Towards a just, equitable, humane and sustainable society

கதை கூறல் பயிற்சிப்பட்டறை அனுபவங்கள்

அசிம் பிரேம்ஜி  அறக்கட்டளை சார்பாக,  ஆசிரியர்களுக்கான  ” கதை கூறல் - வழிகாட்டுப்  பயிற்சிப் பட்டறை”  கடந்த 24.11.2018 (சனிக்கிழமை) அன்று பாகூர் மற்றும்  நோணாங்குப்பம் கல்வி வள மையத்தில் நடைப்பெற்றது. கதைசொல்லி திரு.வேல்முருகன் கதை கூறல் பயிற்சிப்பட்டறையை  மிகச் சிறப்பாக நடத்தினர். அதன் மூலம் நான் பெற்ற அனுபவங்கள் மிகவும் பயனுள்ளவை.

கதை முன் அனுபவம்; குழந்தைகள் முதல் பெரியவர் வரை கதை கேட்க விரும்புவர் என்பது நாம் நன்கு அறிந்ததே. கதைகள் மூலமாகவே அனைவருக்கும் புராணங்கள் சொல்லப்பட்டது.  கதைகள் மூலமாக  பக்தியும்  நாட்டுப்பற்றும் வளர்க்கப்பட்டது. கோபம், பொறாமை, மகிழ்ச்சி,பழிவாங்குதல், நன்மை, தீமை என   அனைத்து உணர்ச்சிகளும் கதைகள் மூலமாகவே மக்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பழமொழிகள் உருவானதும் கதைகள் மூலமாகவே. இப்படி கதைகளைப்  பற்றி இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.  இவை அனைத்தும் நாம் அறிந்ததே.

நாம் வளர்ந்த பழைய காலத்திற்குச் சற்றே செல்லலாமா? மாலை நேரம் பள்ளி முடிந்து வந்து ஓடியாடி விளையாடிய பின் 7 மணி ஆனதும் பாட்டி கதை சொல், அம்மா கதை சொல் என்று கொஞ்சி அவர்களின் மடியில் அமர்ந்து கதை கேட்ட அனுபவம், நினைக்கும் பொழுதே சுகமான இதமான மகிழ்ச்சியான உணர்வு சூழ்ந்து ஒருவித பாசம் ஊற்றெடுப்பதை உணர முடிகிறதே.  அந்த அனுபவம் இன்று குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா? குழந்தைகளின் நல்லொழுக்கம் போன்ற பல வழிகளை மேம்படுத்தும் நல்ல கதைகளைக் கூற நமக்கு நேரம் இருக்கிறதா? அதற்கான முயற்சிகளை செய்கிறோமா? கூட்டுக் குடும்பம் என்ற சூழல் இன்றி, பாடப் புத்தகத்தில் மட்டுமே விழிக்கச் செய்யும் நமது போக்குச் சரியானதா ? படிப்பை மட்டுமே அதுவும் புத்தகப் பை பொருளை மட்டுமே திணிக்கும் கொடூர அரக்கர்களாகி விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வகுப்பறையில் கதை; குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி கற்றலில் ஈடுபடுத்தவும் அவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தவும் பாடப் பகுதிகளையே கதையாக மாற்றி கதை மூலம் அவர்கள் எளிமையாக கற்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு வரும் நமக்கு இன்றைய அமர்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கதையின் கதை; நாம் பார்க்காத ஒரு நிகழ்வை ஒருவர் கூறுவதே கதை. இத்தகைய கதை எப்படி உருவாகி இருக்கும்? என்ற கேள்வியை எழுப்பி மிக அழகாக விளக்கினார். ஆதிமனிதன்  வேட்டையாட வெளியில் சென்று திரும்பி வந்து குகையில் இருப்பவர்களிடம் அங்கு நடந்ததை கூறுவதன் மூலம் கதை உருவானது என்று தெரிவித்தார். அதை அவர்கள் பேசியிருக்க மாட்டார்கள் உடல்மொழி மற்றும் சைகையால் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்பதைக் கூறினார்.  அடர்ந்த காட்டு விலங்குகள், பறவைகள்  போன்றவற்றை உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று புரிந்தது.

கதை கூறலின் வழிமுறைகள்; நடுக்காட்டிற்கும் சென்று விட்டோம்.  என்ன நினைப்பீர்கள்  என்ற கேட்டார்.  சிங்கம் வந்தால் என்ன செய்வது? பாம்பு வந்தால் என்ன செய்வது? என்று நினைப்போம், என்று பதில் கூறினோம். ஆம் இத்தகைய பயத்துடன் சென்றால் நம்மால் எதையும் கணிக்க இயலாது. பயத்தை விடுத்துச் சுற்றிப்பார்த்தால் மட்டுமே இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விடுவோம். பறவைகளின் ஒலிகள், மரங்கள் அழகு, சலசலக்கும் நீரோடை என அனைத்தையும் பார்த்து ரசிக்க முடியும். கதையை உணர்வுடன் சேர்த்து உடல் அசைவுடன் வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அது அடுத்தவரைச் சென்று அடையும் எனபதை  செய்து காண்பித்து விளக்கினார்.

உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றின் பெயரைக் கூறச் சொல்ல ஆசிரியர் ‘நிலவு’' என்று கூறினார். பின்னர் வேறு என்ன எல்லாம் உங்களுக்கு நினைவு வரும் என்றார். பதில் சொல்ல  தயங்கினோம். அப்பொழுதுதான் நிலவுடன் வேறு என்ன நினைவு வரும்  என்று  அழுத்தமாக வினா எழுப்ப, அதைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும், நம் கூடவே நிலவும்  வரும், போன்ற பல பதில்கள் வர, இவைகள் தான் கிளைக் கதைகளாக உருவாகின்றன என்பதை விளக்கினார்.

நாடகம்;  கதையில் வருபவர்கள் யார்? என்ற வினா எழுப்ப, கதை மாந்தர்களைப் பற்றிக் கூறினோம். ‘ராஜபாட்டை’ என்பது யாரைக் குறிப்பது என்று கேட்டார். யாருக்கும் புரியவில்லை ஆனால் எனக்கு ராஜபாட்  ரங்கதுரை சினிமா நினைவு வந்தது. பின்னர் நடிகர், நடிகைகள் ராஜபாட்டை என்று அழைப்போம் என்றார். பின்பு கட்டியங்காரன் யார்? என்ற வினா எழுப்பி அனைத்து வேடங்களையும் போடத்தக்கவர் என்றார்.

பின்னர் கோமாளிகளின் உடை அலங்காரம், அவரின் தன்மை, இன்றியமையாமை, அவரின் பணிகள் போன்ற அனைத்தையும் விளக்கிக்கூறிப் புரிய வைத்தார் நாம் சாதாரணமாக நினைக்கும் கோமாளியின் பணி எவ்வளவு கடினம் என்பது மிக நன்கு புரிய வைத்தார் (எனக்குக் கோமாளி வேடம் போட்டு நடித்த சிவாஜியின் நடிப்பு மனக்கண்முன் தோன்றியது)

நாடகத்தைப் பொதுமக்களுக்கு எப்படி எடுத்துச் சென்றனர்? என்ற வினா எழுப்பினார். திருவிழாக்களில் கூத்து, நாடகம் மூலம் என்று பதில் கூறினோம். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களைத் தேடிச்சென்று முன்பெல்லாம் கூத்து நாடகம் போட்டு, மக்களிடம் கொண்டுச் சென்றனர். பின்னர் மேடை அரங்கம் அமைத்து, மக்களை  ஒரு இடத்திற்கு வரவழைத்து நாடகம், கதை கூறப்பட்டது. பின்னர் பெட்டி இராகம் பற்றியும் கூறினார். இது புதியது. கூத்து ஆரம்பிப்பதற்கு முன் ஆர்மோனியப் பெட்டி மூலம் இராகம் இசைத்து ஆரம்பிப்பதே பெட்டி இராகம் என்றார். முன்பெல்லாம் பார்வையாளர்கள் மேலே உயரமாக நின்றும்,  நாடகம் போடுபவர்கள் கீழே நின்றும் நடிப்பர் என்றார்.  பார்வையாளர்கள் குனிந்து பார்ப்பதால் கழுத்து வலி ஏற்படுவதால் பின்னாளில் மேடை உயரமாக அமைக்கப்பட்டது என்றும் கூறினார் இது மிகவும் புதிய தகவலாக இருந்தது .தொடர்ந்து பொம்மலாட்டம் போடப்பட்டது என்று படிப்படியாக நாடகத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை மிக தெளிவாக விளக்கினார்.

அடுத்தாக நாடகத்திற்கு என்ன தேவை? என்ற வினாவை அவர் முன் வைக்க, அரிதாரம் என்று கூறினோம். பின்னர் முத்து, வெள்ளைப் பவுடர் அறிமுகப்படுத்தினார். இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைக் கூறினார். இயற்கையோடு இணைந்து அப்பொருட்களைப் பயன்படுத்தும் பொழுது எவ்வித பாதிப்பும் இல்லை மற்றும் நமது தோலுக்கும் நல்லது என்பதைப் புரிந்து  கொண்டோம். பின்பு அவர்களைப் பயன்படுத்தி ஒரு ஆசிரியருக்கு அரிதாரம் போட்டு விட்டேன். முழு ஒத்துழைப்பு நல்கினார்.  எவ்வித சலிப்பும், வெறுப்பும் கோபமும் இன்றி எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியைக்கு எனது பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரிதாரம் மிக மிக அழகாக இருக்கிறது என்று அனைவரும் என்னைப் பாராட்டினர் மிக்க மகிழ்ச்சி.

காகித உடைகள் செய்தல்; தொடர்ந்து காகிதத்தில் உடைகள் செய்வது குறித்து விளக்கினார். செய்தித்தாள் பயன்படுத்திப் பல தொப்பிகள் செய்வது , அதை எவ்வாறு மேலும் செம்மைப்படுத்துவது, புடவை பரதநாட்டியம் புடவை, அரசர் உடை, அணிகலன்கள் போன்று அனைத்தையும் எவ்வாறு செய்யலாம் என்று விளக்கியது மிகுந்த பயனுள்ளதாக  இருந்தது

தொடர்ந்து ஒலிகளை எப்படி உண்டாக்குவது? என்று கேட்டு அதற்குரிய பொருட்களை எங்களிடம் கொடுத்து முயற்சி செய்து பார்க்கச் சொன்னார் முதலில் குழந்தைகள் ஊதும் ஊதல் என்று மிகச் சாதாரணமாக எண்ணி குழந்தைகள் போல் முயற்சி செய்தோம். பின்னர் அவர் ஊதி காண்பித்தப் பொழுது மலைத்து நின்றேன்.  பறவைகள் ஒன்றோடொன்று பேசுவது, சண்டையிடுவது, கொஞ்சுவது போன்ற பல ஒலிகளை எழுப்பி வியக்க வைத்தார். மேலும் பல பறவைகளின் ஒலி எழுப்பலாம் என்றும் தெரிவித்தார். மற்றொரு ஊதலைக் காண்பித்து 40 ஒலிகளுக்கு மேல் எழுப்பலாம் என்றார்.

ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை திறமைகள் என்று அவருடன் உரையாடியதிலிருந்து அவரின் முயற்சியும், கடின உழைப்பும் கண்முன் தெரிந்தது ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னும் அவரின் உழைப்பும் முயற்சியுமே இருக்கிறது என்பதை நன்றாக உணர்ந்தேன். அவர் செய்வதை என்னால் செய்ய முடியவில்லை ஆனால், என் குழந்தைகள் மிக எளிதில் செய்வர் என்பது புரிந்தது. குழந்தைகளிடம் இத்தகைய எளிய பல பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் கற்பனைத்திறன் விரிவடைந்து, ஆர்வம் பெருகி கற்றல் மிக அருமையாகவும் சிறப்பாகவும் முழுமையாகும் என்று நம்புகின்றேன். குழந்தைகளிடம் கொண்டு சேர்த்து அவர்களின் கற்றல் வெளிப்பாடுகளை தங்களிடம் பகிர்ந்து கொள்வேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

Teacher: சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை, அ.தொ.ப, வடுவகுப்பம்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives