Towards a just, equitable, humane and sustainable society

வகுப்பறை விளையாட்டுகள்

0
No votes yet
0
Post a comment
  • மாணவர்களின் கற்றல் பெரும்பாலும் விளையாட்டின் வழியே இருக்கின்றன. எனவே, ஆசிரியர் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் கணிதத்திறன்களை மேம்படுத்த வியாபார விளையாட்டை வடிவமைத்துள்ளார். கணிதத் திறன்களோடு வேறு சில வாழ்க்கைத் திறன்களும் மேம்பட இவ்விளையாட்டு உதவியாக இருக்கிறது.
  • அவர்கள் இயல்பு வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு மூலம் கற்றல் வெளிப்பாட்டை வெளிப்படுத்திய அனுபவம்.
  • மாணவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கும் போது அவர்களின் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துகின்றனர். உதாரணமாக, எந்தப் பொருளை விற்பது, லாபத்தை ஈட்டுவது, கணக்கு தெரியவில்லை என்றால் நண்பர்களை நாடுவது…
  • 'மாணவர்களை உண்மையான வாழ்வியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் போது அவர்களின் கற்றல் ஆழமாக இருக்கிறது' என்பதற்கான உதாரணங்கள் பல இக்கட்டுரையில் இருக்கின்றன.

நோக்கமும் பின்னணியும்

இந்த வருடம் முழுவதும் பச்சைப்பசேல் என இளஞ்செடிகளாக இருக்கும்  முதலாம் வகுப்பு மாணவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘எவ்வாறு முதல் வகுப்பபைப் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையாக மாற்றப்போகிறேன்?!’ என்ற மேலோங்கிய எண்ணம் இன்றும் என் மனதில் மாறாமல் அப்படியே உள்ளது.

முதலாம் வகுப்புக் குழந்தைகளுடன் சேர்ந்து பயணிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். முதல் இரண்டு மாதம் எனக்குத் தூக்கமே இல்லை. ‘நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன்?’ எனக்கு இவ்வளவு கோபமும் அழுகையும் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?’ என்றெல்லாம் எண்ணிக் குழம்பித் தவித்தேன். பல்வேறு கற்பித்தல் முறைகளையும் உத்திகளையும் பயன்படுத்தினேன். இருப்பினும் எனக்கு எதுவும் திருப்திகரமானதாகத் தோன்றவில்லை.

ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். வகுப்பறையில் நேரடியான அனுபவங்களுடன் கூடிய உயிரோட்டமுள்ள சூழலை ஏற்படுத்தி குழந்தைகளுடன் உரையாடத் தொடங்கினேன்.

செயல்பாடு

பிற ஆசிரியர்கள் துணையுடன் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்தேன். கடைக்காரர், நுகர்வோர் என இரு குழுக்களாகப் பிரிந்திருந்த மாணவர்களைப் பல்வேறு பொருட்களை வாங்கவைத்தும் விற்க வைத்தும் வியாபாரம் குறித்த ஒரு நேரடியான அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கினேன். இந்த அனுபவத்தை மேருகேற்றும் வகையில் சென்ற வருடம் எங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் நடத்திய   ‘பல்பொருள் அங்காடித் திருவிழா’ மிகவும் உயிரோட்டமுள்ளதாக அமைந்தது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பொருட்களை வாங்கிப் பயனடைந்தனர்.

அதே ‘பல்பொருள் அங்காடித் திருவிழாவை’ என்னுடைய முதலாம் வகுப்பில் பயன்படுத்தினேன். மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பொருட்களை வாங்கியும் விற்றும் வியாபார விளையாட்டில் ஈடுபட்டனர். அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாகப் ‘பல்பொருள் அங்காடித் திருவிழா’ அமைந்திருந்தது.

பள்ளியைத் தயார் செய்தோம்; போஸ்டர்களை ஒட்டினோம்; அவரவருக்கான இடத்தை ஒதுக்கினோம்; தேவையான பொருட்களை வாங்கி வைத்தோம். திருவிழாவன்று என் குட்டிகள் அவரவர் கடைக்குத் தேவையான பொருட்களோடு வந்து, வியாபாரம் செய்ய ஏதுவான வகையில் பொருட்களை அடுக்கி வைத்தனர்.

  

ஆசிரியர்களும் மற்ற வகுப்பு மாணவர்களும் கடைகளுக்கு வந்து வாங்கத் தொடங்கினர். அவர்களுடன் என் குழந்தைகள் பேரம் பேசிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

சரியான பணத்தை வாங்கிக் கொண்டனர். மீதி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நோட்டில் எழுதி, கணக்கிட்டுக் கொடுத்தனர்.

