Towards a just, equitable, humane and sustainable society

ஆசிரியரின் அடையாளம் தைரியம், ஈடுபாடு, அக்கறை.

  • அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்ப-பொருளாதரச் சூழல் மாணவர்களின் கல்வியை மட்டுமல்லாது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • ஆசிரியர்-மாணவர் உறவு என்பது மாணவர்களின் வாழ்வியல் திறன்களை மேம்படுத்தவும் கற்றலில் அவர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவசியப்படுகிறது.
  • வளரிளம் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் இயற்கையான சிக்கல்களை எதிர்கொள்ளச் செய்யவும் அவர்களை மடைமாற்றம் செய்து வழிநடத்துவதிலும் பள்ளியின் பங்கு இன்றியமையாதது.

நான் பணியில் சேரும்போது ஆசிரியப் பணிபுரிந்து ஓய்வுபெற்றிருந்த என் தாயின் அறிவுரை, “நாம் எவ்வளவு ஈடுபாட்டுடன் குழந்தைகளுக்கு கல்விச்சேவை புரிகிறோமோ அந்த அளவே உன் குழந்தைகளின் எதிர்காலம் வளமாக அமையும். ஆகவே ஈடுபாட்டுடன் பணிபுரி” என்பதே.

என் பள்ளியின் பின்புலம்:

திருவண்ணாமலை மாவட்டம் வெங்களத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியையாக 2012 முதல் பணியாற்றி வருகிறேன். 218 மாணவ மாணவியர்களுக்கு ஐந்து ஆசிரியர்களே உள்ளோம். காரணம் போக்குவரத்து வசதி இல்லாத கிராமம் அது. என்னுடைய பணியும் மாணவர்களின் மதிப்பெண் உயர்த்துவதிலும் பாடத்திட்டத்தை முடிப்பது என்பதுமாகவே ஐந்து வருடமாகக் கழிந்தது.
ஆசிரியராக என் செயல்பாட்டில் மாற்றம்:

2017 நவம்பர் 15 அன்று முகநூல் மூலம், மாடசாமி அய்யாவின் சிகப்பு பால்பாயிண்ட் பேனா என்ற புத்தகத்தின் அறிமுகம் பெற்றேன். ஒரு சிவப்பு பேனா ஒரு குழந்தையின் கற்பனை உணர்வை எவ்வாறு கொலை செய்கிறது என்பதைப் படித்தபோதுதான் குழந்தைகளின் மீது அக்கறை கொள்வதன் அவசியம் புரிந்தது. வெறும் பாடம் நடத்துவது மட்டும் ஆசிரியரின் செயல்பாடல்ல. அதைத்தாண்டி ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாவதே ஆசிரியரின் கவனமான செயல்பாட்டால்தான் என்பதை உணர்ந்தேன்.

பிறகு என்னுடைய வகுப்பறைச் செயல்பாடு பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியது. கல்வி என்பது உண்மையில் என்ன என்ற சிந்தனைத் தோன்றியது. கல்வி என்பது முதலீடாய் மாறிப்போனச் சூழ்நிலையில் மாணவர்கள் சமுதாயத்தோடு இணக்கமாக வாழும் முறை அறிதலே கற்றல் என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ளாமலே விடைபெறுகின்றனர்.
காரணம் என்ன?   கிராமமாக இருந்தாலும் நீர்ப்பற்றாக்குறை மற்றும் விவசாயத்தில் இலாபம் இல்லாததால் விவசாயத்தைக் கைவிட்ட மக்கள் வேலைக்காக ஆண் மற்றும் பெண் இருவருமே மேஸ்திரி வேலை மற்றும் பிற வேலைகளுக்கு வெளியூர் செல்கின்றனர். இதனால் மாணவர்களைக் கண்காணிக்க ஆளின்றி தான்தோன்றித் தனமாக வளர்கின்றனர். எது தவறு? எது சரி? என சொல்லித்தர ஆளின்றி வளர்கின்றனர்.

