Towards a just, equitable, humane and sustainable society

மழலையர் பாடல்கள் - பயிற்சிப் பட்டறை அனுபவங்கள்

குழந்தைகளின் மன உணர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்ற மழலையர் பாடல்களைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுடன் இணைந்து கலந்தாலோசித்துப் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு.

முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியைகளுக்கான ”மழலையர் பாடல்கள்  கற்பித்தல் வழிகாட்டுப் பயிற்சிப் பட்டறை”  கடந்த 20.12.2018 (வியாழன்) அன்று மதியம் ஆசிரியர் வள மையத்தில் நடைபெற்றது.

முன் மழலையர் கல்வியின் அடிப்படை நோக்கம் :

பயிற்சி வகுப்பின் தொடக்கத்திலேயே, இந்நிகழ்ச்சியின் நோக்கம் தெளிவாக உணர்த்தப்பட்டது. கல்வி  அறிவுத்தேடலுக்கான பயணம் மட்டுமல்ல எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்திடும் கனவின் தொடக்கமாகும். அதிலும் முன் ஆரம்பப்பள்ளியின் வகுப்பறை, இதற்கான வாய்ப்புகளும் சவால்களும் ஒருங்கே நிறைந்த புதிரான களம்.

மயிலும் இங்கே ஆடுது – நல்ல

மழையும் வரப்போகுது

குயிலும் கூவிப் பாடுது – தன்

குரலால் தாளம் போடுது

பட்டைத் தோகை விரிக்குது

வண்ண மயில் சிலிர்க்குது

பார்க்கப் பார்க்க அழகுதான்

பாலர் நமக்கு விருந்துதான்

முருகன் மட்டும் ஏறவே

முதுகைக் காட்டும் வாகனம்

நமக்கும் கூட ஆசையே

நாமும் ஏறிப் போகனும்.

 

உயரே போகுது பட்டம் உயரே போகுது

காற்றில் உதவி இருப்பதாலே உயரே போகுது

நூலை விட்டால் ராக்கெட் போலே பாய்ந்து செல்லுது

நம் கண்ணைக் கவரும் பலவித நிறத்தில் பட்டம் இருக்குது

பிள்ளை உள்ளம் மகிழ்ச்சி கொள்ள பறந்து செல்லுது

வானைத் தொட்டுத் திரும்பத்தானே விரைந்து செல்லுது

மேலே சென்ற பட்டம் ஒரு நாள் கீழே விழுந்தது

செருக்கு வேண்டாம் என்றொரு பாடம் சொல்லித் தந்தது.

விதையானது, முளைவிட்டு, வேர்ப்பிடித்து, இலை துளிர்த்து, பூ பூத்துக் கனியாகுவதுபோல, ஆர்வமும், அறிவும் சீராக மேலெழுந்து வருவதற்கான ஆயத்தங்கள் அங்கே அரங்கேறுகின்றன.  

அங்கே அமைக்கப்படுகின்ற அடித்தளங்கள்தான்,  குழந்தைகளின் எதிர்காலக் கல்வியின் அடுத்தடுத்த நகர்தலுக்கான மூலங்களாய் அமைகின்றன. காற்றில்லாக் காலத்துக் குளத்தின் மேற்பரப்பு போல தெளிவான  அமைதியான ஆரம்ப நிலை அறிவோடுதான் குழந்தைகள் அங்கு வருகிறார்கள். அதில், அந்த ஆசிரியர் ஏற்படுத்தும் ஊக்கமும் பயிற்சியும் தான், அவர்களைக் கற்றலின் சரியான பாதைக்கு அழைத்துச் செல்வன.

‘அ’ இது ஒரு அத்திப்பழம்

‘ஆ’ என்பவன் ஆசைப்பட்டான்

‘இ’ என்பவன் இதோ என்றான்

‘ஈ’ என்பவன் ஈ என்றான்

‘உ’என்பவன் உனக்கு என்றான்

‘ஊ’ என்பவன் ஊது என்றான்

‘எ’ என்பவன் எனக்கு என்றான்

‘ஏ’ என்பவன் ஏது என்றான்

‘ஐ’ என்பவன் ஐயா என்றான்

‘ஒ’ என்பவன் ஒன்று என்றான்

‘ஓ’ என்பவன் ஓடு என்றான்

‘ஒள’ என்பவன் கவ்விக் கொண்டான்.

 

வளையலோ வளையல்

ஜல் ஜல் வளையல்

கண்ணாடி வளையல்

கண்கவர் வளையல்

சின்னச் சின்ன மக்களே

இங்கே ஓடி வாருங்கள்

சின்னக் கையை நீட்டுங்கள்

வேண்டியதை மாட்டுங்கள்.

கதைகளும் பாடல்களும் குழந்தைகளைக் கவர்வன. குழந்தைகளின் மன உணர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை இவைகளுக்கு உண்டு. இவை முன்மழலை ஆசிரியருக்கு வகுப்பறையில் கிடைக்கம் எல்லையற்ற சுதந்திரத்தின் அளவீடுகளையும், மாணவர்களின் தன்னெழுச்சித் திறனையும் அகலப்படுத்துபவை. அதிலும் பாடல்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கவல்லன. 

மழலையர்ப் பாடல்களின் தனித்துவம் :  

சிறுவயதில் மனதில் பதியும் விஷயங்களுக்கு ஒரு தனி வலிமையுண்டு. நற்பண்பு, நடுவுநிலைமை, மரபு, சூழல், எண்ணெழுத்தறிவு ஆகிய விதிகளுக்கு உட்பட்டு இந்தப்பாடல்கள் அமைக்கப் பெறுகின்றன. அதே வேளை, கற்பனை வளமோ, கவின்மிகு சொல்லாட்சியோ அவைகளுக்குத் தேவையில்லை. கருத்துக்களை எளிதாக்கி,  குறைந்தபட்ச புலமைப் பகட்டுடன்  பாடலாக்கிக் காட்ட வேண்டும். ஒரு தனித்த, சிறிய சூழலைப் பின்னணியாக்கி எளிய சொற்களில் சந்த நயத்துடன் பத்து வரிகளுக்குள் தருவதுதான்  இதன் தனித்த அடையாளம். இவற்றின் பல்வேறு பரிமாணங்களில், மாணவர் மனதில் காட்சியை விரித்தல் ஆசிரியரின் திறமைக்கு உரியது. 

பாடல்களைக் கற்பிப்பதில் ஆசிரியரின் பங்கு :  

பாடலின் மையக் கருத்தைச் சூழலுடன் விளக்கி, அச்சூழலுக்குள் மாணவரை நிறுத்தி, சின்னச்சின்ன கேள்விகளான ஏன், எதற்கு, எதனால், எப்படி, உள்ளிட்டவையால் மாணவரை சிந்தித்து உணரவைத்துப் பிறகு பாடலாக, சொல்லிக் கொடுக்கும் போது மாணவர் இயல்பாக அந்தப் பாடலை உள்வாங்கிக் கொள்ள உதவும். மேலும் அப்பாடலின் உட்கருத்திற்குத் தொடர்புடைய பணிகளை (வரைதல், வண்ணம் தீட்டுதல், போன்ற செயல்திட்டங்கள்) ஒன்றுக்கொன்று இணைத்துக் கூட்டிச் செய்விப்பதனால் இலக்கினை எளிதாய் எட்டலாம். 

சான்றாக ஒரு பாடல் :  

“ ஐப்பசியும் வந்தது அடைமழையும் பெய்தது 

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி வீட்டுக்குள்ளே ஓடிவா 

சும்மா நீயும் மழையிலே துள்ளத்துள்ளி ஓடாதே 

அம்மா வந்தா வைவாரே ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி !’’ 

இப்பாடலை அறிமுகப்படுத்துமுன் சின்னச் சின்னக் கேள்விகளால், ஐப்பசி அடைமழை, அம்மழையில் ஆட விழையும் ஒரு சிறுவனின் ஆவல், அது நிறைவேறாததால் எழுந்த வருத்தம், ஆட்டுக்குட்டியின் மீதான அக்கறை, தாயின் கண்டிப்பிற்குப் பின் மறைந்திருக்கும் அக்கறை மற்றும் வசவுகளின் பின் ஒளிந்திருக்கும் பாசம் ஆகியவற்றை உணர்த்தி, விரிவானதொரு கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின் சந்த நயத்துடன் பாடலைப் பாடிக்காட்டிக் கற்பிக்க வேண்டும். மேலும் உரிய படங்களையும் காட்டுவதனால் கருத்தாழம் மற்றும் புரிதல் விசாலப்படும். 

மேற்குறிப்பட்ட பாடலைப் பயிற்சிப் பட்டறையின் போது ஆசிரியருக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பாடிக்காட்டிக் கற்பித்தனர்.  

மேலும், ஆசிரியர்களை நான்கு குழுவினராக்கி, காலநிலை மற்றும் நற்பண்பு ஆகிய இருதலைப்புகளில் உரிய பாடல்களைத் தொகுக்கச் செய்தனர். பிறகு குழுவினர்க்குத் தாம் தொகுத்தப் பாடல்களைப் பாடிக் காட்ட வாய்ப்பளிக்கப்பட்டது. அவை பற்றிய சிறு ஆலோசனை மற்றும் தருக்க வாதங்களுக்குப் பின், அன்றைய செயல்பாடுகளின் விரைவான ஒரு மீள்பார்வையுடன், அடுத்தப் பயிற்சிக்கான களம் மற்றும் நாள் பற்றிய சிறு அறிவிப்பினைத் தொடர்ந்து நிகழ்வு நிறைவு பெற்றது  

முடிவு: 

“ஒரு வருடப் பலனுக்கு நெல்லை நடுங்கள், 

முப்பது வருடப் பலனுக்கு மரங்களை நடுங்கள், 

நூறாண்டுப் பலனுக்குக் கல்வியைக் கொடுங்கள் !” 

என்று கூறுகிறது ஒரு சீனப்பழமொழி, அதிலும் மழலையர் வகுப்பில் நாம் ஆற்றும் பணிக்கான பலன் வெகுதொலைவில் இருக்கிறது. அதற்கான அஸ்திவாரங்களை அமைப்பதுதான் ஒரு முன் மழலை ஆசிரியரின் பணி. பாடல்கள் இப்பணியைச் செம்மைப்படுத்தும், கற்றலையும் மகிழ்ச்சிக்கு உரியதாக்கும். 

- ஆ. உமாதேவி, பாலசேவிகா, அ.தொ.ப. மீனாட்சிப்பேட்டை

Subject: 
Grade: 
Term: 
Rate: 
0
No votes yet
Perspective Type: 
Teacher as Reflective Practitioner