Towards a just, equitable, humane and sustainable society

குழந்தைகளின் நூறு மொழிகள்

சிறப்புக்கூற்று

  1. மாணவர்களிடம் சுற்றுச்சூழலின் தாக்கம் பெருமளவு காணப்பட்டது. இச்சவாலைச் சமாளித்து, சாதனையாக மாற்ற உறுதுணையாக இருந்தது, புத்தக வாசிப்பு மற்றும் கல்வி சார்ந்த படங்களே.
  2. கல்வி வெறும் பாடப்புத்தகம் சார்ந்ததல்ல என்பது நமக்குத் தெரியும், ஆனால் அதை வாழ்வியலோடு இணைக்க, குழந்தைகளின் இயல்புகளோடு சேர்ந்து புரிந்து கொள்ள ஆசிரியர்களாகிய நாம் பழக்கப்படுத்தப்படவில்லை பழகிக்கொள்ளவும் இல்லை.
  3. வளரும் பொழுது மாணவர்களின் மனதில் இருக்கும் கூச்ச பாவம், அன்பு, கள்ளத்தனம், குறும்பு என எல்லா இயல்புகளையும் இன்று நாம் பிரச்சனையாகப் பார்க்கிறோம்.
  4. முத்திரைக்குத்தப்பட்ட அல்லது ஒதுங்கியிருக்கும் மாணவர்களின் வாழ்வில் பங்கெடுப்பதும், அவர்களை நெறிப்படுத்துவதும் ஆசிரியரின் பங்கு மகத்தானது என அறிய உறுதுணையாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாத்மா காந்தி அரசு நடுநிலைப்பள்ளி, நெல்லித்தோப்பில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றேன். கடந்த ஆண்டு 5 –ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தேன். என் வகுப்பில் 15 குழந்தைகள். இந்த ஆண்டு 4 – ம் வகுப்பாசிரியராக இருக்கிறேன். இந்த ஆண்டும் 15 குழந்தைகள். இவர்களின் பெற்றோர்கள் வெவ்வேறு வகையான தினக்கூலி வேலைகளில் ஈடுபடுபவர்கள். எங்கள் பள்ளியில் பயிலுகின்ற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட பொருளாதாரச் சூழ்நிலையைக் கொண்டவர்கள். பெற்றோர் பெரிதாகச் சம்பாதிப்பவர்களோ அல்லது குழந்தைகளைச் சரியான முறையில் பராமரிப்பவர்களோ இல்லை.

முதல் வருடத்தில், இப்பள்ளியில் பணிபுரிதல் என்பது சவாலாகவே இருந்தது. காரணம், மாணவர்களிடம் சுற்றுச்சூழலின் தாக்கம் பெருமளவு காணப்பட்டது.

இச்சவாலைச் சமாளித்து, சாதனையாக மாற்ற உறுதுணையாக இருந்தது, புத்தக வாசிப்பு மற்றும் கல்வி சார்ந்த படங்களே ஆம், கல்வி சார்ந்த புத்தகம், மற்றும் படங்களை வாசித்து, பார்த்து ஒத்தக் கருத்துடைய சக ஆசிரியர் நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் என் தேடல்கள், கேள்விகள், சவால்கள் ஆகியவற்றிற்கு எளிதில் தீர்வு காண முடிந்தது. நாம் அன்றாடம் சந்திக்கும் வகுப்பறை சவால்களுக்குப் பதில் அளிப்பவையாகப் புத்தக வாசிப்பு மற்றும் ஆவணப்படங்கள் இருந்தன என்றால் அது மிகையாகாது.

குழந்தைகளின் நூறு மொழிகள்– ஓர் பார்வை :

பேராசிரியரும் கல்வியாளருமான மாடசாமி அவர்களின் இப்புத்தகம் கல்வியின் நோக்கம், மாணவர்களின் உரிமை, ஆசிரியரின் கடமை எனக் கல்வியின் பல்வேறு பரிமாணங்களையும் பேச முனைந்திருக்கிறது. பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இத்தொகுப்பு, கல்வி தொடர்புடைய கருத்தாக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.

நூலாசிரியர் தமக்கு ஏற்பட்ட பல்வேறு வகுப்பறை அனுபவங்களையும் இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் இந்த நூல்கள் ஆய்வு அடிப்படையிலான தரவுகளையும் நமது வகுப்பறையின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டிருக்கிறது.

கல்வி குறித்து காந்தியின் சிந்தனை, டால்ஸ்டாயின் கொள்கைகள் போன்றவற்றையும் முன் வைக்கிறார் நூலாசிரியர்.

வைட்காலர் ஜாபை நோக்கி, கேரட்டைப் பார்த்து ஓடும் கழுதையின் வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது நமது கல்வி முறை. கேரட்டைக் கவ்விய சில பாக்கியசாலிகளைத் தவிர மற்றவர்களுக்கு என்ன காத்திருக்கிறது? அவர்கள் அவமானமாகக் கருதும் சிறுதொழிலும் வேண்டவே வேண்டாம் எனக் கைவிட்ட விவசாயமும் தான். தவறுகளிலிருந்து பாடம் கற்க மறுத்து, மேன்மேலும் அதே தவறினைச் செய்து, அது சரிதான் எனச்சொல்ல நினைக்கிறதா  நம் கல்விக்கொள்கை? இதுபோல் கட்டுரைகளில் எழுப்பப்படும் பல கேள்விகளும், யோசிக்க வைக்கும் கருத்துக்களும் போகிற போக்கில் விட்டுவிட முடியாமல் மண்டையைக் குடைந்து கொண்டே இருப்பது கல்வி குறித்த நமது கடமையைப்  புரிதலைச் செழுமைப்படுத்துகிறது.

இந்நூலைவாசித்து, கல்வியின் நோக்கம், மாணவர்களின் உரிமை, ஆசிரியரின் கடமை எனக் கல்வியின் பல்வேறு பரிமாணங்களையும் கலந்துரையாடி, சமூகக்கடமைகளை எங்களால் உணர முடிந்தது.

“இருப்பதும் பெறுவதும்“ ஆவணப்படத் திரையிடல் மற்றும் உரையாடல் : -

மாணவர்களிடம் ஈடுபாட்டோடு பணிபுரியும் ஆசிரியர் பற்றிய ஃப்ரென்ச் ஆவணப்படம்.  அவர் நடத்திய அப்பள்ளியில் 4 வயது முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரே வீட்டில் ஒரே ஆசிரியராய் செயல்படும் விதத்தைப் பார்த்து வியக்க முடிந்தது.

ஒரே வயதுக்குட்பட்ட ஒரு வகுப்பு மாணவர்களைத் தனி வகுப்பில் வைத்துக் கையாள்வதைப் பெரும் சவாலாகக் கருதும் நமக்கு அதிசயமாகத்தான் இருக்கும்.

ஆசிரியரின் மாணவர்களுடனான உரையாடல் இப்படத்தின் பலம் எனலாம். ஒவ்வொரு மாணவருடனும், அவர் நடத்தும் உரையாடல் அந்தக் குழந்தைகளின் கல்வியாக, கண்டுபிடிப்பாக, தேடலாக மாறுகிறது.

மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் சேர்ந்து கொள்வதும், ஆசிரியராய் நாம் அவர்களது பண்புகளை வளர்ப்பதில் அவர் ஈடுபடும் விதத்தை நாம் கற்றுக்கொள்ள பேருதவியாக உள்ளது. என்றே கருதுகின்றோம்.

குழந்தைகளை உற்று நோக்குதல், அவர்கள் பேசுவதைக் கவனித்தல், அவர்களையே அதைப் பற்றி யோசிக்கவைத்தல் போன்ற விஷயங்களை நம் வகுப்பறையில் கையாள ஏதுவான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் ஆசிரியர் மற்றும் பெற்றோர் இணக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை உணர முடிந்தது.

கல்வி வெறும் பாடப்புத்தகம் சார்ந்ததல்ல என்பது நமக்குத் தெரியும், ஆனால் அதை வாழ்வியலோடு இணைக்க, குழந்தைகளின் இயல்புகளோடு சேர்ந்து புரிந்துகொள்ள ஆசிரியர்களாகிய நாம் பழக்கப்படுத்தப்படவில்லை பழகிக்கொள்ளவுமில்லை.

இவரது பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் விதம் அற்புதம் .அவர்கள் மேற்கொள்ளும் உரையாடல் நம் பாடம் தொடர்புடையது தான் ஆனால் சிந்திக்க  வைக்காததாக இருந்தது.

படம் முடியும் விதம் அழகானதாகவும், ஆசிரியர் மாணவர்களிடம் விடைபெறும் விதம் மனதை நெகிழவைப்பதாகவும் இருந்தது.

கலந்துரையாடலின் போது பல இடங்களில் நம் வகுப்பறையை ஒப்பிட்டுப் பேசினோம். நம்மால் நமது மாணவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பற்றியும் விவாதித்தோம். இன்னும் கூட கற்றல் கருவிகளற்ற நமது வகுப்பறையும் திட்டமிடப்படாத பாடச்செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

“இருப்பதும் பெறுவதும்” படமாக மட்டுமல்லாமல் மாணவர்களைப் படிக்க உதவும் பாடமாகவும் இருந்தது.

கனவுப்பட்டறை – புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் :

கனவுப்பட்டறை எனும் சிறுகதைத் தொகுப்பு நூலின் நூலாசிரியர் மதி. இந்நூல் ஒரு ஆசிரியரின் அற்புதமான செயல்பாட்டின், அனுபவப்பகிர்வு என்று கூறினால் மிகையாகாது. இன்று குழந்தைகளிடம் பிரச்சனையாகப் பார்க்கப்படும் விஷயங்களுக்குத் தீர்வாக அமைந்த நூல் எனலாம்.

எல்லா மனிதர்களும் தன் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்க நினைக்கும் பருவமாக இளமைப்பருவம் இருக்கும். முரண்பாடுகள் நிறைந்த பருவம், சரி - தப்பு என்று அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் அப்பருவம் பற்றிக் கருத்துக்கள் ஏராளம்.

வளரும்பொழுது மாணவர்களின் மனதில் இருக்கும் கூச்ச சுபாவம், அன்பு, கள்ளத்தனம், குறும்பு, என எல்லா இயல்புகளையும் இன்று நாம் பிரச்சனையாகப் பார்க்கிறோம் .இவற்றை ஒவ்வொன்றாகக் கதைகளில் கையாளுகின்றார் நூலாசிரியர். பள்ளியில் படித்த போது நான் செய்த குறும்பும், அதற்கு எனக்கும் கிடைத்த தண்டனையுமே நினைவுக்கு வந்தது.

தீபாவளி சமயம் – பொட்டுப்பட்டாசு வாங்கி வந்தார் என் தந்தை, அதை மூன்று பாகமாக்கி, என் தந்தை எனக்கு அளித்தார். என் பங்கைப் பாதுகாப்பாக வைக்கும் நோக்கில் அதை என் புத்தகப்பையில் வைத்தேன். அதை மறந்து பள்ளிக்கு எடுத்துச் சென்றேன். புத்தகப்பை பெஞ்சு ஆணியில் மாட்டிக் கிழிந்தது. பொட்டுப்பட்டாசுகள் ஆங்காங்கே தரையில் சிதறின. அப்போது இடைவேளை, நான் வகுப்பறைக்குள் இல்லை. என் வகுப்பு மாணவர்கள், காலால் தேய்க்க பட்டாசு பட்பட், டப், டப், என வெடித்தது.  ஒரு கைதியைப் போல புத்தகப் பையைக் கட்டி அணைத்தபடி அலுவலக அறையில் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தேன்.

என் பெற்றோர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர். உங்கள் மகள் செய்த குற்றம் இதுவெனக் கூறி, அதற்கான தண்டணை 10 நாட்கள் சஸ்பென்சியன் எனத் தீர்ப்பு மட்டும் அளித்து வெளித்தள்ளியது அப்பள்ளி.

இந்நூலைப் படிக்கும் போது, என்னுடைய ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் படித்திருந்திருந்தால் இப்படி ஒரு வடு என் மனதில் ஏற்பட்டு இருக்காதே எனத்தோன்றியது. ஏன் வகுப்பறையில் மாணவர்கள் சிலர் இதேபோல், தீபாவளி சமயங்களில் ரோல்கேப், வத்திப்பெட்டி எடுத்து வருவது வழக்கம். அது எனக்குக் குற்றமாகத் தெரியவில்லை அவர்களின் குழந்தைத்தனமும், ஆசையுமே தெரிந்தது. இருப்பினும் அதை வகுப்பறையில் அனுமதிப்பது ஆபத்து என அறிவேன். அதை நான் வாங்கி வைத்துக் கொண்டு, வீடு செல்லும் போது கொடுத்து அனுப்புவேன், ஒரு சிறு எச்சரிக்கையுடன் – பள்ளிக்கு எடுத்துவரக்கூடாது, வீட்டில் பட்டாசை, பெரியவர்கள் துணையோடு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்று.

சில கதைகள் சிந்திக்க, சிரிக்க, வழிகாட்ட எனப் பல்வேறு பரிமாணங்களில் இருந்தது, மாணவர்களைச் சோம்பேறி, கோவக்காரன், விளையாட்டுப்பிள்ளை, மக்கு போன்ற முத்திரைகளைத் தூக்கியெறிய உதவுவதாய் இப்புத்தகம் அமைந்திருக்கிறது.

குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய அல்லது முத்திரைக்குத்தப்பட்ட அல்லது ஒதுங்கியிருக்கும் மாணவர்களின் வாழ்வில் பங்கெடுப்பதும், அவர்களை நெறிப்படுத்துவதும் ஆசிரியரின் பங்கு மகத்தானது என அறிய உறுதுணையாக உள்ளது. ஆரம்பப்பள்ளியில் ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களை நெறிப்படுத்த வழிகாட்டியாகக் கனவுப்பட்டறை புத்தகம் உள்ளது.

கக்கூஸ்  - ஒரு பார்வை :

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களின் பின்னால் உள்ள மனிதர்கள், அவர்களின் உழைப்புப் பற்றி ஒரு போதும் நாம் நினைத்துப் பார்த்தது இல்லை.

அது போல, தேவையில்லை என்று கழிவுகளாக வெளியேற்றப்படும் ஒவ்வொன்றையும் தூய்மை செய்யும் துப்புரவுப் பணியாளர்களைப் பற்றியும் ஒரு போதும் நினைத்ததே இல்லை.

துப்புரவுப் பணியை அரசு கையாளும் விதம், அவர்கள் தங்கள் பணிகளில் எதிர் நோக்கும் பல்வேறு இடர்கள் ஆகியவற்றை எதார்த்தமாய்க் கூறும் ஆவணப்படமே கக்கூஸ்.

துப்புரவுத்தொழில் செய்யும் மனிதர்கள் தாங்கள் ஒரு நாளில் எத்தனை வகைக்கழிவுகளைக் கையாளுகின்றனர் என்பதையும் அதனால் அவர்கள் உடல் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதும் இந்தப்படத்தைப் பார்க்கையில் நம்மை ஒரு கணம் உறையச்செய்கிறது.

குப்பையை நாம் எப்படியெல்லாம் உருவாக்குகிறோம் என்பதும் எல்லாக்கழிவுகளையும் எந்தப்பாதுகாப்பு உபகரணமும் இன்றி துப்புரவுப்பணியாளர்கள் சுத்தம் செய்வதையும் இப்படம் சித்தரிக்கிறது.

முடிவில்

குழந்தைகளைப் புரிந்து கொள்வதில் புத்தகங்களும் ஆவணப்படங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.

 

-கேசவர்த்தினி, அ.தொ.ப, நெல்லித்தோப்பு

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management