தாயை இழந்தப் பிள்ளை, தகப்பன் குடிகாரனாய் இருத்தல்,தாய் அதிகாலையில் வேலைக்குச் செல்வதால் சமையல் முதல் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டிய கட்டாயம் என குழந்தைகளும் பல இன்னல்களுக்கிடையேதான் தன் குழந்தைப் பருவத்தை ரசனையின்றியே கழிக்கின்றனர்.
இதன் விளைவு:  மாணவர்களே எதிர்கால சமுதாயமாகத் திகழ்கின்றனர். இதில் இவ்வாறான ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட குணநலன்களுடன் வளரும் இளைய சமுதாயத்தினர் மன அளவில் ,உடல் அளவில் ஆரோக்கியமாக இருப்பாரா? ஆரோக்கியமற்ற மனநிலை கொண்டவர் எவ்வாறு சமுதாயத்தில் இணங்கி வாழ முடியும்? தனிமனிதனே  நிம்மதியின்றி இருக்கும்போது குடும்பம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும்? 

வகுப்பறை அணுகுமுறையில் மாற்றம்

கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலான பாடத்திட்டமும் ஆசிரிய செயல்பாடுகளும் அமைய வேண்டும்.  அறியாமையினாலும், சூழ்நிலையாலும் கடமை தவறும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை மனநலமுடைவர்களாக வளர்ப்பதன் பொறுப்பை உணரச்செய்தல் வேண்டும். 

எட்டாம் வகுப்பிலேயே சிகரெட் பிடிக்கும் மாணவர் முதல், வகுப்பறையில் வாய்திறவாமலே அடமாக அமர்ந்திருக்கும் மாணவர் வரை, அனைவருக்குமே ஏதோ ஒரு உளவியல் பிரச்சனை இருக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளில் முதலாவதாக நான் தேர்ந்தெடுத்தது மாணவர்களுடன் நட்பாதல். அதற்கான  கலந்துரையாடல். ஒவ்வொரு மாணவரின் குடும்பச்சூழலை முதலில் கேட்டறிந்தேன். தலை ஒழுங்காக வாராமல் வரும் மாணவிக்குச் சொல்ல நியாயமான காரணம் இருக்கும். இதற்காக அவளை பிறர் முன்னிலையில் கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துவது மேலும் மன ஊனத்தையும் ஆசிரியரை வெறுக்கும் மனநிலையையுமே வரவழைக்கும்.

இரண்டாவதாகப் பாடம் நடத்தும் முறையை மாற்றிக்கொண்டேன். வகுப்பறையிலேயே அல்லாமல் மரத்தடியிலும், விளையாட்டு மைதானத்திலுமாக வகுப்பு தொடக்கத்திலேயே மாணவர் விருப்பம் கேட்டறிவது. இன்று பாடப்புத்தகம் பார்ப்போமா? கலந்துரையாடுவோமா? அல்லது குறும்படம் பார்ப்போமா? ஓரிகாமி செய்வோமா? நூலகப் புத்தகம் படிப்போமா? கதை சொல்வோமா அல்லது விளையாடுவோமா? மாணவர் தேர்வுசெய்யும் விருப்பத்தின்படி வகுப்பு நிகழ்வுகள் நடைபெறும்.

மாணவர்களாகிவிடுவதால் மனமும் வளர்ந்துவிடுவதில்லை. அவர்களின் தேவைகள் நிறைய. அதைச் சொல்லக்கூட தெரிவதில்லை சில குழந்தைகளுக்கு. தொலைநோக்குப் பார்வையில் சில செயல்பாடுகளை ஆசிரியர் ஏற்படுத்தும்போது மாணவர்கள் உடல் மற்றும் மன அளவில் ஓய்வும் சுதந்திரமும் பெற்று ஆசிரியரைத் தன் நண்பனாக நினைக்கும் மனநிலைக்கு வருவர். இச்சூழ்நிலையே ஆசிரியர் ஒவ்வொருவரும் ஏற்படுத்த வேண்டியது. பிறகு மாணவர்களை நல்ல முறையில் பண்படுத்துவது எளிதாகிவிடும்.

சென்ற வருட அனுபவங்கள்:

வருமானத்திற்காக வெளிநாடு சென்றிருந்தார் ஒரு மாணவியின் தாய். ஒரே மகளான இவளை பார்த்துக்கொண்டவர் தந்தையும், தாத்தாவும்.  ஒன்பதாம் வகுப்பு மாணவியான அவள் வயதுக்கேற்ற முறையில் இனக்கவர்ச்சியில் எண்ணம் கொண்டிருந்தாள். வகுப்பு நடக்கும்போதே தெருவில் பார்வையைக் கொண்டிருப்பாள். இதை நேரிடையாகச் சொன்னால் இன்னும் பிடிவாதமாகுமேயல்லாது தீர்வாகாதே என்று யோசித்து அவளுக்கு ஓவியம் மற்றும் எதில் ஆர்வம் என்று ஆராய்ந்ததில் புத்தக வாசிப்பில் ஆர்வம் இருந்தது. அவளுக்கானப் புத்தகங்களைத் தந்ததில் அவள் எண்ணம் மாறி தற்போது மாணவப் பருவத்திற்கேயுரிய முகமலர்ச்சியுடனும், வகுப்பில் அனைத்து மாணவிகளுடன் நட்பாகவும் உள்ளாள். மாணவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டியதே ஆசிரியரின் முதல் கடமை.

சென்ற வருடத்தின் திருப்தியான செயலாக மாணவர்களை வாசிப்பில் ஈடுபடுத்த முடிந்தது. மிகக் குறைந்த ஆசிரியர்களைக் கொண்ட என் பள்ளியில் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்தாலும், வேறொரு ஆசிரியர் சென்று வகுப்பை நிறைவு செய்ய இயலாது. ஓய்வாக இருக்கும் வகுப்புகளுக்கு புத்தகங்களைக் கொடுத்து குழு வாசிப்பு செய்யச் சொல்லுதல், நாடகம் நடிக்கச் சொல்லுதல், பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களுக்கானச் செயல்பாடுகளைக் கூட அவர்களே செய்ய ஊக்கப்படுத்துதல், ஓவியம் வரைய ஊக்குவித்தல், வார விடுமுறைகளில் கதை எழுதி வருமாறு கூறுதல் என்பதாக மாணவர்களை வழிநடத்திச் செல்ல முடிந்தது. கதை எழுதத் தொடங்கியதன் வாயிலாக அவர்களின் குணாதிசயத்தில் மாற்றங்களை உணர முடிந்தது. ஆசிரியர் என்பவர் வெறுமனே பாடம் நடத்திவிட்டுச் செல்லக்கூடாது. மாணவனின் உள்ளத்தை உழுது நற்செயல்களை விதைத்து சமுதாயத்தின் செயல்களில் பொறுப்பை ஏற்கச் செய்பவர்.  

 ஒரு ஆசிரியராய் சமுதாயத்தின் உருவாக்கத்தில் எவ்வளவு பங்கு உள்ளது என்பதை உணர்ந்த தருணம் பொறுப்புகள் சுமையாகத் தெரியாமல் கடமையாகத் தெரிகிறது. 

2018-2019. கல்வியாண்டில் என்னுடைய நோக்கங்களாக நான் கொண்டிருப்பவை. 

1. வகுப்புக்கு ஒரு நூலகம்

2. மாணவர் விரும்பும் நூல்களின் பட்டியல்களைக் கேட்டறிந்து வாங்கி வைத்தல்

3. மாணவர்களை எழுத உற்சாகப்படுத்துதல்

4. மாணவர்களே எழுதும் கதை, கவிதை, கட்டுரைகளைக் கையெழுத்துப்பிரதியாக முடிந்தால் சிறுவர் இதழ்களுக்கு அனுப்பி வைத்தல்

5. மாணவர்களின் ஓவியத் திறமையை வளர்க்கும் செயல்பாடுகளில் ஈடுபடுதல்

6. நாட்டுப்புறக் கலைகளை அதாவது சிலம்பம், பறையிசை, ஒயில், கரகம் கற்பிப்போரை அணுகி கலைகளை மாணவர்களுக்குக் கற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பயிற்சிகளைக் கற்பதன் மூலம் அறிவில் நுண்ணுணர்வு பெறுவர் மாணவர். 

தவறானப் பழக்கங்களில் ஈடுபடும் மாணவர்களின் செயல்களுக்கான காரணம் என்னவாக இருக்கும்?. கவனிப்பின்மை, வழிகாட்டல் இன்மை, எது நல்லது எனத் தெரியாமை.  ஒரு ஆசிரியர் அவர்களுக்கான நல்வழிகாட்டியாக, ஆலோசகராக, அக்கறையுள்ளவராக, அவர்களின் அன்புக்குரியவராக மாறும்போது மாணவ சமுதாயம் நற்பாதையில் பயணம் செய்யும். அவ்வாறு மாணவர்களின் பாதையைச் செப்பனிடுவதே ஆசிரியரின் தலையாய கடமை.  என் பணி சேவையாக இருப்பதன் தேவையை உணர்கிறேன். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை அடைய விழைகிறேன். நன்றி!!!

Teacher: Udayalakshmi

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives