Towards a just, equitable, humane and sustainable society

தாகூர்- வாழ்வியல் பாடம்

தாகூர்- வாழ்வியல் பாடம்

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் கருவரை தொடங்கி கல்லரைவரை நடக்கும் உன்னத நிகழ்வே கற்றல். சுவாசிக்க, நடக்க, பாட, பழக, எழுத, அன்பு செய்ய, அழகு படுத்த என அதன் பரிமாணங்கள் விரிவடைகின்றது. கல்வி வாழக்கற்றுக் கொடுக்கிறது என்ற நிலை மாறி பிழைக்கக் கற்றல் என்றாகிவிட்டது. இச்சூழலில் ஆசிரியராக வாழும் நம் ஒவ்வொருவருக்குமான கல்வி சார்ந்த கண்ணோட்டங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது.தனிமனித பார்வையில் கற்றல்.. கற்பித்தலுக்கான வரையறை மாறுபட்டிருந்தாலும் கற்றல் என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒன்றாக இருக்கிறது. கல்விக்கான வரையறைகள் நமக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வரையறைகள் நமக்கு வெவ்வேறுவகையான கல்வி பற்றிய கண்ணோட்டங்களை வழங்குகிறது. அதைப் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள் நிகழ்கின்றன. சில வரையறைகள் தவறென்று தெரிந்தே நாம் கைவிடாமல் வைத்திருக்கிறோம். சில விஷயங்கள் மேன்மையானது என்று தெரிந்தும்கூட அவற்றைப் பொதுமைப் படுத்தாமல் விட்டுவிடுகிறோம். காலத்தின் கட்டாயத்தில் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை உணரும் விதமாகத் தாகூரின் கல்விபற்றிய சிந்தனையும் செயல்பாடும் இருக்கின்றன.

புத்தக அறிமுகம்:

சமூக மாற்றத்தின் அடிப்படைத் தேவையான கல்வியை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது, தாகூர்-வாழ்வியல் பாடம் என்ற புத்தகம். இப்புத்தகத்தை அசிம் ப்ரேம்ஷி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. எளிய ஆங்கிலத்தில் வண்ணப்படங்களோடு தரமான தாள்களில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. தரமான இப்புத்தகத்தை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கான விலையில்லா புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது.

74 பக்கங்களைக் கொண்டுள்ளது இப்புத்தகம். அசிம் ப்ரெம்ஷி பலகலைக்கழகத்தைச் சேர்ந்த

ஜெயஸ்ரீ நாயர் மற்றும் மிஸ்ரா ஆகியோரின் எழுத்தும் பிஷ்வஷித் மணிமாறன் அவர்களால் வரையப் பட்ட ஓவியங்களும் புத்தகத்தைச் செழுமைப்படுதியுள்ளன. எழுத்தா, ஓவியமா, தாகூரின் வாழ்வா என்று பிரித்தறியாதபடி ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. இப்புத்தகம் தாகூர் பற்றிய அனைத்துச் செய்திகளும் என்பதைக் கடந்து ஆசிரியருக்கு வகுப்பறை மற்றும் வகுப்பறை கடந்த கற்றல் - கற்பித்தல் அனுபவங்கள் - கல்வி பற்றிய சிந்தனைகள் முதன்மைப் படுத்தும் விஷயங்களைக் கொண்டுள்ளது.

தாகூர்- வாழ்வியல் பாடம்:

சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்ட மக்களின் சமூக வாழ்வியல் சூழ்நிலையை விளக்குவதில் தொடங்கும் கதை, தாகூரின் சிறுவயது பற்றியத் தகவல்களைத் தருகிறது. சிறுவயதிலிருந்தே தாகூருக்குப் புத்தகக் கல்வியிலும், கல்விமுறையிலும் ஆர்வமின்றிப் போனதால் வகுப்பறையைத் தவிர்த்துவிடுவதை அவரதுவ் வெவ்வேறு வகையான வேடிக்கைச் செயல்கள் எடுத்துக் காட்டுகின்றன. சின்ன வயதில் சன்னல் வழியாகப் பார்த்த சாமானிய மனிதர்களின் வாழ்வும் உழைப்பும் அவருக்கு நிறைய வியப்பையும் வினாக்களையும் ஏற்படுத்துவதைப் புத்தகம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பம்பரம் விடும் சிறுவர்கள், நீர் சுமக்கும் பெண்கள், சாலையோர பிச்சைக்காரர்கள், ஆபத்து அறியாமல் விளையாடும் சிறுவர்கள், கரடி வித்தைக்காட்டும் தாத்தா போன்று சுற்றியிருந்த மனிதர்கள் மேல் இருந்த ஈர்ப்பும் ஆர்வமும் கணிதம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் இல்லாமலே போவது போன்றவற்றை வார்த்தைகளும் ஓவியங்களும் மாறி மாறிக் காட்டுகின்றன. அதோடு மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் புத்தகத்தைக் காட்டிலும் முக்கியப் பாடமாகத் தோன்றியது.

திபேந்திரநாத் தாகூரான தாகூரின் தந்தை அவரைத் தன்னுடன் பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இவர்களது இமயமலைப் பயணம் அவர் வீட்டைக் கடந்து சென்ற முதல் பயணம் மட்டுமல்லாமல் அவரது வாழ்வின் திருப்பு முனையாகவும் அமைந்தது. ரயில் பயணத்தில் வானம், விரைந்து பயணித்த மரங்கள், வின்ணைத் தொடும் மலைகள், மலைகளில் விழும் அருவிகள், ஊர்ந்து செல்லும் நதிகள், நதிகளில் மீன்பிடிக்கும் மனிதர்கள்... என அனைத்தும் ஆயிரமாயிரம் பாடங்கள் கற்பித்தனவாம். இப்பயணங்கள் தாகூருக்கு இயல்பிலேயே இருந்த இயற்கைமீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ததோடு பின் நாளில் அவர் கொண்ட கல்விமுறைக்கு வித்தாகவும் அமைந்தது.

கட்டுப்பாடில்லாத சூழலும் ஊக்குவிப்புமே கற்றலுக்கு பெரும் துணை என்பதை சுட்டிக்காட்டும் நிகழ்வுகளை இங்கு குறிப்பிடலாம். தாகூரின் தந்தை பயணங்களின் போது நடந்துகொண்ட விதங்கள் மற்றும் தாகூர் எழுதிய முதல் கவிதைக்குக் காசோலையை பரிசாகக்கொடுக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். குழந்தைகள் நம் சொற்களைப் பின்பற்றுவதில்லை. நம் செயல்களைப் பார்த்தே கற்கின்றனர். தாகூர் தன் தந்தையைப் பார்த்துப் பழகிய விஷயங்கள் அவரது செயல்களில் வெளிப்படுவதற்குச் சான்றாக அவரது ஆளுகைக்குட்பட்ட ஜமிந்தாரிய இடத்தில் அவரது செயல்பாடுகளைக் குறிப்பிடலாம். அவ்வாளுகைக்குட்பட்ட பகுதி மக்கள் சுயசார்புடன் வாழ வழி செய்ததாகக் குறிப்பிடும் அனுபவம் பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதற்கு மாறாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்ற சீனப் பழமொழியைப் பின்பற்றியதை நினைவு படுத்தியது. மக்கள் தங்கள் வாழ்வைத் தாமே உயர்த்திக்கொள்ள அவர் உறுதுணையாக இருந்துள்ளதை இப்புத்தகம் அழகாகக் குறிப்பிடுகிறது. அதிலும் அவர்களது அடிப்படைத் தேவைகளான கிணறு, சாலைகளை அவர்களே அமைத்துக் கொள்ள துணை நின்றார். இவ்வனுபவத்தை motivation makes many things என்பதற்கு சான்றாகக் கொள்ளலாம்.

முழுமை பெறாத கல்வியான வகுப்பறையை புத்தகங்களைக் கடப்பதற்கு மாற்றுச்செயல்பாடுகளில் இறங்கினார். கல்வியின் உண்மையான நோக்கம் ”இயற்கையையும் கலாச்சாரத்தையும் கற்று அதை அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்வதே” என்று கருதிய தாகூர் இயற்கைச் சூழலில் தாம் கற்க நினைத்த கனவுப் பள்ளியை உருவாக்கினார். இயற்கையேமனதைத் தொடும் என்று நம்பிய தாகூர் மரம் ஏறுவது தொடங்கி மாணவர்கள் இயற்கையோடு இரண்டற கலக்கும் எல்லாச் செயல்பாடுகளுமே கற்றல் என எண்ணினார். கலையும் இயற்கையும் மனிதனை வளப்படுத்தும் என்பது தாகூரின் எண்ணம். அதை அவர் சாந்திநிகேதன் பள்ளியின் மூலம் நனவாக்கினார்.

வகுப்பறைகள் மாணவர்களுக்கு இயற்கையான சூழலில், பாதுகாப்புணர்வோடு, அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும்படியாக இருத்தல் வேண்டும் என விரும்பினார். பழமையான வரையறுக்கப்பட்ட வகுப்பறைச்சூழலை உடைத்தெறிந்ததை அழகாகக் காட்டியுள்ளது. “Darkness never root out darkness only  light .” என்ற மார்ட்டின் லூதர்கிங்-ன் வார்த்தையைப் போலவே, தண்டனைகள் ஒருபோதும் மனிதனை நெறிப்படுத்தாது என்பதில் உறுதியாய் இருந்தார். சுய ஒழுக்கமே சிறந்தது என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். சுயத்தை உருவாக்குவதே கல்வி என நம்பிய தாகூர் தம் பள்ளியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை ஒழுங்கு முறைகளைப் புதிய சிந்தனைகளை தாங்களே உருவாக்கி பின்பற்ற உதவினார். சுயத்தை நிர்வகிக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப் பட்டது.

தாகூரின் பள்ளியில் விவசாயம் கற்பிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்க்கையின், கலாச்சாரத்தின் ஆணிவேரான விவசாயம் அனைவரும் பின்பற்றுவதற்கானதாக இருக்கவேண்டுமென்பது அவரது விருப்பமாக இருந்திருக்கக் கூடும். தாகூரின் வாழ்வும் அனுபவமும் அவர் உருவாக்கிய சாந்திநிகேத்தனும் இன்றைய ஆசிரியர்களுக்கு நல்ல பாடம். இப்புத்தகத்தைப் படித்த ஆசிரியனாகிய நான் கற்றவற்றை கீழே வரிசைப் படுத்தலாம் என எண்ணுகிறேன்.

ஆசிரியனாக நான் கற்றவை:

இன்று கல்வியில் முன்வரிசையிலுள்ள நாடுகள் கலாச்சாரதையும் தாய்மொழியையும் முதன்மைப்படுத்தியுள்ளதை நாம் அறிவோம். அதை நூறாண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியதோடு அதற்கான வரையறகளையும் நமக்கு வழங்கியுள்ளார் தாகூர்.

· கல்வியைத் தீர்மானிப்பது முழு ஆளுமை வளர்ச்சியே அன்றி மதிப்பெண்ணும் வேலைவாய்ப்பும் மட்டுமல்ல.

· புத்தகக் கற்றலைவிட சுய உருவாக்கமே இன்றியமையாதது.

· மாணவர்கள் நமக்கு இணையானவர்கள்; அவர்களுடன் இணைந்து செயல்படுவதே நம் கடமை.

· கட்டுப்பாட்டைக்காட்டிலும் சுதந்திரவெளியில் உணர்ந்து உருவாக்கும் சுய ஒழுக்கமே மேலானது.

· தண்டனைகளைத் தவிர்த்து, பாராட்டும் ஊக்குவிப்பும் வழங்கல்? நன்மை பயக்கும்

· இயல்பான சுதந்திரமான வகுப்பறைச்சூழலை உருவாக்குதல்.

· மாணவர்களின் கருத்தை மதித்து அக்கருத்தினைப் பற்றிய உரையாடல், அதை அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லல்... எனத் தொடருதல்.

· இயற்கை மற்றும் கலைப் பண்பாட்டுவெளியில் மாணவர்கள் சஞ் சரிப்பதற்கான வாய்ப்பையும் ஊக்குவிப்பையும் வழங்குதல்.

· க ல் வியையு ம்  கலையயையும் பிரிக்கமுடியாததாக ஆக்குதல்.

· பயணத்தை மேற்கொள்ளவும் மக்களின் அ னு ப வ த்தை  உற்று நோக்கவும் மாணவர்களுக்குப் பழக்கப்படுத்துதல்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்

வானம் பார்த்து வண்ணம் கற்றேன்!

மலைகளில் ஏறி மன வளம் பெற்றேன்!

பறவைகள் ஒலியில் மொழியை அறிந்தேன்!

பழங்களை எண்ணி கணிதம் கற்றேன்!

விலங்கில் மனிதனில் அன்பை உணர்ந்தேன்!

இவை யாவும் உணர்த்த ஆசான் வேண்டுமோ!

ஆசிரியனான என் ஆளுமைக்கு வலு  சேர்ப்பதாக இருந்தது ”தாகூர்-வாழ்வியல்” பாடபுத்தகம். என் வகுப்பறையைச் சாந்தினிகேத்தனாக உணரும்படியான செயல்பாட்டுஆலோசனையை வழங்கியது என்றால் மிகையாகாது. தமிழில் வர வேண்டும். சாந்திகேத்தனுக்கு நேரில்சென்று வரவேண்டுமென்ற எதிர்கால திட்டத்தையும் இப்புத்தகம் தந்துள்ளது.

Subject: 
EVS

Term: Term 1