     

ஒரு மாணவன் என்னிடம் ‘’மிஸ், மிஸ் நேத்து எங்க அம்மா கூட கடைக்குப் போனேன்.   ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினேன். வாங்கியவுடன் விலையைச் சரிபார்த்தேன் ரூ.10 அதிக பட்ச விலை என இருந்தது. ஆனால் கடைக்காரர் ரூ. 12 என்னிடம் வாங்கியது எனக்கு அதிர்ச்சியாக இருந்ததது. விலை எவ்வளவு? என்று நான் கேட்டவுடன் கடைக்காரர் 2 ரூபாயைத் திருப்பித்தந்தார். மேலும், எனக்குப் பிடித்த purple colour பிஸ்கட் பாக்கெட் வேண்டுமென்று கேட்டேன். கடைக்காரர் ‘’உனக்கு purple colour-லாம் தெரியுமா?  Purple ஸ்பெல்லிங் சொல்லு உனக்கு இலவசமாகவே நான் பிஸ்கட் தரேன், "என்று சொன்னார். நான் எனக்கு எல்லா கலர் ஸ்பெல்லிங்கும் தெரியும்னு சொல்லி, purple ஸ்பெல்லிங் வேகமாகச் சொன்னேன். அவர் என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துப் பாராட்டினார்”  என்று கூறினான். அவன் கூறியதைக் கேட்க எனக்கு வியப்பாக இருந்தது.

பாடல்கள், கதைகள் மூலமாக பல்வேறு வண்ணங்களை அறிமுகப்படுத்தி எந்த ஒரு பொருளிலும் உள்ள வண்ணத்தின் பெயரைச் சொல்வதற்கான அறிவையும் திறனையும் மாணவர்களுக்கு ஏற்கனவே அளித்திருந்தோம், அதனால் purple கலர் ஸ்பெல்லிங்கை எளிதாகச் சொன்னான் என்பதைப் புரிந்துகொண்டேன்.   மேலும் வகுப்பறை வியாபார விளையாட்டின் மூலம்தான் விலையைச் சரிபார்க்கக் கற்றுக் கொண்டான் என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். மேலும் Money என்ற பாடம் நடத்தும்பொழுது என் வகுப்பறையை ஒரு கடையாகவே மாற்றி நடத்தியது பாடநோக்கங்களை எளிதாக அடைய உதவியது.

என் பள்ளிவளாகம் மரங்கள் நிறைந்து பச்சைப்பசேல் என இயற்கை எழிலோடு காட்சியளிக்கும். நான் வகுப்பறையில் பாடம் நடத்தியதை விட மரத்தடியில் இயற்கை எழில் சூழ பாடம் நடத்தியதே அதிகம்.

குயவன் எவ்வாறு களிமண்ணில் தகுந்த அளவில் தண்ணீர் ஊற்றி, குழைத்து , சரியாகப் பக்குவப்படுத்தி அழகான ஒரு மண்பானை வடிப்பதைப் போல குழந்தைகளுக்கும் சரியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் சிறப்பாகக் கற்று எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்குவர்.

கற்றல் விளைவுகள்

இம்மாதிரியான முறையில்  கற்பித்ததன் மூலம், பொருட்களின் மதிப்பையும் வேறுபாடுகளையும் அறிந்து கொண்டனர். வியாபார நுணுக்கங்களை அறிந்து கொண்டனர். பெரும்பாலான குழந்தைகள் பல விஷயங்களை ஒப்பிட்டு உரையாடும் அளவிற்குத் திறன் பெற்றனர். மாணவர்கள் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமும் அவற்றிற்குப் பதில் அளிக்கும் விதமும் வியத்தகு அளவில் முன்னேற்றம் அடைந்திருந்தன. மகிழ்ச்சி, ஈடுபாடு, பேச்சுத் திறன், பயமின்மை, துணிச்சல், பேரம் பேசுதல், மற்றவரைச் சம்மதிக்க வைத்தல், பொறுப்புணர்வு, பிளாஸ்டிக்கின் தீமை, ஊட்டச்சத்து தொடர்பான அறிவு (உணவுத் திருவிழா), மாணவர்களிடையே ஒருங்கிணைப்பு, ஒருவருக்கொருவர் ஆதரவு, கூட்டல் (ஆயிரங்களில்), கழித்தல், பணம் பற்றிய அறிவு, போன்ற பல்வேறு வகையான திறன்களை வியாபார விளையாட்டின் மூலம் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

சவால்கள்

9 குழந்தைகள், கழித்தல் தெரியாததால் மீதி பணத்தைக் கணக்கிட்டு வாங்கச் சிரமப்பட்டனர். அதற்காக அவர்கள் மற்ற குழந்தைகளிடமிருந்து உதவியைப் பெற்றது சிறப்பாகவே இருந்தது.

Author: கெஜலட்சுமி, அ.தொ.ப., கரிக்கலாம்பாக்கம்

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment