Towards a just, equitable, humane and sustainable society

அசத்தலான உணவுத் திருவிழா

0
No votes yet
0
Post a comment

உணவுத் திருவிழா நடத்தப்பட்டதன் நோக்கம் :

ஐந்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் இடம் பெற்றுள்ள உணவுத் திருவிழா என்ற பாடத்தை எழுத்து வடிவத்துடன் நிறுத்திவிடாமல், உணவின் மேன்மையை மாணவர்கள் மனதில் ஆழப்பதிய வைப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

திட்டமிடல் :

மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உணவுத் திருவிழா நடத்த ஆயத்தமாயினர். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே நிகழ்த்த எண்ணிய உணவுத் திருவிழா, மெல்ல மெல்ல விரிவடைந்து இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சி நிரல் :

இடம் : அ.பெ.தொ.பள்ளி, பாகூர்

நாள் 28.11.2018 ( புதன்கிழமை)

நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

பங்கேற்றோர் : மாணவிகள், ஆசிரியர்கள் (திருமதி. சு.அருள்மொழி, திருமதி.பா.மேகலா , திருமதி.வே.சுதா, செல்வி.காயத்திரி கண்ணன்) , தலைமையாசிரியர் (திரு.கோ. கிருஷ்ணமூர்த்தி).

நாம் மனப்பூர்மாகச் செய்யும் எந்த ஒரு செயலும் மறந்துபோவதில்லை. அதனால் மாணவர்கள், தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் துணையோடு நிகழ்த்தும் இந்த உணவுத் திருவிழா பசுமரத்தாணியாய் மனதில் பதிந்துப் போகும் என்பது திண்ணம்.

உணவு வகைகள் உருவான விதம் :

உணவுத் திருவிழா நடத்த ஆயத்தமான சமயம் மாணவர்கள் தயாரித்துக் கொண்டு வர வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்த விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் பெற்றோர்களிடமும் உணவுத் திருவிழா பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் :

இரண்டாம் வகுப்பு மாணவிகள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் வரை பெற்றோரின் உதவியுடன் அவர்கள் தயாரித்துக் கொண்டு வந்திருந்த பாரம்பரிய உணவுகள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைக் கொண்டன.

பலரால் பாராட்டப்பெற்ற உணவு வகைகள் :

கம்பு இட்லி, நவதானிய சுண்டல், பச்சைப்பயிறு உருண்டை, சாமை பிரியாணி, கேழ்வரகு களி,  முருங்கைக் கீரை இட்லி, பொடி மேலும் சுட சுட பல வகை பலகாரங்கள்.

விழா நாளன்று மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மிகுந்த உற்சாகத்துடன் விழாவிற்கு ஆயத்தமாயினர். விழாவின் போது மாணவர்கள் உணவுகள் தயாரிக்கப்பட்ட முறையை விருந்தினர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

உணவுத் திருவிழாவின் மாணவியின் உரை :

ஐந்தாம் வகுப்பு மாணவி ஷர்மிதா தன்னுடைய சுய ஆர்வத்தின் பேரில் தானே முன் வந்து பாரம்பரிய உணவின் பெருமையை பார்வையாளர்களுக்கு எ்டுத்துரைத்தாள். “பாரம்பரிய உணவின் பெருமையை மறந்து துரித உணவை ருசித்துத் துரிதமாக தீமைகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.” பச்சைக் காய்கறிகளும் கீரைவகைகளும் நம்மை நீண்ட ஆயுளோடு வாழ வைக்கும். அன்னையின் கைப்பிடி உணவு ஆழ்கடல் அமிழ்தத்தைவிட பன்மடங்கு உயர்வானது. எனவே, பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்றுவோம்; பழம்பெருமை காப்போம்.” என்று  மாணவி கூறிய விதம் எங்களை பெருமைப்பட வைத்தது மட்டுமின்றி மாணவர்களுக்கு அறிவுரை கூறியதாக இருந்தது.

உணவுத் திருவிழாவும் கல்வியும் : -

வாழ்க்கையோடு இயைந்த கல்வியே வெகுகாலம் அறிவில் நிலைத்திருக்கும் கல்வியாம். வாழையடி வாழையாய் நாம் பின்பற்றி வந்த பாரம்பரிய உணவு முறைகளை பாதியில் பட்டுப்போகவிடாமல் அதை மனதோடு சேர்க்க, பயின்று வரும் பிள்ளைகளுக்கு இந்த உணவுத் திருவிழா அருமையாக வழி வகை செய்கிறது.

உணவுத் திருவிழாவும் சமூகப்பார்வையும் :

உணவுத் திருவிழாவின் போது பார்வையாளர்களாக வந்திருந்த அனைவரும் தாங்கள் மறந்து போன உணவு முறையை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டனர். அந்த நினைவோடு நின்றுவிடாமல் நாவிற்கும் விருந்தளித்தனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சத்தான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கப் பழக்குவோம் என்ற உறுதியையும் ஏற்றனர்.

மாணவர் கருத்து : -

மாணவர்கள் பல்வகை உணவுகளைக் உண்டு மகிழ்ந்ததோடல்லாமல், விருந்தோம்பலையும் கற்றுக் கொண்டதாகக் கூறினர். அன்று அவர்களால் நிகழ்த்தப்பட்ட உணவுத் திருவிழா அவர்கள் நினைவுள்ள வரை நீங்காது நிலைத்திருக்கும் என்றனர்.

மொழிப்பாடத்திலிருந்து வாழ்க்கைப் பாடமாக மாறிய உணவுத்திருவிழா :

நிகழ்ச்சிகள் கல்வியோடு இணைந்திருப்பின் அவை காலம் கடந்து நிலைத்திருக்கும். மொழிப்பாடத்தின் ஒரு அங்கமான உணவுத்திருவிழாவை வாழ்க்கைப் பாடமாக்கிய நிகழ்ச்சி, எம் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்ற  ஒரு திருவிழாவாகும்.    

‘உணவே மருந்து   அதை மறந்தால்

மருந்தே உணவு ‘  என்ற பழமொழிக்கு ஏற்ப

பழம்பெருமை மறந்தால் பட்டுப்போய்விடும் நம் வாழ்வு! பாரம்பரிய உணவே பசுமையான சமுதாய வாழ்வின் உயிர்நாடி என்பதனால் பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்றுவோம்! வருங்கால சமுதாயம் நோய் நொடியின்றிவாழ வழிகோலுவோம்! என்று உறுதியேற்போம்.

Teacher: காயத்திரி கண்ணன், PST, அ.பெ.தொ.பள்ளி, பாகூர்

Grade: 
5

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment