Towards a just, equitable, humane and sustainable society

பிள்ளைத்தமிழ் புத்தகமும் தமிழ் வகுப்பறையும்

0
No votes yet
0
Post a comment

சிறப்பம்சங்கள்:

  1. பாடப்புத்தக மொழிக்கும் வட்டார பேச்சுவழக்கிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளினால் கற்றலில் உண்டாகும் தொய்வுகளைப் ‘பிள்ளைத்தமிழ்’ புத்தகம் நீக்குகிறது.
  2. படைப்பாற்றல் திறன்  மற்றும் வருணித்து எழுதுதல்.
  3. வாய்மொழியாக பாட வைத்துவிட்டு  பின்னர் எழுத்துக்களையும், சொற்களையும்  கற்பிக்கும்போது மிக எளிமையாகக் கற்கின்றனர்.
  4. கவனஈர்ப்பு என்பது மிகவும் எளிமையாகிறது.
  5. படங்கள், பாடல்கள், கதைகளை பாடப்புத்தக கதைகளுக்குள் கொண்டுவரும்போது கற்றலில் தொய்வு ஏற்படுவதில்லை.

எங்கள் வகுப்பறை பற்றி:

எங்கள் பள்ளி அபிஷேகப்பாக்கத்தில் உள்ளது. பெரும்பாலான குழந்தைகள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருகின்றனர். கல்வி கற்கும் மாணவர்களில் தொண்ணூறு சதவீத மாணவர்கள் முதல் தலைமுறையினர். எங்கள் பள்ளியில்  பெண்குழந்தைகள் அதிகமான கற்கின்றனர். ஆண் குழந்தைகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் சில பிரச்சனைகளோடு இருப்பதாக இருக்கும். அதாவது, கற்றல் குறைபாடு, அதிவேகாமாக செயல்படும் குழந்தைகளாய் இருப்பர். பெற்றோர்களைப் பொறுத்தவரை கல்வியினால் அவர்களது வாழ்வு மாறும் என முழுநம்பிக்கையை கல்வியின் மீது வைத்துள்ள பெற்றோர்கள் அவர்கள். தாங்கள் குழந்தைகள் மீது அக்கறை காட்டவேண்டும் என்று எண்ணினாலும் வேலைப்பளு உடைய பெற்றோர்கள், அரசுப்பணியில் இருக்கும் பெற்றோர்கள், கல்வி கற்றோர், கல்லாதவர் மற்றும் குடிப்பழக்கத்திற்கு ஆளான அப்பாக்கள் என பலதரப்பட்ட பெற்றொர்கள் இருக்கின்றனர்.

தமிழ் வகுப்பறைப் பற்றி:

கடந்தகாலங்களைப்போல் இல்லாமல் தமிழ் வகுப்பில் நடந்துள்ள மாற்றம் என்னவென்றால் தமிழ் முக்கியமான மொழியல்ல என்ற கருத்து நிலவுகிறது. சி.பி.எஸ்.இ கல்விமுறை மற்றும் ஆங்கில வழி கல்வி முறையினை பின்பற்றுவதால்  மாணவர்கள் தமிழைவிட ஆங்கிலத்தை எளிமையாகக் கருதுகின்றனர். ஆங்கிலத்தில் எழுத்துக்கள் குறைவு, தமிழில் எழுத்துக்கள் அதிகம் என்பதால் தமிழ் கடினம் என்று தாங்களாகவே முன் முடிவெடுக்கின்றர். எப்பொழுதும் நாம் கற்பிக்கும் முறையில் வாய்மொழி செயல்பாடுகளைவிட எழுத்துக்களை கற்றல், சொற்கள் மற்றும் சொற்றொடர்களை கற்றல் போன்ற செயல்பாடுகள் அவர்களை தமிழ் கற்றலில் தொய்வடைய செய்கின்றன. மேலும் ஆங்கிலத்தில் எழுதுவது எளிமையாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசுவதும் படிப்பதும் குதிரை கொம்பாகவே உள்ளது. தமிழைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடிவதில்லை. ஏனெனில் அதுதான் பேசும் மொழி ஆனால் கல்வியில் அந்நியமாக்கப்பட்ட மொழி. மற்ற எந்தபாடமும் தமிழில் இல்லாததாலும் அது தேவையா என்ற கேள்வி இருப்பதாலும், கவனமாக இருக்கும் என்னைப்போன்ற ஆசிரியர்களுமே கூட ‘அதுதானே’ என்ற உணர்தலுக்கு வந்துவிட வேண்டியுள்ளது. இந்த என் இரண்டாம் தர மனப்பான்மையைப் போக்க உதவும் நூலாக ‘பிள்ளைத்தமிழ்’ புத்தகம்  இருந்தவற்றிற்குக் காரணமாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிடலாம். மொழி பற்றி எங்கள் பயிற்சி மற்றும் உரையாடல்.

பிள்ளைத்தமிழ் புத்தகம்:

இப்புத்தகம் ஆசிரியர் வட்டத்தில் புத்தகத் திறனாய்வில் அறிமுகமானது. ஆனால் தனமேரி ஆசிரியர் அவர்கள் பைபிள் போல் என்று குறிப்பிட்டதும், சுபாஷினி ஆசிரியர் அவர்கள் “இப்புத்தகத்தோடு வகுப்பறைக்குள் சென்றால் மாணவர்கள் குதூகலமடைவர்”  என்று குறிப்பிட்டதும் தான் என் கவனத்தை ஈர்த்தது. திரும்பத்திரும்ப படிக்கும் புத்தகமாகவும் பாடங்களுக்குத் துணைபுரியும் புத்தகமாகவும் மாறியது.

வ. கீதா மற்றும் கோ. பழனி எழுதிய இப்புத்தகம், தாரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது ஆசிரியர்களுக்கான மொழிக்கல்வி பற்றிய கையேடு. இப்புத்தகத்தின் முதல் பகுதி தமிழ் அறிஞ்சர்களும் ஆசிரியர்களும் கூறியுள்ள கருத்துக்களை முன் வைக்கிறது. இக்கருத்துக்கள் மொழிக்கல்விக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்குமிடையேயான நுட்பமான உறவைப்பற்றியது. குழந்தைகள் பேசும் மொழியில் நம்மை அக்கறைப்படவைக்கிறது. குறிப்பாக ஆரம்பக்கல்வியில் குழந்தைகளிடம் நாம் எதிர்பார்க்கும் கவனித்தல், பேசுதல் திறன் முழுமையாக நடைபெற சுலபமாகவும் ஆழமாகவும் செயல்பட குழந்தைகளின் தினவாழ்க்கையில் பேசப்படும் விஷயங்களை வகுப்பறைக்குள் பயன்படுத்துவது பற்றி உணர்த்துகிறது. நமது தமிழ்பாடபுத்தகத்தில் உள்ள தூயதமிழ் சொற்களுக்கும் வட்டார மற்றும் பேச்சுவழக்கிற்கும் வேறுபாடு இருப்பதால்  மாணவர்கள்  தமிழைப் படிக்கும்போதும்  எழுதும்போதும் கடினமாகக் கருதுகின்றர். பிள்ளைத்தமிழ் புத்தகத்தை கற்றல் பொருளாக பயன்படுத்தும்போது இந்த கடினத்தன்மையை வெகுவாகக் குறைக்கிறது. நான் மூன்றாம் வகுப்பிற்கும் தமிழ் கற்பிக்கிறேன். இந்த குழந்தைகளின் படைப்பாற்றல் திறன்  மற்றும் வருணித்து எழுதுதல்  போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. பிள்ளைத்தமிழ் புத்தகத்தில் உள்ள கதைகளையும் பாடல்களையும் அச்செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும்பொழுது மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது.

இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதி பாடப்பொருளுக்கு இணையான வழக்கு/ நாட்டுப்புற பாடல்களைக் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் தொகுத்தளித்துள்ளது. உதாரணத்திற்கு நான் முதல் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் பந்து பாடல் நடத்தினால் அதில் பலூன் பாடல் இருக்கும். பந்து பாடல் நமக்கு “ப” வரிசைக்கு இருப்பது போல அது இருந்தாலும் அப்பாடல் கதைபோலவும். குழந்தைகள் மறக்க முடியாதது போலவும் அந்நியோன்ய உணர்தலோடும் இருக்கும்.

பாடல் வரிகள்:

“பத்துபைசா விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்;

பலூன் ஒன்று வாங்கினேன் பைய பைய ஊதினேன்;

பைய பைய ஊதவே பந்து போல ஆனது;”

இப்பாடலைப் பந்து, பலூன் போன்ற பொருட்கள் கொடுத்து  வாய்மொழியாக பாட வைத்துவிட்டு  பின்னர் எழுத்துக்களையும், சொற்களையும்  கற்பிக்கும்போது மிக எளிமையாகக் கற்கின்றனர். தமிழ்ப் பாடத்தை  இனிமையாகவும் எளிமையாகவும் உணர்கின்றனர். மேலும் இப்புத்தகத்தில்  மழைப்பாடல்கள், பொம்மைப்பாடல்கள், விலங்குப்பாடல்கள், காய்கறிப்பாடல்கள், கேள்வி பதில் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், ஆடலுடன் கூடிய பாடல்கள் என்ற தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இப்பாடல்கள், நம் ஒவ்வொரு பாடத்திற்கும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இப்பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புறப்பாடல்களே! எனவே பாடல்களை  கற்க மிக எளிமையாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, ‘என் ஆசை’ என்ற பாடலை வாய்மொழியாக கற்பித்துவிட்டு , தங்களது ஆசைகளை இப்பாடல் வரிகளோடு இணைத்து எழுதி வருமாறு  கூறினேன். என்ன ஆச்சரியம்!  எப்பொழுதும் எனக்கும் இவ்வகுப்பிற்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல இருக்கும் மாணவன்கூட மிக ஆர்வமாக பாடல் எழுதி வந்தான். இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களின் மனநிலையையும் அவர்களின் விருப்பு வெறுப்புகளையும்  அறிந்துக்கொள்ள முடிந்தது.

மூன்றாம் பகுதி கதைகளால் ஆனது. நீதிக்கதைகள், தந்திரக்கதைகள், வேடிக்கைக் கதைகள், காரணக் கதைகள், சாகசக் கதைகள்… என்ற தலைப்புகளில் உள்ள இக்கதைகளை நாம் கூறும்பொழுது (பாடத்துடன் இணைத்தும் இணைக்காமலும்) குழந்தைகளிடமிருந்து கவனஈர்ப்பைப் பெற முடிகிறது. கவனஈர்ப்பு என்பது இன்றைய வகுப்புகளின் பெரிய பிரச்சனைகளாக உள்ளது. அதைத்தவிர்க்க நான் இப்பகுதியை பெரும்பாலும் பயன்படுத்தினேன். சில கதைகளை சொல்வது, சில கதைகளை வாசிப்பது என்ற வகையில் பயன்படுத்தினேன். மேலும் இக்கதைகளை மாணவர்களையும் வாசிக்க வைத்தேன். ஆர்வத்துடன் வாசித்தனர்.

நான்காம்  பகுதி நாடகம் – முதல் வகுப்பிற்கு நான் அதிகம் பயன்படுத்தவில்லை. நான் அவ்வப்பொழுது வாசிப்பேன்.

வகுப்பறைக்கு நேரடியாகப் பயன்படாமல் என் மொழிக்கற்பித்தலின் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவும் பகுதி அது. குழந்தைகளுக்குக் குறிப்பாக இளம் குழந்தைகளின் வகுப்பறையை அவர்கள் வாழ்வியல் மொழியோடு இணைக்க தொ.பரமசிவம் மற்றும் மற்றவர்களின் உரையாடல் உதவியது.

  • ‘சூப்பர்’ பெரும்பாலான தமிழரால் பயன்படுத்தப்பட்டால் அதுவும் தமிழ்தான்.
  • பேச்சு மொழிக்கும் பகுதி மொழிக்கும் இலக்கணம் உள்ளது.
  • மக்களின் வாழ்வில் பாடல், கதை எல்லாம் இணைந்து இருக்கிறது. அதை எடுக்கும் பொழுதுதான் குழந்தை மொழிக்குள் தங்கு தடையின்றி பயணிக்கும்”
  • இது போன்ற புரிதலை உருவாக்க இப்புத்தகம் தொடர்ந்து பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அனுபவம்:

என் பாடத்திட்டமிடலில்  மூன்று விஷயங்களை நான் முதன்மைப் படுத்துவதுண்டு. ஒன்று குழந்தைகளின் மொழித்திறன், இன்னொன்று அவர்கள் அதன்மூலம் பெரும் ஆளுமைத் திறன், மூன்றாவது மகிழ்ச்சியான கற்றல். நான் தேர்ந்தெடுக்கும் படங்கள், பாடல்கள், கதைகள், பயிற்சிகள் இவற்றை மையமாக இருக்கும். அதற்கு எனக்குத் துணையாக இருப்பவைகளுள் பாடப்புத்தகமும் பிள்ளைத்தமிழும்.

Author: து. சங்கர தேவி, அ.தொ.ப, அபிஷேகப்பாக்கம்.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment