Towards a just, equitable, humane and sustainable society

குழந்தைகளின் பண்பு வளர்ச்சியில் குறும்படங்கள்

8 வயது சிறுமி எட்டு நாட்கள் கோவிலில் அடைத்து வைத்துப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டாள். குற்றவாளிகள் பல்வேறு வயதுடையவர்கள். 9 வயது சிறுமியின் இறந்த உடலில் 86 காயங்கள். வேலைக்குச் சென்று திரும்பிய வளரிளம் பெண் பாலியல் கொடுமைகளுக்குப் பின் கொல்லப்பட்டாள். பொறியியல் பட்டதாரி, பக்கத்து வீட்டுச் சிறுமியைப் பாலியல் கொடுமைகளுக்குப்பின் கொன்றுவிட்டு இயல்பாக இருந்திருக்கிறான். குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். சிறுவர்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.

ஆசிரியர் தாக்கப்படுகிறார். மாணவர் தாக்கப்படுகிறார். பெற்றோர் கொல்லப்படுகின்றனர். பெரியவர்களை மதிப்பதில்லை. இளம் பருவத்திலேயே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. வன்முறை அதிகரித்துள்ளது.

குழந்தைகளின் மனதைப் பாதிக்கும் திரைப்படங்கள்:

மேற்கூறிய பல்வேறு செய்திகள் வெளிவரும் நேரத்தில் பெரும்பாலானோர் சொல்லும் காரணம் ‘இன்றைய தலைமுறை மிகவும் கெட்டுவிட்டது.’ அதற்கான காரணங்களுள் முக்கியமானது  திரைப்படங்கள் என்பது பலரின் கருத்து. இது மறுக்கமுடியாததும் கூட.

திரைப்படம் என்ற தொழில்நுட்பம் கடந்த நூறாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு முன்பும் இத்தகைய குற்றங்கள் இருந்தன. இருந்தாலும் இப்போது குற்றங்கள் அதிகமாகியுள்ளன. இதற்குத் திரைப்படங்களின் பங்கு முக்கியமானதே. திரைப்படங்களில் வன்முறை அதிகரித்துள்ளது. தவறான தகவல்கள் இளம் மனங்களில் பதியவைக்கப்படுகின்றன.

திரைப்படங்களைக் குறை சொன்னாலும் குழந்தைகளைத் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்வது பெரியவர்கள் தான். வீட்டில், தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நம்மால்தான் குழந்தைகள் பார்க்கின்றனர்.

பள்ளிகளில் என்ன நடக்கிறது?

தனியார் பள்ளிகள் மழலைப்பருவத்தில் இருந்தே குழந்தைகளைப் பிழிந்து எடுக்கும் செயல்முறைகளை உடையவை. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

பத்தாம் வகுப்பிலிருந்து அரசுப் பொதுத்தேர்வு என்பதால் குழந்தைகள் மதிப்பெண்களை நோக்கியே ஓட வேண்டிய கட்டாயம். பள்ளி நேரம் தவிர சிறப்பு வகுப்புகள், தனிப்படிப்பு என்று இயந்திரம்போல் இயங்கவேண்டிய சூழல். வளரிளம் பருவத்தில் இத்தகைய அழுத்தங்களால் தான் அவர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை முப்பருவக்கல்வி முறை நடைமுறையில் உள்ளது. செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் வாய்ப்புகள் அதிகம் என்றாலும், பருவ இறுதித்தேர்வே கவனத்தில் கொள்ளப்படுகிறது.

பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடங்களை நடத்துவதிலேயே பள்ளி நாட்கள்  கழிந்துவிடுகின்றன. விளையாட்டு, ஓவியம், இசை, தையல் போன்ற பல்வேறு கல்விசார் செயல்பாடுகளுக்குத் தனியான சிறப்பு  ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளிகளில் கிடையாது. கதை சொல்லுதல், வாசிப்பு போன்ற செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இருந்தாலும் பயிற்சியோடு அத்தகைய செயல்பாடுகள் முடிந்துவிடுகின்றன.

ஓர் ஆண்டில் என்னென்ன பயிற்சிகள் தேவை? அதன் தொடர் விளைவுகளை ஆராய்தல் போன்ற முறையான திட்டமிடல் இல்லாததால் பயிற்சிகள் பெரும்பாலும் சடங்குகளாக ஆகிவிட்டன.

இவற்றையெல்லாம் தாண்டி குழந்தைகளின் எதிர்காலம், பண்பு வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பலரும் பல்வேறு தளங்களில் இயங்கிவருகின்றனர்.

திரைப்படங்கள் மூலம் சாத்தியமாகும் பண்பு வளர்ச்சி :

திரைப்படத்தால்  எளிதில் தீயவற்றைக் கற்றுத்தர முடியும் என்றால், நல்லவற்றையும் பழக்க முடியும் என்றே கருதுகிறேன்.

திரைப்படங்கள் கெட்டவை. அவற்றைப் பார்க்கக்கூடாது என்று சொல்லுவதைவிட எது பார்க்கவேண்டிய படம் என்ற தெளிவை ஏற்படுத்துவதே அவசியம். திரைப்படத்தின் பல்வேறு கூறுகள் குறித்த அறிமுகமும் தேவை.

