண்ண காய்கறிகள் அட்டை

6) பட அகராதி சுவரொட்டி

ஈடுபடுதல்:

செயல்பாடு 1: கற்பனையாற்றலை /படைப்பாற்றலைப் பெறுவதற்கு எளிய பாடல்களைப் பழக்குதல்

கிளிப்பாடலைப் பாடவைத்தல்.

பச்சைக்கிளியே வா வா

பாலும் சோறும் உண்ண வா

கொச்சி மஞ்சள் பூச வா

கொஞ்சி விளையாட வா

இப்பாடலைத் தொடர்ந்து இதில் வேறு விலங்குகள் அல்லது மரம், செடி, கொடி பெயரை இணைத்து, வெவ்வேறு விதமாகப் பாட வைக்கலாம்.

பாடல் பாடி முடிந்ததும், அவர்களிடம் சிறு சிறு கேள்விகள் கேட்கலாம். கிளியை நேரில் பார்த்திருக்கிறீர்களா? யாரைப்பற்றிப் பாடினீர்கள்? கிளியின் நிறம் என்ன?

செயல்பாட்டின் தொடர்ச்சியாகக் கதம்பப் பூவை கொண்டுவந்து காண்பித்து அதிலுள்ள பூக்களையும் நிறங்களையும் கேட்டறிதல். அதன் பின் பாடத்திலுள்ள பாடலைப் பாடுதல். அதன் பின் இரு குழுவாகப் பிரிந்து கேள்வி பதில் மூலமாக ஆடிப் பாடுதல். மாணவர்கள் சரியாகவும் ஒத்திசைவோடும் பாடுகின்றனரா என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆராய்தல்:

1. மாணவர்களுக்குப் பிடித்த கிடைத்த பூக்களைக் கொண்டுவரச்செய்து பின் வகுப்பறையில் காட்சிப் பொருளாக வைத்தல். இச்செயலில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும்படி ஊக்குவித்தல் வேண்டும்.

2. மாணவர்கள் கொண்டுவந்த பூக்கள் அவர்கள் தோட்டத்திலிருந்ததா? யார் பறித்துக் கொடுத்தார்கள்? என்னென்ன வண்ணங்களில் பூக்கள் உள்ளன?

இது போன்ற பல்வேறு வகையான கேள்விகளைக் கேட்டு மாணவர்களிடம் பதிலைப்பெற வேண்டும்.

3. ஆசிரியர் மாணவரிடம் வண்ண வண்ண படத்தைக்காட்டி, படத்திலுள்ளவைகளைப் பற்றிப் பேசச் செய்தல்

பூக்களின் படங்கள் அ,ஆ வரிசை எழுத்துகளில் தொடங்கும் பெயர்களாக இருத்தல் நன்று.

4. வண்ண வண்ண காய்கறிகள் பட அட்டையை காட்டி பேசவைத்தல்.

5.ஆர்வமுடன் பங்கேற்க ஊக்குவித்தலும், மாணவர்கள் கூறுவது சரியானதா என்று உற்று நோக்குதலும் அவசியம்.

விளக்குதல்:

1. ஆசிரியர் மாணவர்களிடம் படங்கள் ஒட்டிய சொல்அட்டைகளைக் கொடுத்துச் சொற்களை அறிமுகப்படுத்துதல்.

2. உப்புத்தாளில் எழுத்துக்களை எழுதித் தடவிப்பார்க்கச் செய்தல்

3. ஆசிரியர் மாணவர்களிடம் எழுத்து அட்டைத்துண்டுகளைக் கொடுத்து சொல்லிக்கொண்டே அடுக்கச்செய்தல். அவர்கள் விருப்பத்தோடு செய்வதற்கும் சரியாகச் செய்வதற்கும் ஆசிரியர் உதவவேண்டும்.

4. புதிய சொல் அடங்கிய சொல் - சரத்தை மாணவர்களிடம் காண்பித்து அதனைப்பற்றிப் பேசச்செய்தல். முடிந்தால் சொற்றொடராகப் பேசவைக்கலாம்.

5. ஆசிரியர் பொருள் பெயர் கூற மாணவர்களைப் படம் வரையச்செய்தல் வேண்டும். மாணவர் பொருள் பெயர் கூறி ஆசிரியர் படம் வரைதல்.

6. பட அகராதி சுtவரொட்டியைக் கண்டுபிடித்து கீ,கீ சொற்களை வரிசைச் சொற்களை பழக்குதல்

7. ஆசிரியர் மாணவர்களிடம் பாடலைப்பாடி கீ,கீ சொற்களை அறிமுகப்படுத்தலாம்.

காட்டில் ஒரு குளத்தில்

மீன் துள்ளிக் குதித்தது

கரையில் அமர்ந்த கீரி

கண் கொட்டாமல் பார்த்தது

ஈ ஒன்று வந்தது

கீரி முன்னால் பறந்தது கீரி கண்ணை மூடியது

மாணவர்கள் ஏற்ற இறக்கத்தோடும் பாவனையோடும் ஆடிப்பாடுதல். மாணவர்களை மீன், கீரி, ஈ போன்ற வார்த்தைகளை எழுத வைத்தல்.

விரிவாக்குதல்

பூக்களின் பாடலைப்போன்று விலங்குகளை வைத்து பாடலைப் பாடச்செய்தல்.

யானைக் குட்டி யானைக் குட்டி

எங்கே போறீங்க

தோட்டத்துல கரும்பு இருக்கான்னு

பார்க்கப் போறேங்க

கன்றுக்குட்டி கன்றுக்குட்டி

எங்கே போறிங்க

அம்மா மடியில் பாலை முட்டி குடிக்கப் போறேங்க

1. மாணவர்கள் தங்கள் அனுபவத்தையும் கற்பனையையும் இணைத்துப் பாடும்படி செய்தல்.

2. ஆசிரியர் மாணவர்களிடம் புதிர்களின் மூலமாகச் சொற்களை வரவழைத்தல்.

எடுத்துக்காட்டு:

வானமே என் வீடு நான் யார்? என்னை நேருக்கு நேர் பார்க்க முடியாது நான் யார்?

""சூரியன்” என்ற வார்த்தையை மாணவர்கள் பதிலாகக் கூற வேண்டும்.

வண்ண அட்டை, பசை, உறிஞ்சுக் குழல்கள், இரண்டு மூடி ஆகியவற்றைக் கொண்டு வண்டி செய்யக் கற்றுக் கொடுத்தல், மாணவர்கள்

மகிழ்ச்சியோடு ஈடுபட முழுமையாகச் செய்து முடிக்கத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்யதல் என ஆசிரியர் உதவ வேண்டும்.

மதிப்பிடுதல்

பக்கம் 40-நினைவு கூறுவோம், பக்கம் 44- கலையும் கைவண்ணமும் பக்கம் 48-இணைந்து செய்வோம் ஆகியவற்றை விருப்பத்தோடு செய்ய உதவுதல் வேண்டும். இவற்றோடு ஆசிரியர் சொல்வதை எழுதுதல், பார்த்து எழுதுதல், படம் பார்த்துப் பெயர் சொல்லுதல், வளைகோடுகள் மூலம் படம் வரைதல் என ஆசிரியர் பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் கற்றலை மதிப்பிடுதல்.

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1