Towards a just, equitable, humane and sustainable society

எனது பள்ளி

ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்பவர் கல்வி மற்றும் கல்வி-சார் செயல்களில் மட்டுமே பங்கேற்பவர் அல்ல. ஒவ்வொரு மாணவனின் நலனிலும் முழுமையான அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்டுரை இது.

ஆசிரியப் பணி அறப்பணி:

ஆசிரியனாக இருப்பவனுக்கு ஓர் அர்ப்பணிப்பு வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவரால் உருவாக்கப்படும் சமுதாயத்தில்   நாட்டுப்பற்று,  பிறர்நலம், மனித நேயம் போன்ற நற்பண்புகள் நிரம்பி இருக்கும். ஓர் ஆசிரியராக இருப்பவர், மாணவர்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்லாமல் எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கை வாழ்பவராக இருந்தால் மட்டுமே அவருடைய எண்ணத்திற்குத் தக்கவாறு மாணவர்களை உருவாக்க முடியும். மாணவர்களின் உடல் நலனிலும், பாதுகாப்பிலும், மிகுந்த அக்கறையுடன் இருப்பது,  மாணவர்களின் கற்றல் மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து ஆலோசனைகளை வழங்கி நன்னெறிப்படுத்துவது போன்றவைகளை அவர் தாமாக முன்வந்து செய்பவராக இருக்கவேண்டும். அவருடைய கற்பித்தல் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும், மாணவர்களிடம் ஏற்படும் சீரான வளர்ச்சி மற்றும் கற்றல் விளைவுகள்  அவருக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியினையும் அளிக்கும்.

மகிழ்ச்சியானச் சூழலில், ஆசிரியர் இடர்ப்பாடுகளையும் பொருட்படுத்தாது சிறப்புடன் தொடர்ந்து கற்பிப்பார். அங்கே அச்சுறுத்தல்கள் கிடையாது. அச்சுறுத்தல்களின் தேவையும் இருக்காது.

ஆசிரியர்-மாணவர் உறவு:

இயற்கையாகவே, ஆசிரியர்  வகுப்பறையில் மாணவனுக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவனுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி, பெற்றோருக்குத் தகவல் தெரிவிப்பது போன்றவற்றைச்  செய்ய முற்படும்போது  மாணவனிடம் உள்ளார்ந்த அன்பு மற்றும்  ஆசிரியருடரான உறவை பலப்படுத்தும். ஆனால் இவைகளை விதிகளால் முறைப்படுத்தினால் விதிகளைக் கடைபிடிப்பதில் சில சமயம் தவறுகள் நிகழலாம்.

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்;ஒவ்வொரு மனிதனும் என்  சகோதரன்

அல்லல் படுபவன் என் நண்பன்; ஆபத்தில் இருப்பவன் சகோதரன்

காரணம் அவனும் மனிதன்

என்று எனக்குச் சிறுவயதில் எனது பள்ளியில் கற்பித்த பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவ்வாறு நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் சகோதரனாகவும் நண்பனாகவும் புலப்படும் போது விதிகள் வரையறுக்க வேண்டிய அவசியம் ஏது?

ஆசிரியனாய் இருப்பவன் குழந்தைகளை முன்னிறுத்திப் பணிபுரிபவன். பரந்த மனப்பான்மை, தொலைநோக்குப்பார்வை, மனித நேயம், சேவை மனப்பான்மை, பிறர்க்கு உதவிசெய்தல், உடுக்கை இழந்தவன் கைபோல உதவும் நட்பு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவன். இவை மாணவர்களால் வீட்டிலும், நாட்டிலும், பள்ளியிலும் ஏன் வகுப்பறையில் கூட அறியாத ஒன்றாய், அன்றாட வாழ்வில் பிணைக்கப்படாமல் இருந்து வரும் துயரமான சூழ்நிலை மாற வேண்டும் என்பதை உறுதி செய்கிறேன். ஆனால் மிக விரைவாக மாற்றம் ஏற்பட அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பவர்கள் எத்தகைய இடர்பாட்டிலும் உறுதியாக இருந்துவேலை  புரிவதையும் நம்மால் உணரமுடிகிறது.

மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. மாறுபவை மனித குலத்தினை மாண்புறச்செய்வதாக அமையட்டும். இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் மொழிப் பாடங்களை நன்கு படிக்கவும், எழுதவும் கணிதத்தில் அடிப்படைச் செயல்களை எளிமையாகச்  செய்யவும் தயார்செய்ய முடிவு செய்தேன். இதற்காக ஆசிரியர்களைக் கூட்டி எனது திட்டத்தை எடுத்துரைத்தேன். அதற்கென சில நிகழ்வுகளை அனைத்து வகுப்புகளிலும் நிறைவேற்ற முடிவெடுத்தோம்.

இதற்கு உந்துதலாக இருக்கும் ஒரு நிகழ்வை குறிப்பிட வேண்டும். ஆகஸ்டு - 8 ம் தேதி 2016ம் ஆண்டு  நான் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பள்ளியில் பணியில் சேர்ந்தேன். அச்சமயம் இயக்குனர் முதல் பள்ளித்துணை ஆய்வாளர்வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கல்வித்தரத்தினை உயர்த்துவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆங்கிலம் கற்பித்தல்:

எங்கள் வட்டத்தைச் சேர்ந்த பள்ளித்துணை ஆய்வாளர் அவர்களும் எங்கள் பள்ளிக்கு வருகைபுரிந்த நாளன்று நான்காம் வகுப்பு மாணவனை அழைத்து ஏப்ரல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் கரும்பலகையில் எழுதச் சொன்னார். அந்த மாணவன் ஒரு எழுத்துக்கூட எழுதவில்லை.  கையில் சுண்ணக் கட்டியுடன் அமைதியாக நின்றான். ஆய்வாளர் என்ன சொல்லியிருப்பார், பள்ளியின் தலைமை ஆசிரியராகிய எனது மன நிலையைக் குறிப்பிட்ட வேண்டிய அவசியமே இல்லை. நான் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அதிகப்படியாக முதல் வகுப்பு ஆசிரியராக இருந்து ஆங்கில எழுத்துக்களுக்குண்டான ஒலிகளை மாணவராகவே கூற உதவி, அவற்றை முறைப்படுத்திக் கற்பித்து அறியச்செய்து படத்துடனும்  கற்பித்த அனுபவம் பெற்றிருக்கிறேன். இந்த நம்பிக்கையை வைத்து பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஆங்கில எழுத்துக்களுக்கு ஒலிகளைச் சொல்லிக்கொடுக்கப் பணித்தேன். ஆசிரியர்களும் அதை ஏற்றுச் செயல்படுத்தினர்.

தினமும் காலைப்பேரவையில்  இரண்டு  அல்லது  மூன்று  வார்த்தைகளை syllable-ஆக பிரித்து எழுத்துக்களாகக் கூறாமல் ஒலியாகக் கூறப் பயிற்றுவித்தோம். நாட்கள் செல்லச் செல்ல மாணவர்களே syllable-லைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். இப்படியாகப்  பயிற்சி நடந்த போது 100 சதவீதம் வெற்றி என்று கூறமுடியாது. 4,5, வகுப்பு மாணவர்கள் 40 சதவீதம் மற்ற மாணவர்களுக்கு அடிப்படை விஷயம் தெரிய வந்தது என்று உறுதியாகக் கூறுவேன். இவ்வார்த்தைகளை வகுப்பறைப் பதிவேட்டில், ஒவ்வொரு வார்த்தைகளையும் 5 முறை எழுதி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வழக்கம்போல் சில மாணவர்கள் எழுதவில்லை. இவ்வாறாக 700 க்கும் மேற்பட்ட வார்த்தைகளை  மாணவர்கள் அறிந்து கொண்டனர். இது ஆசிரியர்களால் விரும்பத்தக்கதாகவும் அமைந்தது, எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. வரும் கல்வியாண்டில் சிறப்பு திட்டமிடலுடன், பதிவுகளுடன் செய்து விளைவுகளை எதிர்கொள்ள ஆவலுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருக்கிறேன்.

இனிமையாக  மாற்றப்பட்ட கசப்பான சம்பவம்:

எம் பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர் வயதைப் பார்க்காமல் பள்ளியில்  சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருந்துவிட்டனர். அக்குழந்தையின் சகோதரி எனது பள்ளியில் படிக்கிறாள். அவள் மூலம் அவளது தங்கையைப் பள்ளிக்கு அழைத்து வரச் செய்தோம். மற்ற குழந்தைகளைப் போலவே அவளும் பள்ளிக்கு வந்ததும் அழுதாள்; ஆர்ப்பரித்தாள். ஆசிரியர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒரு நாள் பள்ளியின் கழிவறைக்குள் சென்று இரண்டு கதவுகளின் உள்தாழ்ப்பாள்களையும் போட்டுக் கொண்டு பதுங்கிக் கொண்டாள்.

அருகிலிருந்த நான் இதைக் கேட்டு உடனே கழிவறைக்குச் சென்று குழந்தையின் பெயர்சொல்லி அழைத்தேன். பதிலில்லை. மற்ற ஆசிரியரை அழைத்து அழைக்கச் சொன்னேன் அப்போதும் பதிலில்லை. பின்னர்அவரது தந்தையை அழைத்து குழந்தையின் பெயரைச் சொல்லி அழைக்கச் சொன்னேன். தந்தையின் குரல்பேட்டு குழந்தை வெளியே வந்தாள்.

உடனே நான் அவரிடம் குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்று 10 நாட்கள் தங்கவைத்து பிறகு அழைத்து வருமாறு கூறினேன். அப்படியே நடந்தது. 10 நாட்கள் கழிந்தன. குழந்தை என்னை சிரித்த முகத்துடன் சந்தித்து காலை வணக்கம் எனக் கூறினாள். நானும் சிரித்த முகத்துடன் காலை வணக்கம் என்று கூறினேன். இது இன்றும் தொடர்கிறது. பள்ளி வேலைகளை முடித்துவிட்டு செல்லும் போதும் அவள் என்னைச் சந்தித்து, தொட்டு அழைத்து, நன்றி என்று சொல்வாள். நானும் சிரித்த முகத்துடன் அன்பாக ‘டாடா’ என்று கூறுவேன். அவள் எதை எதிர்பார்த்தாள், எதனால் இந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் என்று தெரியவில்லை. அவள் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அன்பினால் தொடப்படும் போது உற்சாகமும் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் பொங்குவது இயல்பன்றோ!

இது மட்டுமா! அவள் படிப்பிலும், விளையாட்டிலும், எழுதுவதிலும் எந்த ஒரு விஷயத்தையும்  ஆர்வமுடனும், நுணுக்கத்துடனும் கவனிப்பதில் அவளுக்கென்று ஒரு சிறப்பிடம் உண்டு. அக் குழந்தை நான் தத்தெடுக்காத எனது மகள். காமாட்சியின் தாய்மொழி வேறு என்பதால் அவள் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒலி வடிவில் கூற இயலாமல் விழியால் என்னை உற்றுநோக்கும் போது, என்னால் அவள் கூற விழைவதை உணரமுடிகிறதே தவிர அவள் மனதை படிக்க எனது அறிவு உதவி செய்யவில்லை.

அவளது அன்புக்கு நானும் ஆசிரியர் சமூகமும் கல்வித்துறையும் ஆற்ற வேண்டியவை எண்ணிலடங்கா. ஆனால் எது எப்படியாக இருந்தாலும் அவளை காமாட்சியாகவே இருக்கவிடும் பட்சத்தில் அவள் இந்த மனித சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் பங்கை அளிப்பார் என்பதை என் உள்ளுணர்வு சொல்கிறது. எனவே என்றும் அன்பு காட்டுங்கள்.  குழந்தைகளை அவர்களாகச் சிந்தித்துச் செயல்பட வையுங்கள்.  படைப்பாற்றலின் கருவூலமாக நமது குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதால் அவற்றிக்கு வேலை கொடுக்கும் விதமாக நமது பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்று எனது பணிவான வேண்டுகோளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

வாழ்க வளமுடன்!!!

 

ஜெனின் ஆரோக்கிய மேரி, தலைமை ஆசிரியர், அரசு ஆரம்பப்பள்ளி, கரிக்கலாம்பாக்கம்.

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management