Towards a just, equitable, humane and sustainable society

கல்விச் செயல்பாடுகளில் பெற்றோர்...

        கடந்த மூன்று ஆண்டுகள் கரையாம்புத்தூரில் உள்ள ஆரம்பப்பள்ளியில் பணியாற்றினேன். இப்பள்ளியில் பலதரப்பட்ட பின்தங்கிய வகுப்பினைச் சார்ந்த குழந்தைகள் படித்தனர். பள்ளியில் பொது சமையலறை இருக்கிறது. ஒரு காலத்தில் 600 குழந்தைகள் இருந்த இப்பள்ளியில் தற்பொழுது 314 குழந்தைகள் படிக்கின்றனர்.

குழந்தைகளின் முழு வளர்ச்சியில் அக்கறையோடு ஈடுபடுவது எனக்கு பிடித்தமானது. நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள், நல்ல நிகழ்வுகள் என தேடிச் செல்லும் வழக்கம் உண்டு. கிரிக்கட் மற்றும் பேட் மிட்டன் விளையாடுவதில் நேரம் செலவழிகிறது. பேபிசாரா என்ற குழந்தைகள் அமைப்பிற்குத் தொடர்ந்து பாடம் சொல்லிக்கொடுப்பதற்கென்று நேரம் ஒதுக்க முடிகிறது. இலக்கியம் மற்றும் சமத்துவத்திற்கான  செயல்பாடுகளில் என்னை இணைத்துக் கொள்வேன். கல்விச்செயல்பாடுகளில் பெற்றோர்களை இணைப்பது என்பது இயல்பான ஒன்றாக இருக்கும்பொழுது பலவிசயங்களைச் சாதிக்கமுடிகிறது. குழந்தைகளுடன் பேசும்பொழுது நிறைய கற்றுக்கொள்கிறேன்.

கல்வி பற்றிய உரையாடல்களுக்கான ஒரு வழியாகவும், பாட நுட்பங்களை புரிந்துகொள்ள வாய்பாகவும், முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளுக்கான உத்திகளைத் தெரிந்து கொள்ளவும் புதுச்சேரி ஆசிரியர் வட்டம் அமைந்திருந்தது.

சென்ற ஆண்டு நான் சிறப்பாக செயல்படுத்தியவை:

தமிழ் கற்பித்தலில் வெவ்வேறு திறன்வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் ஈடு பட முடிந்தது. வாசிப்பு நிலைக்கேற்ப குழந்தைகளைப் பிரித்து உதவும் பொழுது குழந்தைகளிடம் முன்னேற்றத்தைப் பார்க்க முடிந்தது. எஸ் எஸ் ஏ புத்தகங்களைக் கொண்டு தொடர் வாசிப்பு முயற்சியில் ஈடுபட்டேன். நவோதயா தேர்வுக்கான பயிற்சி, பெற்றோர்களைக் கல்விச்செயல்பாடுகளில் இணைத்தல் என சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குழுவாகப் பாடத்திட்டம் தயாரித்தோம் பின் அவற்றை வகுப்பறையில் செய்தேன். திசைமானியில் தொடர்ந்து எழுதுகிறேன். வித விதமான பயிற்சித்தாள்களைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கினேன். கல்வி தொடர்பான சிறந்த புத்தகங்கள், சினிமாக்கள், கதைகளை வாசித்தல் மற்றும் அதுதொடர்பான விவாதங்களில் ஈடுபட முடிந்தது.

 

அனுபவப் பகிர்வு

பெற்றோர்களைக் கல்விச்செயல்பாடுளில் ஈடுபடுத்துதல்

நான் காரைக்காலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது என் வகுப்பறைக்கு இளமதி என்ற பெண் குழந்தை குளிக்காமல், தலை சீவாமல் வருவது வழக்கம். முதல் வகுப்புக் குழந்தை என்பதால் அதைத் திட்டவும், அறிவுரை சொல்லவும் முடியாமல் இருந்தது; ஆனால் தொடர்ந்து அப்படி வரும் ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு தைரியம் தேவைப்படுகிறது. இச்சூழலில் என் எதேச்சையான முடிவின் மூலம் இளமதியின் வீட்டிற்குச் சென்றேன். இளமதிக்கு அம்மா இல்லை அப்பா இல்லை. கண் தெரியாத பாட்டியுடன் வசித்து வந்தாள் அந்தச் சின்னப் பெண். அக்காட்சி மற்றும் அவ்வனுபவம் பள்ளியின் நிகழ்வுகளிலும் குழந்தையின் கற்றலிலும் பெற்றோரின் பங்கு மற்றும் குழந்தையின் பின்னணியினை மனதில் கொள்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது. அதன் பிறகு முடிந்தவரை குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்திப்பது மற்றும் வகுப்பறை விசயங்களிலும் பெற்றோர்களை ஈடுபடுத்துவது என்பதை வழக்கமாகக் கொள்வது என முடிவு செய்து செயல்படத்துவங்கினேன். இவ்வுணர்தல் கல்வியின் நோக்கத்தை மனதில் நிறுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தது. இச்சமூகப் பிண்ணனியிலிருந்து வரும் குழந்தைகள் சமூக மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை அடைவதற்குக் கல்வி உறுதுணையாக இருக்க வேண்டும் என நாம் ஆசைப்படுகிறோம். அப்பொழுது அதை வெறும் புத்தகமும் மதிப்பெண்ணும் செய்து விடமுடியாது. குழந்தையின் சமூகப்பின்னணிக்கேற்பகற்பித்தல் அமைவது அவசியம். பின்னணி என்பதை வெவ்வேறு அம்சங்களாகப் பிரித்துப் பார்த்து செயல்பட வேண்டியுள்ளது.

அவர்களுக்கான பொருளாதாரச் செயல்பாடுகளை அரசு மேற்கொள்கிறது. அதுபோல் தினச் செயல்பாடுகளில் குழந்தையின் பெற்றோர்களை இணைப்பது நம் நோக்கத்தை நோக்கிப் பயணிப்பதாக உணர முடிகிறது. என் அனுபவம் பள்ளி மற்றும் வகுப்பறைச் செயல்பாடுகளில் பெற்றோர்கள் இணையும் பொழுது அதிலும் குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் இணைக்கும்பொழுது கல்விச்செயல்பாடு புதுமையடைகிறது. இருந்த பொழுதும் தனியார் கல்விமுறையில் பெற்றோர்களைப் பயன்படுத்துவது போல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். கரையாம்புத்தூர் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றினேன். எல்லோரும் 600 குழந்தைகள் படித்த பள்ளி இன்று பாதியானது என ஆதங்கப்பட்டுக்கொண்டே இருந்தனர். தனியார் பள்ளியின் வருகை மட்டும் காரணமல்ல பள்ளியின் செயல்பாடுகளும் அதற்குக் காரணமாக இருந்ததை உணர்ந்தேன்.

 

ஆசிரியர்களான நாங்கள் அமர்ந்து அதைப் பற்றி அடிக்கடி பேசுவோம். நன்றாகப் பாடம் நடத்துவது, பள்ளி மேலாண்மையைத் திறம்படச் செய்வது, பெற்றோர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பது என வெவ்வேறு விதமான செயல்பாடுகளில் ஈடுபட்டோம். அதில் என்னுடைய பங்கு சிறப்பாக இருந்ததாக நான் கருதியது பெற்றோர்களுடனான உறவு. பள்ளியை நாங்கள் மாற்றிக்காட்டியதன் விளைவாக நாங்கள் பெற்ற பலன் கடந்த ஆண்டு 109 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை என்பது இக்காலத்தில் எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இதில் 30 மாணவர்களுக்கு மேல் தனியார் பள்ளியிலிருந்து வந்ததவர்கள். அதற்குக் காரணம் நான் மட்டும் என்று சொல்லமுடியாது. ஆசிரியர்களின் வெவ்வேறு செயல்பாடுகள். என் பங்கு பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடனும் உரையாடுதல் மற்றும் தேவைப்படும் சமயங்களில்

வீடுகளுக்குச் செல்லுதல் என்று சொல்லலாம். இதனால் என் வகுப்பில் பாடங்களைச் சுலபமாகக் கற்றுக்கொடுக்க முடிந்தது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் போலவே குழந்தைகளின் பெற்றோரும் முக்கியமானவர்கள். இது பெரிய ஆராய்ச்சியின்மூலம் நான் புரிந்துகொண்டதல்ல. என் அனுபவத்தின் மூலமும், தினசரி செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை உற்றுப் பார்த்துப் புரிந்துகொண்டது தான். தினமும் காலையில் பள்ளிதுவங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளியில் நிற்பது இருப்பது வழக்கம். பள்ளி வாசலில் நின்றுகொண்டு குழந்தைகளுக்கு வணக்கம் சொல்வேன். குழந்தைகளைப் பள்ளியில்விட வரும் பெற்றோர்களுக்கு வணக்கம் சொல்வதும் குழந்தைகள் பற்றி எதையாவது அவர்களுடன் பேசுவதும் எனத் துவங்கினேன். கையில் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு வரும் அம்மாக்கள், சைக்கிளில் கொண்டு வந்து இறக்கும் அப்பாக்கள் என ஏறக்குறைய 25 முதல் 30 பெற்றோர்களைத் தினமும் பார்க்கமுடியும். தினமும் வரும் பெற்றோர்கள், போகும் வழியில் வரும் பெற்றோர், குழந்தையை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வரும் பெற்றோர்கள் என ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

பெற்றோரை  அணுகும் முறை:

நாம் பேசத்துவங்கும்பொழுது அவர்கள் பல விஜயங்களைப் பற்றி நம்மிடம் பேசத்தயாராக இருக்கின்றனர்.குழந்தைகளுக்காக வாழும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தங்களை விட உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதைக் கொள்கையாகவோ, ஆசையாகவோ கொண்டுநம்பியிருப்பது கல்வியைதான். அக்கல்வி ஆசிரியரால்தான் தரமுடியும் என்பதை அறிந்தவர்கள் அவர்கள்... நாம் பேசும்பொழுது அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் சொல்லி மாளாது. “சார் எப்படியாவது எம் புள்ள படிச்சி ஒரு வேலைக்குப் போய்விட்டால், தன் தலை முறைகஷ்டம் தீர்ந்துவிடும்” என்பதுபோல்தான் அவர்கள் பேச்சு இருக்கும். அழுதுகொண்டு, தயங்கியபடி, யோசித்துயோசித்து பக்கத்தில் வந்து...

• சாமி நீங்க நல்லா இருப்பீங்க, கொஞ்சம் அவன புடிச்சி படிக்கமட்டும் வச்சிடுங்க.

• இப்படி ஒரு அடங்காத புள்ளைய பெத்து வச்சிருக்கேங்க, நல்லா அடிச்சி திருத்துங்க.

• இந்த பிள்ளைய வளக்குறதுக்காக மட்டும்தான் உயிரோட இருக்கேன்.

இது போன்று அவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

அம்மா (single mother) மட்டும் வளர்க்கும் பிள்ளைகள் அதிகம் உள்ள இடம் அரசுபள்ளிதான்.

 

பெற்றோர்களிடம் பேசும்பொழுதும் கவனிக்கும்பொழுதும் நமக்கு இயல்பாகவே குழந்தைகள் மீது ஈடுபாடு அதிகரிக்கிறது. இப்பெற்றோர்களின் வாழ்வியல் முறைக்கும் நம் வாழ்வியல் முறைக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளிக்கான காரணங்களை புரிந்து கொள்வது சுலபமானதுதான். அது தலையெழுத்து என்ற வார்த்தையில் அடங்குவதல்ல. அவர்களது இயலாமைக்கு நாமும் ஒரு காரணம் என்பதை உணரும்பொழுது நாம் பேசுவது வேறுமாதிரியிருக்கும்.

• உங்க புள்ளய பத்தி கவலையே படாதீங்க. ஆளா வருவது உறுதி.

• வீட்ல போயி படிச்சிக் காட்ட சொல்லியிருக்கேன். நீங்க பக்கத்துல உக்காந்து படிக்க சொல்லி கேளுங்க.

• புள்ள எழுதும்பொழுது பக்கத்துல உக்காந்து பாருங்க.

இது போன்ற சின்ன சின்ன விஜயங்களை அவர்களிடம் சொல்லும்பொழுது அதை அவர்கள் தவறாமல் செய்வதோடு அதைப்பற்றி எங்களிடமும் கூறுவர்.

இப்படியாக வளர்ந்த அல்லது வளர்க்கப்பட்ட உறவில் பெற்றோர்களின் பங்கு என்பது குறிப்பிடும் படியானதாக மாறுவதை இரண்டு உதாரணங்கள் மூலம் குறிப்பிடலாம் என்று எண்ணுகிறேன்.

பள்ளி மேலாண்மை விஷயங்கள்:

பள்ளி பாதுகாப்பு மற்றும் பள்ளிக்கான வசதிகள் மோசமாக இருந்தது. பள்ளிக்கூட வளாகத்தில் அமர்ந்து மது அருந்துவதும் பள்ளியையொட்டி மலங்கழிப்பதும் பொது மக்களிடம் சர்வ சாதாரணமாக இருந்தது. அதைப்பற்றி பொதுவாகப் பேசுவது என்பது எந்தப் பலனையும் அளிக்கக் கூடியதாக இல்லை. பள்ளியைச் சுற்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டோம். அப்பொழுது அங்குவந்த பெற்றோர்கள் எங்களை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களே தலைமையேற்று மூன்று ஆட்களுடன் வந்து அனைத்தையும் சரி செய்து, பள்ளியை சுற்றி முள்வேலி அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றனர். அதோடு மற்றவர்கள் அச்செயலில் ஈடுபடாதவாறு இவர்களே பொறுப்பேற்று செயல்பட்டனர். வகுப்பறை மற்றும் பாடச்செயல்பாடுகள்:

• வகுப்பறை செயல்பாடுகளில் பெற்றோரை ஈடுபடுத்தும்பொழுது கிடைத்த மாற்றங்களும் மிகப்பெரியது. எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை நவோதயா பள்ளிக்கான தேர்வை எழுத அனுப்புவது என முடிவு செய்து செயல்பட்டேன். அக்குழந்தைகளுக்கு அது முக்கியமான வாய்ப்பு. அது பெற்றோரின் துணையோடு செய்யும்பொழுது உரிய பலனைப் பெற முடிந்தது. படிவங்களைப் பூர்த்தி செய்வது, பாடப்புத்தகங்களைத் தாண்டியப் படிக்க உதவுவது, பள்ளி நேரத்திற்குப் பிறகு சிறப்பு வகுப்புகளை நடத்துவது என ஒவ்வொன்றுக்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியமானதாக இருந்தது. என் வகுப்பில் அனைத்துக் குழந்தைகளையுமே எழுதவைக்க வேண்டும் என்று செயல் பட்டேன். ஏறக்குறைய எல்லா பெற்றோர்களுமே அவரவர்கள் நிலையிலிருந்து உதவியதாகத்தான் சொல்வேன். ஒரு பெற்றோர் தினமும் வந்து அதைப் பார்த்து விட்டுச் செல்வார்.

இன்னொரு பெற்றோர், என்றைக்காவது வருவார் அவ்வளவுதான் வித்தியாசம். முதன்முறையாக என் வகுப்பில் 4 குழந்தைகள் நவோதயா பள்ளிக்குத் தேர்வானார்கள்.

• இன்னொரு சிறிய அனுபவத்தை மட்டும் சொல்ல வேண்டும். எங்கள் பாடத்தில் உணவுத்திருவிழா என்றொரு பாடம். பாடத்தின் பகுதியாக பள்ளியில் அத்திருவிழாவை நடத்தினோம். அதற்கு ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட சத்துள்ள உணவை எடுத்துவர வேண்டும். குழந்தைகள் உணவை எடுத்துவருவதற்குப் பெற்றோரின் ஒத்துழைப்பு என்பது அவசியம். ஒரு வேளை எதாவது ஒரு குழந்தையின் பெற்றோர் ஒத்துழைக்காவிட்டால் அக்குழந்தை தனித்து விடப்படுமே என்ற எண்ணத்தில் நாங்கள் வேறு சில விஜயங்களை யோசித்து வைத்திருந்தோம். எங்கள் எண்ணத்தைப் பொய்யாக்கும்படி அனைத்து குழந்தைகளுமே அதில் சிறப்பாக பங்கேற்றிருந்தனர். பெற்றோரின் ஒத்துழைப்பு என்பதை விட அனைத்து பெற்றோரின் ஒத்துழைப்பு எனக் குறிப்பிடுவது முக்கியமானது. அந்நாளில் ஒரு பெற்றோர் மட்டும் பள்ளியிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கொழுக்கட்டை செய்து எடுத்து வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். என் குழந்தை, எங்கள் தெரு என்ற சமூக அமைப்புள்ள அவ்வூரில் பாகுபாடுகளைக் களைத்தெறியும் நிகழ்வாகவும் இவ்வுணவுத்திருவிழா இருந்தது.

எங்கள் தவற்றை மன்னித்த பெற்றோர்கள்:

இறுதியாக எங்கள் தவறையே மறைக்கத்துணிந்த பெற்றோரின் அனுபவம் ஒன்றைக் கூறிமுடிக்கலாம் என எண்ணுகிறேன். தரனிதரன் என்ற மாணவரை இன்னொரு மாணவர் பென்சிலால் குத்தியதில் கண்ணில் ஆழமாகக் காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி எங்கள் யாருக்கும் தெரியவில்லை. அடுத்தநாள் அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனுடைய சகோதரியிடம் அதைப்பற்றி விசாரித்தோம்.அப்பொழுதுதான் அவ்விஜயம் தெரிய வந்தது. உடனடியாகக் கிளம்பி வீட்டிற்கு சென்றோம். அவர்களைஅப்பொழுதுதான் அரவிந்த் மருத்துவமனைக்குச் சென்று வந்திருந்தனர். “சார் நீங்கள் அக்கறையோடு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதை நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அதைத் தாண்டி அவர்களுக்கு எதாவது நடப்பதை நாங்கள் குற்றமாக எப்படிப் பார்ப்பது?” என்றார். எனக்கு அசிங்கமாக இருந்தபோதும் பெருமையாகவும் இருந்தது. அரசுபள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தன் குழந்தை எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறுவான்/ முன்னேறுவாள் என்ற நம்பிக்கையில்தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆசிரியர்களின் கடமையும் இக்குழந்தைகளின் வாழ்க்கையை கல்வியின் மூலமாக முன்னேற்றுவதுதான். அரசுபள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் நாம் நிறைய எதிர்பார்க்கமுடியாது என்பது உண்மை. அவர்கள் என்ன செய்யமுடியுமோ அதை அவர்கள் எப்படி செய்யமுடியுமோ அதைக் குறிப்பிட்டுப் பெறுவது கடினமாக இருக்காது. அதோடு அவர்கள் அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடத் தயாராகவும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. அதற்கு நாம் கை கொடுக்கத் தயாராக இருக்கும்பொழுது நம் பணி மேன்மை பெறுகிறது.

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 1