Towards a just, equitable, humane and sustainable society

நாடிப் பயில்வோம்

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 2, பருவம் 2, பாடம் 1

க. சுபாஷினி

பாடலை உணர்த்த பட அட்டைகள்,பாடலைப்பாட ஒலிப் பாடல்!

 

பாட நோக்கம்:

• எளிய வர்ணனைப் பாடல்களைப் பாடவைத்தல்

• படப் புத்தகங்களை வாசித்தல்

“தேனிருக்கும் இடத்தினை” என்று துவங்கும் அழ. வள்ளியப்பாவின் இப்பாடலை ‘ 5E’ முறையைப் பயன்படுத்திப் பாடத்தை நடத்தினேன். பட அட்டை, பாடல் அட்டை, செயல்பாட்டு அட்டை, ஒலிப்பாடல் என வெவ்வேறு விதமான கற்றல் கருவிகளுடன் கற்பித்தலைத் துவங்கினேன். குழந்தைகளுக்குக்  கற்பித்தலின் பொழுது நடைபெறும் உரையாடலை, இளங்குழந்தைகளிடம் முக்கியமானதாகப் பார்க்கிறேன். அதற்கு இணையானது அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பது. நாடிப்பயிலும் பாடலுக்குள் நுழைவோம்.

ஈடுபடுதல்

செயல்பாடு:

“கொழுக்கட்டயே கொழுக்கட்டயே ஏன் வேகல?” என்ற பாடலைப் பாடினோம். சந்தோசமாகப் பாடி முடித்ததும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உச்சரிப்பு ஆகியவற்றை சோதித்தறிந்தேன். புல் என்பதைப் பில் என்று குறிப்பிட்டதைத் திருத்தினேன்.மழை, புல், பால் போன்ற சொற்களைக் கற்றனர்.

ஆராய்தல்:

பாடலை உணர்த்தும் பட அட்டைகளை வரைந்து வைத்திருந்தேன். அவற்றை மாணவர்களிடம்

காட்டி அப்படத்தை வாசிப்பதும் விளக்குவதும் விவாதிப்பதும்தான் இச்செயல்பாடு. இதற்கான பட அட்டைகள் இணைக்கப் பட்டுள்ளன. ஆறு அட்டைகள் தயாரித்திருந்தேன் நான்கை மட்டும் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.

அட்டை-1 (தேனிருக்கும் இடத்தினை... என்ற வரிக்கான பட அட்டை)

மாணவர்கள்:

- தேன்கிட்ட போகுது

- பூச்சி, பூ கிட்ட போகுது

- தேன் குடிக்க போகுது

- இதுபோன்ற பதில்கள் வந்தன. நான் எதிர்பார்த்தபடியே இது நடந்து முடிந்தது.

அட்டை-2(சர்க்கரையை எறும்பு நாடிச்செல்லுதல்)

மாணவர்கள்:

- அரிசிகிட்ட எறும்பு போகுது.

- எறும்பு லட்டு சாப்பிடப் போகுது எனக் கூறினர்.

நமக்குத் தேவைப்படும் சர்க்கரை அல்லது சீனி என்ற பதிலை அவர்கள் குறிப்பிடவே இல்லை.

பின்னர் கீழ்க்காணும் கேள்வியை நான் கேட்டேன்.

- எறும்புக்கு எது ரொம்பப் பிடிக்கும்

இனிப்பு ரொம்பப் பிடிக்கும் என்றனர்.

- எந்த இனிப்பு என்றென்? எல்லா இனிப்பும் என்றனர். (எனக்குத்தேவை "சீனி'அதனால் உரையாடல் தொடர்ந்தது)

- உங்க வீட்டில் எறும்பு எங்கெல்லாம் இருக்கும்?

புற்றில், தோட்டத்தில், மரத்தில் என்றனர்.

- எந்த உணவு சிந்திக்கிடந்தால் எறும்பு வரும்?

சோறு, சர்க்கரை (அப்பாடா என்று இருந்தது. எனக்குத் தேவையான சர்க்கரை என்ற வார்த்தை கிடைத்துவிட்டதால் அடுத்து நகர்ந்தேன். ஆனால் சர்க்கரையை எப்படி வரைவது என்ற யோசனை இருந்துகொண்டே இருந்தது)

அட்டை -3 கிளி சோலையை நோக்கிப் போவது

மாணவர்கள்:

கிளி பழம் சாப்பிடப்போகுது-என்றனர்

அட்டை - 4 (வளமான நாட்டிற்கு மக்கள் செல்வது பற்றியது, சோலை மற்றும் பாலைவனம் வரைந்திருந்தேன்)

- படத்தில் உள்ள இரண்டு இடங்களில் எந்த இடத்தில் உனக்கு வாழப்பிடிக்கும்?

- இக்கேள்விக்கு உடனே வந்த பதில் “பாலைவனத்தில்” என்பதுதான்.

- ஏன்? என்றேன்.

அங்குதான் ஒட்டகத்துல ஏறிப் போகலாம்.

- பாலைவனம் பார்க்க அழகா இருக்கும். குளிரா இருக்கும்.மணலில் குடிசை போட்டு தங்கலாம். என்று அடுக்கிக்கொண்டு சென்றனர். ஹரிஷ், எனக்கு காடுதான் பிடிக்கும். அங்கு ஊஞ்சலாடலாம். ஆற்றில் குளிக்கலாம். பழங்களைப் பறித்துச் சாப்பிடலாம் என்றான். அதிலிருந்து ‘வளம்’ என்ற வார்த்தைக்கு நகர்ந்து விட்டோம். இப்படி நான் தயாரித்த அட்டைப்படங்களைப் படிக்க வைத்து பாடலுக்குள் நுழைய ஏற்பாடு செய்திருந்தேன்.

மாணவர்கள் குறிப்பிட்ட நிகழ்வினை

கரும்பலகையில் வரிசைப்படுத்தினேன்.

1. வண்டு தேன் குடிக்கப் போகுது!

2. கிளி பழம் சாப்பிடப் போகுது!

3. எறும்பு சர்க்கரை சாப்பிடப் போகுது!

4. மக்கள் வளமான காட்டுக்குப் போறாங்க!

5. மாணவர்கள் புத்தகம் படிக்கிறாங்க!

இந்நிகழ்வைத் தொடர்ந்து பாடல் எழுதிய மின்னலட்டைகளை மாணவர்களிடம் கொடுத்தேன்.

விளக்குதல்:

செயல்பாடு -1

பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன். மாணவர்கள் பாடலைக் கேட்டனர். கேட்டுக்கொண்டே மின்னலட்டையிலுள்ள பாடலில் விரலை வைத்து படித்துக்கொண்டே பாட்டைக் கேட்டனர்.

 இரண்டு முறை அப்படி செய்தனர். மூன்றாவது முறை அவர்களை அறியாமாலே அவர்களும் பாடினர். நான்காவது முறை ஒலிநாடாவைப்பற்றிக் கவலைப்படாமல் குரலுயர்த்தி அழகாகப் பாடினர். எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

செயல்பாடு -2

இப்படி நிலையின் தொடர்ச்சியாக சொற்களுக்குப் பொருளறிதலை வடிவமைத்திருந்தேன். மாணவர்களே பொருளறிய சூழலைக் கூறினேன். பொருளறிய வேண்டிய வார்த்தையை உணர்த்தும் சூழலைக் குறிப்பிட வேண்டும். சீனி வார்த்தைக்குப் பொருள் சர்க்கரை.

சீனி- அம்மா தந்த காபியில் இனிப்பு அதிகம்.

சீனி அதிகம் போட்டுவிட்டார்கள்.

சீனி என்றால் என்ன?

பதில்- சீனி = சர்க்கரை.

இதுபோல் ஒவ்வொரு வார்த்தைக்கும் செய்தது

அழகாக இருந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு

அனுபவம் என்றாலும், ஊரும் வார்த்தைக்கு நடந்த

உரையாடலை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஊரும்: எறும்பு ஊரும். ஊரும் என்றால் என்ன? என்றேன்.

எறும்பு கடிச்சா அந்த இடத்துல ஊருமே (அரிப்பு)

அதுவா என்றாள் தர்ஷினி. அதுவல்ல சர்க்கரையை தண்ணியில் போட்டால் ஊருமே அரிசி மாதிரி அது என்றாள் சாரு. வார்த்தைக்கான வெவ்வேறு பதில்களைப்பற்றி பேசினோம். மாணவர்களின் சிந்தனையில் அவர்கள் கண்டடையும் பதில்கள் நமக்கு சவாலானவை தான்.

செயல்பாடு: 3

என் அடுத்த செயல்பாடு ‘ல’, ‘ள’ வேறுபாடுகளு டைய வார்த்தைகளைச் சொல்லித்தருதல்.இவற்றிற்கான அட்டைகளைத் தயாரித்து வைத்திருந்தேன். எலி வலையில் வாழும், நான் வளையல் அணிந்திருக்கிறேன். என்பது போன்ற வாக்கியங்கள் மூலம் சொல்லிக் கொடுத்தேன்.

செயல்பாடு - 4

பாடலை மாணவர்கள் பாடுதல். புத்தகத்தில் எழுத்து சின்னச் சின்னதாக இருக்கும் என்பதால்

இருக்கும். அவற்றை மின்னல் அட்டையாகத் தயாரித்தேன்.

- அதை அவர்களிடம் கொடுத்து, விரலை வைத்து எழுத்துக் கூட்டி வாசிக்கும்படி சொல்லிக்கொடுத்தேன்.

- அடுத்து அப்பாடலைப் பாடிய ஒலிப்பானை இயக்கினேன். முதல் முறை வாசித்துக்கொண்டே

விரலை நகர்த்திக்கொண்டே கேட்டனர்.

- மூன்றாவது முறை கேட்டுக்கொண்டே வாசித்ததோடு தங்களையறியாமலே பாடவும் செய்தனர்.

- நான்காவது முறை நன்றாகப் பாடினர்.

- அடுத்துத் தனியாகவும் குழுவாகவும் பாடலைப் பாடினர்.

விரிவாக்குதல்:

செயல்பாடுகள்:

- எஸ் எஸ் ஏ(S S A) வின் படப்புத்தகங்களைக் கொண்டுவந்து, படத்தைப் பார்த்துக் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.

- நாபிறழ்சிப் பாடல்களைப் பாட வைத்தேன்.

மதிப்பிடுதல்:

ஒவ்வொரு பகுதியிலும் மாணவர்களின் செயல்பாடுகளைக் குறிப்பெடுத்துக்கொண்டே வந்தேன். அதோடு “ல-ள “ வேறுபாடு மற்றும் எதிர்ச் சொல்லுக்கு எனத் தனியாகப் பயிற்சித்தாள் தயாரித்து அவர்கள் செயல்பட வைத்தேன். புத்தகத்திலுள்ள பயிற்சிகளையும் மகிழ்ச்சியாக செய்தனர். இரு குழந்தைகள் சிரமப்பட்டு செய்தனர்.

Grade: 
2

Subject: 
Tamil

Term: Term 1