நீதி என்ற பெயரில் அறிவுரைகளைச் சொல்லுவதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் மறந்துவிடுவோம். நேரடியாக அறிவுரை சொல்லாமல் வகுப்பறையில் குழந்தைகளிடையே பல்வேறு பண்புகள் குறித்த கலந்துரையாடல்களை உருவாக்க வேண்டும். அதற்குக் குறும்படங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

இது குறும்படங்களின் காலம். குறைந்த செலவில் எளிய கருவிகள் மூலம் யாரும் எளிதில் ஒரு குறும்படத்தை உருவாக்கிவிட முடியும். இப்போது பல்வேறு தலைப்புகளில் சிறந்த குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலான படங்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. மிகக் குறைவான நேரத்தில் அழுத்தமாகச் செய்திகளைச் சொல்லும் படங்கள் ஏராளம்.

படத்தைக் குறித்து உரையாடுவதன் முக்கியத்துவம்:

குறும்படத்தைத் திரையிட்டபின் அது குறித்த உரையாடலை உருவாக்குவதே போதுமானது. குழந்தைகள் பல்வேறு செய்திகளை, பார்வைகளை வெளிப்படுத்துவர். உரையாடலை அவ்வப்போது நெறி படுத்துவதை மட்டுமே ஆசிரியர் செய்தால் போதும்.

அவ்வப்போது சூழலுக்கு ஏற்ற படங்களைத் திரையிட்டுக் கலந்துரையாடச் செய்யலாம். பேசுதல், வாசித்தல், கருத்தை வெளிப்படுத்துதல், மறுத்தல் போன்ற பல்வேறு திறன்களை வளர்ப்பதில் குறும்படங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

உதாரணமாக,

'தர்மம்' என்ற குறும்படத்தை எடுத்துக்கொள்வோம். தனியார் பள்ளியில் படிக்கும் சிறுவனை மாறுவேடப் போட்டிக்காகத் தயார் செய்யும் பெற்றோர். புதிதாக போக்குவரத்துக் காவலராக வேலையில் சேரும் இளைஞன். என்ற இருவரைப்பற்றிய கதை. ஏறத்தாழ ஏழு நிமிடங்களே இந்தப்படம்.

படம் முடிந்ததும் உரையாடலைத் தொடங்கலாம்.

படம் எப்படி இருந்துச்சு?

நல்லா இருந்துச்சு சார்.

ம்.சரி. படத்தில் எதெல்லாம் பிடிச்சிருந்தது?

முதலில் குழந்தைகள் பேசத் தயங்கலாம். நமக்குப் பிடித்த காட்சியைச் சொல்லி உரையாடலை வளர்க்கலாம். குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த காட்சிகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்குவார்கள்.

உண்டியலில் காசு போடுறதுக்குப் பதிலா அந்த வயசானவருக்குக் கொடுத்தது,

இங்கிலீஷ்ல சொன்னா மனசுல பதியல. தமிழில் சொன்னது அந்தப் பையனுக்கு அப்படியே ஞாபகம் இருக்கு,

அப்பாவோட பர்சா இருந்தாலும் கேட்காமல் காசு எடுக்கக்கூடாது,

லஞ்சம் வாங்கக் கூடாது,

லஞ்சம் கொடுக்கக் கூடாது

இவற்றைப்போல  அவர்களும் மற்றவர்களும் ரசித்த, கவனித்த காட்சிகளைப் பகிர்ந்துகொண்டாலே போதும். அனைவரும் கட்டாயம் பகிர வேண்டும் என்று வற்புறுத்தாமல் இருப்பதும் முக்கியம். இதுபோன்ற திரையிடல்கள் தொடரும்போது பகிர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.வளரிளம்பருவ மாணவர்களிடையே இதே படம் குறித்த பல்வேறு செயல்பாடுகளை வகுப்பறையில் தொடரமுடியும்.

  • கையூட்டு வாங்குவது கொடுப்பது குறித்த கலந்துரையாடல்.
  • கற்றலில் மொழியின் பங்கு பற்றிய கட்டுரை.
  • இன்றைய சமூகத்தில் முதியவர்களின் நிலை குறித்த சிற்றுரை.

என்பனபோன்று பல்வேறு மொழித்திறன் செயல்பாடுகளை முன்னெடுக்கலாம். பல்வேறு வகையான குறும்படங்களைத் திரையிடல், தொடர்ந்த செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடையே இயல்பான நடத்தை மாற்றங்களை உருவாக்க இயலும்.

பாடம் நடத்தினோம், தேர்வு வைத்தோம், நிறைய மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பன உடனடி விளைவைத் தருவன. எனவேதான் பெரும்பாலானோர் மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.மனிதப் பண்புகளை வளர்க்கும் செயல்பாடுகளில் உடனடி விளைவு கிடைக்காமல் போகலாம். ஆனால் செயல்பாடுகள் தொடரும்போது காலப்போக்கில் மாற்றங்கள் நிகழும். வருங்காலத் தலைமுறையைச் சுய சிந்தனையுடைய தலைமுறையாக மாற்றும் செயல்பாடுகளை முன்னெடுத்தலே ஆசிரியரின் கடமையாகும்.

Teacher: ரெ. சிவா, தமிழாசிரியர், ம. க. மேல்நிலைப்பள்ளி

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives